நேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு!

52 ஏக்கரில் அற்புத பண்ணையம்
ராமநாதபுரம் மாவட்டம் சீமைக்கருவேல் முட்கள் சூழ்ந்த வறட்சி மாவட்டம் விவசாயத்திற்கு லாயக்கில்லை என்று சொல்லப்பட்டாலும் நம்பிக்கையோடு வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் அங்கு உண்டு. அவர்களில் ஒருவர்தான் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘தரணி’ முருகேசன். நெல் விவசாயத்தோடு நாட்டுக்கோழி, ஆடு, மீன் என கால்நடைகளையும் இணைத்து, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, சிறப்பாக பண்ணையம் செய்து வருகிறார் முருகேசன்.

ராமநாதபுரம் – பரமக்குடி சாலையில் 14-வது கிலோ மீட்டரில் உள்ள எட்டிவயல் எனும் கிராமத்தில் இருக்கிறது, இவரது பண்ணை. சுற்றிலும் சீமைக்கருவேல் சூழ்ந்திருக்க, நடுவில் பசுமைத் தீவு போல காட்சியளிக்கிறது முருகேசனின் ‘தரணி இயற்கை விவசாயப் பண்ணை’.

இவரது மாவட்டத்தின் சாபக்கேடு சீமைக் கருவேல். இங்கு விவசயாம் செய்ய முடியாது என்று பலபேர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் முன்னோர் செய்த தொழிலைவிட மனமில்லாமல் முழு ஈடுபாட்டோடு கடுமையாக உழைத்து, மற்ற தொழிலிலும் கிடைக்கும் வருமானம் போல் விவசாயத்திலும் எடுக்கலாம் என்கிற உண்மையை உணர்ந்து ஒரு மாதிரி பண்ணை உருவாக்க நினைத்து மூன்று வருடம் உழைத்து ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றியிருப்பதாக கூறுகிறார் முருகேசன். இப்போது வருடத்திற்கு 30 லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறுகிறார்.

80 சதவிகித தேவை, இங்கேயே பூர்த்தியாகிறது.
இந்த இடத்தில் 52 ஏக்கர் நிலம் இருக்கிறது. 2011-ம் வருடம் தான் இவர் விவசாயத்தை ஆரம்பித்தார். அப்போது முழுக்க சீமைக்கருவேல் முள் மண்டிக் கிடந்தது. ஆறுமாதம் கஷ்டப்பட்டு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்து சீமைக்கருவேல் மரங்களை வேரோடு பிடுங்கி நிலத்தை சரிசெய்துள்ளார். சோதனை முயற்சியாக இரண்டரை ஏக்கரில் குதிரைவாலி, ஐந்து ஏக்கரில் நெல் விதைத்தார். பெரிதாக மகசூல் இல்லை. அடுத்து நிலத்தை சுற்றி வேலியமைத்து 36 ஏக்கரில் புழுதி விதைப்பாக ஜோதி மட்டை, ஏ.டீ.டி – 45 நெல் ரகங்களை மானாவாரியாக விதைத்தார். அந்த வருடம் நல்ல மகசூல் கிடைத்தது. உடனே நம்பிக்கையோடு இரண்டு இடத்தில் போர்வெல் போட்டார். ஒற்றை நடவில் பாரம்பரிய இரகங்களை விதைத்து நல்ல மகசூல் எடுத்தார். அப்போதுதான் இயற்கை விவசாய ஆலோசகர் ஏகாம்பரம் அறிமுகம் கிடைத்தது. அவரின் ஆலோசனைப்படி இயற்கை இடுபொருள் தயாரிப்பிற்காக நாட்டு மாடுகளை வாங்கினார். இப்போது அவற்றின் சாணம், கோமியத்தை வைத்துதான் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் மாதிரியான இடுபொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்தப் பண்ணைக்குத் தேவையான இடுபொருட்கள் 80 சதவிகிதம் இங்கு கிடைக்கும் பொருட்களை வைத்தே கிடைக்கிறது. வெளியே இருந்து எதையும் பெரிதாக வாங்குதில்லை என்றகிறார் முருகேசன்.

பாசனத்திற்கு பயன்படும் பண்ணைக்குட்டை
மாடுகளைத் தொடர்ந்து 50 உள்ளூர் ரக ஆடுகளை வளர்க்கிறார். மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போக தனியாக சம்பள ஆள் இருக்கிறார்கள். இந்த மூன்று வருடத்தில் ஆடுகள் பெருகி, இப்போது கிட்டத்தட்ட 200 ஆடுகள் இருக்கிறது. இரவு நேரங்களில் ஆடுகளை கிடை அடைப்பார்கள். இப்படி சுழற்சி முறையில் எல்லா இடங்களிலும் பட்டி அடைத்திருப்பதால் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக வளமாகி வருகிறது. நூறு நாட்டுக் கோழிகளுக்கு மேல் பண்ணையில் இருக்கிறது.  கோழிகள், இயற்கையாக மேய்ச்சல் முறையில் தான் வளருகிறது. வான்கோழி, முயல், கினியா கோழி என்று மூன்றிலும் ஒவ்வொரு ஜோடி இருக்கிறது. நான்கு பண்ணை குட்டை வைத்திருக்கிறார். அதில் பணியாளர் குடியிருப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு குட்டை 20 அடி ஆழம். அதில் முழுக்க தண்ணீர் நிற்கிறது. அதில் மோட்டர் பொருத்தி பாசனம் செய்கிறார். அந்த குட்டையில் மட்டும் தற்போது மீன் வளர்த்துக்கொண்டிருக்கிறார். மற்ற குளங்களில் டிசம்பர் 10-ம் தேதிக்கு மேல் மீன் குஞ்சுகளை விடப்போவதாக முருகேசன் கூறினார்.

நடவு, புழுதி இரண்டு முறையிலும் நெல்
இந்த வருடம் நல்ல மழை கிடைத்ததால் புழுதி விதைப்பாகவும், நடவு முறையிலும் நெல் நடவு செய்திருக்கிறார். நடவு முறையில் 15 ஏக்கரில் ஜோதி மட்டை ரகம், 5 ஏக்கரில் அம்மை – 16 ரகம் இது இரண்டும் இருக்கிறது. புழுதி விதைப்பாக ஒரு ஏக்கரில் பூங்கார், இரண்டு ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா, எட்டு ஏக்கரில் ஜோதி மட்டை, ஐந்து ஏக்கரில் அம்பை – 16 ரகங்களும் சாகுபடி செய்திருக்கிறார். எட்டு ஏக்கரில் குதிரைவாலி, கேழ்வரகு என்று சிறுதானியங்களும் இருக்கிறது. இரண்டரை ஏக்கரில் மேட்டுப்பாத்தி முறையில் கீரை போட்டு அறுவடை செய்திருக்கிறார். காய்கறிகளும் அறுவடை முடிந்துவிட்டது. அடுத்த சாகுபடிக்கு தயார் செய்துகொண்டிருக்கிறார். 5 ஏக்கரில் மா இருக்கிறது. மற்ற இடங்களில் மழை வேம்பு, குமிழ், செஞ்சந்தனம், மகோகனி வேம்பு மாதிரியான 3 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறார்.

ஆண்டுக்கு ரூ.36 லட்சம்
போன முறை ஏக்கருக்கு 26 மூட்டை வீதம் (60 கிலோ), 36 ஏக்கரில் இருந்து 936 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது. விதை நெல்லாக மூட்டை 2 ஆயிரத்து 400 ரூபாய் என்று விலை வைத்து விற்பனை செய்தார். இதன் மூலமாக 22 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இயற்கை முறையில் மானாவாரியாக விளைந்ததால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும் என்று கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். விற்பனையானது போக மீதமிருப்பதை அவித்து, இடியாப்ப மாவாக்கி கிலோ 80 ரூபாய் என்று விற்கிறார். எப்படிப் பார்த்தாலும் சராசரியாக நெல்லுக்கு 40 ரூபாய் விலை கிடைத்துவிடும். போன முறை பண்ணைக் குட்டை, போர் தண்ணீரை வைத்து இரண்டு போகம் எடுத்துள்ளார். இரண்டாவது போகத்தில் பொலி சரியில்லை. அதனால் இரண்டாவது போகத்தில் 14 லட்ச ரூபாய்தான் கிடைத்தது. இரண்டு போகத்திற்கும் சேர்த்து மொத்தம் 36 லட்ச ரூபாய் வருமானம். இந்த முறையும் அதே முறையில்தான் விற்பனை செய்யப்போவதாக கூறுகிறார்.

ஆண்டு வருமானம் ரூ.42 லட்சம்
வருடத்திற்கு 70 ஆடுகளை விற்பனை செய்கிறார். இதன் மூலமாக 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். இவரிடம் இருக்கும் 16 காங்கேயம், 17 நாட்டு ரக மாடுகள், 2 ஜெர்சி மாடுகள் மூலமாக கிடைக்கும் கன்றுகளை வளர்த்து வருடத்திற்கு 12 உருப்படிகளை விற்பனை செய்வதன் மூலமாக 3 லட்ச ரூபாய் கிடைக்கும். சிறுதானயங்கள் மூலமாக ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். காய்கறிகள், நாட்டு மாட்டு பாலில் தயாரான நெய், கோழி முட்டை, பஞ்சகாவ்யா விற்பனை மூலமாக ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். மீன்களையும், கோழிகளையும் வணிகரீதியாக விற்பனை செய்வதில்லை. ஆக இந்த 52 ஏக்கர் பண்ணையில் இருந்து வருடத்திற்கு 42 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஒரு வருடத்திற்கான மொத்த செலவு 12 லட்ச ரூபாய். இதைக் கழித்துவிட்டால் 30 லட்ச ரூபாய் நிகர லாபம் என்றார் முருகேசன்.

இவர்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் இறைச்சி விஷமில்லாமல் இவருக்குக் கிடைக்கிறது. விஷமில்லாத உணவு, மன நிம்மதி, தேவைக்கான வருமானம் மூன்றையும் தவிர வேறென்ன வேண்டும் என்கிறார் முருகேசன்.

தொடர்புக்கு
‘தரணி’ முருகேசன்
செல்போன் – 09443465991

ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 10.12.14 www.vikatan.com

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *