மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் சம்பா. வறட்சியைத் தாங்கிக்கொண்டு, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது.
நூற்று நாற்பது நாள் வயதுடைய இந்த நெல், மஞ்சள் மற்றும் பழுப்பு நிற அரிசியைக் கொண்ட நீண்ட காலப் பயிர். சன்ன ரக அரிசி. நான்கடி வளரக்கூடிய நெல் ரகம்.
பராமரிப்பு
ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும், ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு இருபத்து ஐந்து மூட்டைவரை மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு.
இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. பூச்சி நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட ரகம் இது. மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால், பத்து நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.
சன்ன ரகமாகவும், சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு இந்த ரகம் அதிகம் விரும்பப்படுகிறது. உணவுத் திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகாரம் செய்ய விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள். மிகுந்த ருசியுடன் இருப்பதால் மக்களிடையே வாடன் சம்பா பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மருத்துவக் குணம்
அத்துடன் மருத்துவக் குணமும் கொண்டது வாடன் சம்பா. மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் பத்தியம் இருக்க வேண்டும். அதற்கும் பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசிக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் பழக்கம் கிராமப் பகுதிகளில் இன்னும் இருந்துவருகிறது.
குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குக் காரணம் விரைவில் ஜீரணம் ஆவதும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்ததுமான இந்த நெல் ரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாக இருக்கும் என்பதுதான்.
– நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 9443320954
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்