நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்

நெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் ரசாயன இடுபொருள்களின் செலவுகள் அவற்றால் மண்ணிற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மாற்று முறை விவசாயத்திற்கு குறிப்பாக, இயற்கை விவசாயத்திற்கு வழிகோலாக அமைகிறது.

மேலும், ஊட்டச்சத்து மேலாண்மையில் ரசாயன உரங்களின் செலவைக் குறைத்து அதற்கு இணையான சத்துக்களை வழங்குவதில் பெரிதும் துணை நிற்பவை உயிர் உரங்களே.

அத்தகைய உயிர் உரங்கள், நெல் பயிர் சாகுபடியில் ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து ஈரோடு மாவட்ட மத்திய வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் (மைராடா) ச.சரவணகுமார் கூறியது:

  • நெல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுபவை தழை, மணிச் சத்துக்களாகும்.
  • அத்தகைய இரண்டு சத்துக்களும் இயற்கையாகவே வளி மண்டலம், மண்ணில் பயிருக்கு எட்டா நிலையில் உள்ளன. இதுபோன்ற சத்தினை கூட்டு, தனித்து வாழும் பாக்டீரியாக்கள் கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.
  • நெல் வயல்களில் தழை, சாம்பல் சத்தை நிலை நிறுத்துவதில் அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா, அசோலா போன்றவை பெரும்பங்காற்றுகின்றன.

தழைச்சத்து வழங்கும் நுண்ணுயிர்கள்:

  • பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் தழைச் சத்தை நிலை நிறுத்தினாலும் அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பது அசோஸ்பைரில்லம்.
  • இதை ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்படும் விதையுடன் 600 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தும் அல்லது நாற்றுகளை பறித்து, அதன் வேர்களை 1,000 கிராம் அசோஸ்பைரில்லத்தில் நனைத்து நடுவதாலும் தழைச்சத்து உரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
  • இவை இரண்டையும் பின்பற்ற இயலாதபட்சத்தில் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்தை 25 கிலோ மக்கிய குப்பையுடன் கலந்து நடவிற்கு முன் வயலில் இடலாம்.
  • வேர்ப் பகுதியில் கூட்டு வாழ்க்கை நடத்தி தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு வழங்குகின்றன.
  • மேலும், பாசி வகையைச் சேர்ந்த நீலப்பச்சைப் பாசி, பெரணி வகையைச் சேர்ந்த அசோலாவும் நெல் வயல்களில் தழைச்சத்து வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

மணிச்சத்து வழங்கும் நுண்ணுயிர்கள்:

  • மண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிருக்கு வழங்கும் பாஸ்போ பாக்டீரியாவானது வளர்ச்சி ஊக்கிகளையும் சுரக்கின்றது.
  • இதனால், மணிச்சத்தின் தேவையும் குறைந்து பயிர் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுகிறது. நெல் பயிரின் வேர்களில் நுழைந்து, வேரிழைகளை உண்டாக்கி, தொலைவிலுள்ள மணிச்சத்தை ஈர்த்து வழங்குவதில் மைக்கோரைஸா முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • எனவே, அசோஸ்பைரில்லத்தைப் போலவே இந்த நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்தி (விதை நேர்த்தி, நிலத்தில் இடுதல்) மணிச்சத்திற்கான ரசாயன இடுபொருள்களின் தேவையைக் குறைக்கலாம்.
  • ஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள நெல் வயலில் தனித்து வாழும் பாக்டீரியாவான அசட்டோபேக்டர் 15 கிலோவும், நீலப்பச்சைப் பாசி 40 கிலோவும், இணை வாழ்க்கை நடத்தும் பாக்டீரியாவான அசோஸ்பைரில்லம் 35 கிலோ தழைச்சத்தையும் நிலை நிறுத்துகின்றன.
  • கூட்டு வாழ்க்கை நடத்தும் அசோலாவானது 40 முதல் 60 கிலோ தழைச்சத்தையும், பசுந்தாள் உரப் பயிர்கள் 80 கிலோ தழைச்சத்தையும் பயிருக்கு வழங்குகின்றன. மேலும், இத்தகைய நுண்ணுயிர்கள் வளர் ஊக்கிகளையும் சுரப்பதால் பயிர் செழுமையாக வளர உதவுகின்றன.

மேலும், மண்ணிலுள்ள அங்ககச் சத்துடன் நுண்ணுயிர்கள் சேர்ந்து வாழ்வதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், வளம் குன்றா நெல் சாகுபடியைப் பெற்று பயனடையலாம் என்றார்.

நன்றி:தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *