1. பஞ்சகவ்யா
பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது. 5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யைக் கலந்து நன்றாகப் பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும். நான்காவது நாள் மூடியைத் திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்றவேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10-வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கடிகார முள் சுழலும் திசைப் பக்கம் கலக்கி விடவேண்டும். கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம். 11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றித் தொடர்ந்து 7 நாட்கள் இருவேளைக் கலக்கி வர வேண்டும்.19-வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதைப் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.
2. இஞ்சி – பூண்டு கரைசல்
பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து சிறிதளவு தண்ணீரில் கரைத்து நோய்த்தாக்கிய பயிர்களுக்கு தெளிக்கலாம்.
3. அமிர்த கரைசல்
மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை வாளியில் எடுத்துக் கொண்டு, அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து 24 மணிநேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும் இப்போது அமிர்த கரைசல் தயார். 15 நாளைக்கு ஒருமுறை கொடுக்கலாம். தேவைப்பட்டால் வாரம் ஒருமுறையும் கொடுக்கலாம். ஒரு பங்கு கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் சேர்த்து கரைசலுக்கு கொடுக்கலாம்.
4. மூலிகை பூச்சி விரட்டி
ஊமத்தை, வேப்பிலை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சிலை, தும்பை இலைகளை 6 கிலோ எடுத்து ஒருலிட்டர் மாட்டு சிறுநீர் சேர்த்து ஒருவாரம் ஊறவைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். மூலிகை பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒருலிட்டர் என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம்.
5. தேமோர் கரைசல்
புளித்த மோர் – 5 லிட்டர், தேங்காய்ப்பால் – 1 லிட்டர், தேங்காய் துருவல் – 10 தேங்காய், அழுகிய பழங்கள் – 10 கிலோ ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும். தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
6. அரப்பு மோர் கரைசல்
புளித்த மோர் – 5 லிட்டர், இளநீர் – 1 லிட்டர், அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ, 500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு ஆகிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும். இந்த ஒருவார காலத்தில் நொதிக்கத் தொடங்கி விடும். இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும். அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
7. ஜீவாமிர்தம்
நாட்டு பசுஞ்சாணம் – 10 கிலோ, நாட்டு பசுங்கோமியம் – 5 முதல் 10 லிட்டர், வெல்லம் – 2 கிலோ (அ) கரும்புச்சாறு – 4 லிட்டர், தானிய மாவு – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து), காட்டின் மண் – கையளவு, தண்ணீர் – 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) ஆகிய பொருட்கள் தேவை. 00 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், வெல்லம் அல்லது கரும்புச்சாறு, தானியமாவு ஆகியவற்றுடன் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டியில் இட்டுக் கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்குத் தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன. இவ்வாறு கலக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜீவாமிர்தம். தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை, குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
8. கன ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலக்க வேண்டும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
9. வேப்பங்கொட்டை கரைசல்
நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ, தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர், சோப்பு – 200 கிராம், மெல்லிய மஸ்லின் வகை துணி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வேண்டும். இரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும். இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லின் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும். எப்பொழுதும் புதிதாகத் தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம் 3.30 மணிக்குப் பின்பு வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
10. வளர்ச்சியூக்கி
கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை (வாழை, பப்பாளி, சீதா பழம், பரங்கிபழம் ) வாங்கி வந்து நன்றாகப் பிசைந்து அதனுடன் 1 கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை (வெல்லம்) சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் / பிளாஸ்டிக் வாளியில் மூடி வைக்கவும், 15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும்., மாலையும் நன்கு கிளறி விட வேண்டும். 15வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் நல்லதொரு வளர்ச்சி கண்கூட தெரியும். இதனால் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும்.
11. சுக்கு அஸ்திரம்
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கும் ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
12. நீம் அஸ்திரம்
நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ, நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை 10 கிலோ, இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூடி போட்டு மூடி வைக்கக் கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
13. மீன் அமிலம்
உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி அய்யா