விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா. ராஜன் கூறினார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளம் ரசாயனக் குணங்களாக மாற்றப்பட்டு, வளம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. அடுத்து வரும் சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற அங்கக சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்த பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதற்கு இதுவே தக்க தருணமாகும்.
இதற்காக பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு போன்ற பயிர்களில் ஏதேனும், ஒன்றை தேர்வு செய்து பயிரிடலாம். தக்கைப்பூண்டு விதையை, 1 ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பயன்படுத்தலாம். மேலும் இவ்விதையுடன் ரைசோபியம் (பயறு) உயிர் உரத்தை 2 பாக்கெட் வீதம் விதை நேர்த்தி செய்து வயலில் விதைக்க வேண்டும். இவற்றை 45 முதல் 60 நாள்களுக்குள் அறுவடை செய்து வயலில் உழுது விடலாம்.இதேபோல் சணப்பு விதையை 1 ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ விதைக்கலாம். விதையுடன் உயிர் உரத்தை 2 பொட்டலம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.விதைத்த 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்து வயலில் உழுது விடலாம்.
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலமாக 1 ஏக்கருக்கு 8 முதல் 10 டன் பசுந்தாள் உரமானது கிடைக்கும். இதனால் சுமார் 50 முதல் 70 கிலோ வரை தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது.
மண்ணின் காற்றோட்டத்தை அதிகரித்து அடிமட்டத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மேல்மட்டத்திலுள்ள வேர்களுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் பயிர் மகசூல் 20 சதவீதம் வரை மகசூல் அதிக்கரிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நாங்கள் இயற்க்கை விவசாயம் செய்து மகசூல் பெற விரும்புகின்றோம். ஆனால் அதை திறம்பட செய்ய எங்களுக்கு போதிய வசதிகளும் வழிகளும் தெரியவில்லை. ஆதலால் நீங்கள் எங்களுக்கு சணப்பு, தக்கைபூண்டு, கொழிஞ்சி, அகத்தி, நீலபச்சை போன்றவற்றின் விதை தேர்வுகள் எப்படி செய்வது என்பது பற்றியும், அல்லது அவிக விற்பனை செய்யும் நபர்களின் விபரம் பற்றியும் எங்களுக்கு கொடுத்து உதவினால் ஏதுவாக இருக்கும்.