பாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி!… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்

“ஒருமுறை உழவு செய்து நிலத்தைத் தயார் செய்தால் போதும். அதன்பிறகு அறுவடை. அடுத்த நடவு. இது மட்டும்தான் வேலையாக இருக்க வேண்டும். அடிக்கடி உழவு செய்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களையெடுத்தல் என எந்த வேலையும் இருக்கக் கூடாது. பயிருக்குப் பாசனமும் ஜீவாமிர்தமுமே போதும். வேறு இயற்கை இடுபொருள்கள்கூடத் தேவையில்லை. இந்த முறையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். செலவே இல்லாமல் ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் பார்த்து வருகிறேன். இதற்குக் காரணம் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை சித்தாந்தம்தான்” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார், நாட்ராயன்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள எரசப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர், நாட்ராயன். வேளாண்மை இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய முறைகளால் ஈர்க்கப்பட்டவர். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட நாட்ராயன், முழுநேர விவசாயியாக இருக்கிறார்.

  ஐந்தடுக்குச் சாகுபடியில் வாழை, பப்பாளி, தக்காளி உள்ளிட்ட பயிர்கள்…

சுபாஷ் பாலேக்கரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து அவரது சித்தாந்தங்களைத் தமிழக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியது, ‘பசுமை விகடன்’ இதழ்தான். அதன் பலனாக, தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் பண்ணைகள் அதிகரித்தன. தற்போது சுபாஷ் பாலேக்கர், தனது வேளாண்மை முறையை, ‘சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை முறை’ (Subash Baleker’s Natural Farming) என்று மாற்றியிருக்கிறார். இந்த முறையைப் பின்பற்றிப் பலரும் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், நாட்ராயன்.

தேனி மாவட்டம், எரசப்பநாயக்கனூர், வாழைக்குப் பெயர் போன பகுதி. இங்கு ஐந்து இடங்களில் நாட்ராயனின் நிலங்கள் இருக்கின்றன. வாழைதான் பிரதானப் பயிர். நிலம் முழுக்க மூடாக்குப் போடப்பட்டிருக்கிறது.  செவ்வாழை அதிகளவில் இருக்கிறது. ஒரு நிலத்தில் ஐந்தடுக்குச் சாகுபடி முறையில் இளம் பயிர்கள் இருக்கின்றன. அந்த நிலத்தில் செவ்வாழை, பப்பாளி, தக்காளி, ஆமணக்கு ஆகிய பயிர்கள் இருக்கின்றன. நிழல் கட்டிய பிறகு கொத்தமல்லியும் தென்னையும் நடவு செய்யப்பட இருக்கின்றன.

வயலில் பராமரிப்புப் பணியிலிருந்த நாட்ராயனைச் சந்தித்துப் பேசினோம்.

“எங்க ஊர்ல செவ்வாழையும், பச்சை வாழையும் வருஷம் முழுக்க மகசூலில் இருக்கும். எங்களது விவசாயக் குடும்பம்தான். பசுமை விகடன்ல, பாலேக்கரோட சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் எடுக்கிற கர்நாடக ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பத்தின கட்டுரைகளைப் படிச்சேன். அந்தச் சமயத்துல பசுமை விகடன் மூலமா சுபாஷ் பாலேக்கரை ஈரோட்டுக்கு கூட்டிட்டு வந்து பயிற்சி கொடுக்கப்பட்டது. அதுல நான் கலந்துக்கிட்டேன். அந்தப் பயிற்சியிலதான் என்னோட பல கேள்விகளுக்குப் பதில் கிடைச்சது. நான் விவசாயம் படிச்சதனால, அறிவியல்பூர்வமா இருந்தாத்தான் எதையும் ஏத்துக்குவேன். பாலேக்கரும் விவசாயம் படிச்சவர். அவர் சொல்ற விஷயங்கள் அறிவியல்பூர்வமா இருந்தது. அதனால, அவர் சித்தாந்தம் மேல ஈடுபாடு வந்திடுச்சு.

2008-ம் வருஷம் ஜீரோ பட்ஜெட் விவசாயத்துல இறங்கினேன். அப்ப எங்க பகுதியில வாழையைத் தாக்கின வெடிவாழை (Wilt Disease) நோயினால் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட நஷ்டம். அதிலிருந்து தப்பிக்க ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துனாங்க. ஆனா, எந்தப் பலனும் கிடைக்கலை. பாதிப்பு அதிகமாதான் ஆச்சு. நான் என் தோட்டத்துல இருந்த வாழைக்கு ஜீவாமிர்தம் கொடுத்தேன். உடனே, வாழையில வெடிவாழை நோய் சரியாகிடுச்சு. அது தார் போட்டு, மகசூல் கொடுத்ததைப் பார்த்து அசந்து போய்ட்டேன். அதுல இருந்து பாலேக்கர் முறையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன்.

நான் வேளாண்மைத் துறையில வேலைக்குச் சேர்ந்து கடலூர் மாவட்டத்துல வேளாண்மை இணை இயக்குநராக இருந்தேன். 2018-ம் வருஷம் அந்த வேலையிலிருந்து ரிட்டையர்டு ஆனேன். கடலூர் மாவட்டத்தில் இருந்தப்போ (2017-ம் வருஷம்), மகாராஷ்டிர மாநிலத்தில் பாலேக்கர் முறையில் சிறப்பா வேளாண்மை நடக்கிற பண்ணைகளைப் பார்வையிடுற வகையில ஒரு பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அதுல, இந்தியா முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துக்கிட்டாங்க. நானும், அப்போதைய வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்திகிட்ட அனுமதி வாங்கி, அந்தப் பயண நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அந்தப் பயணத்துல  பார்த்த விவசாயிகளின் நிலங்கள், சாகுபடி முறைகள் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு.

பணியில் இருந்த சமயத்துல, விவசாயிகள்கிட்ட பாலேக்கரோட கருத்துக்களைச் சொல்லுவேன். அவரோட சித்தாந்தங்களைப் புத்தகமாக்கி விவசாயிகளுக்குக் கொடுத்தேன். நாம சொல்றவங்களா மட்டும் இருக்கக் கூடாது. செயல்படுறவங்களாவும் இருக்கணும்னு நினைச்சுதான், என்னோட வயல்கள்ல, பத்து வருஷமா ஜீரோ பட்ஜெட் முறையில விவசாயம் செஞ்சிட்டுருக்கேன். பல விவசாயிகள் என் பண்ணையை வந்து பார்த்துட்டுப் போறாங்க” என்ற நாட்ராயன், தனது தோட்டங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டியபடியே பேசினார்.

“இங்க ஒரு ஏக்கர் நிலத்துல தனிப்பயிரா செவ்வாழை இருக்கு. 8 அடி இடைவெளியில் நடவு செய்திருக்கேன். அது இப்போ அறுவடைக்கு வந்திடுச்சு. அந்த நிலத்துல இனிமே உழவுக்கு வேலையே இல்லை. அதை நிரந்தர வாழைக்காடா மாத்திட்டேன். இனிமே அங்க அறுவடை மட்டும்தான். வாழை மறுதாம்பு மூலமா தொடர்ந்து வருமானம் கிடைச்சிட்டே இருக்கும். பக்கக் கன்றுகளை வெட்டாம அப்படியே விட்டுடுவேன். செவ்வாழை அறுவடைக்கு வர 14 மாதங்கள் ஆகும். ஆனா, என் வயல்ல வருஷம் முழுக்க அறுவடை செய்யலாம். எல்லா வயசுலயும் வாழை இருக்கு. சொட்டுநீர்ப் பாசனம்தான் செய்றேன். அப்பப்ப பாசன நீர்ல ஜீவாமிர்தத்தைக் கலந்து கொடுப்பேன். மாசம் ஒரு தடவை ஜீவாமிர்தம் தெளிப்பேன். அடியுரமா, கன ஜீவாமிர்தம் கொடுப்பேன். அவ்வளவுதான். ஜீவாமிர்தம் மட்டும் கொடுத்தாப் போதுமானு சந்தேகம் இருக்குறவங்க, என்னோட நிலங்களை நேர்ல வந்து பார்த்துக்கலாம்” என்ற நாட்ராயன் அடுத்த வாழைத் தோப்புக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

வயலைச் சுற்றிலும் தென்னை. உள்வரிசையில் மகோகனி மரங்கள் அணிவகுத்து நின்றன. அவற்றுக்கிடையில் ‘பேக்கரி செர்ரி’ எனப்படும் கலா மரங்கள். திடகாத்திரமான செவ்வாழை மரங்கள் வரவேற்றன. வாழைக்கு இடையில் மாதுளை, முருங்கை, கொய்யா, மா, பப்பாளி மரங்கள்.

“இது ஒரு ஏக்கர் நிலம். எட்டடி இடைவெளியில் மொத்தம் 600 வாழை மரங்கள் இருக்கு. இது இரண்டாவது ஈத்து வாழை. நாலு வாழைக்கு இடையில் ஊடுபயிரா முருங்கை, பப்பாளி, கொய்யா மாதிரியான மரங்களை வெச்சிருக்கேன். இங்கேயும் ஜீவாமிர்தம் மட்டும்தான் இடுபொருள். வேற எதையும் நான் கொடுக்கிறதில்லை. இதுல ஊடுபயிராகக் கொத்தமல்லிச் சாகுபடி செய்தேன். அது 30,000 ரூபாய்க்கு விற்பனையாச்சு. பப்பாளி மகசூல் முடிஞ்சிடுச்சு. அது 70,000 ரூபாய்க்கு விற்பனையாச்சு.

ஒரு வாழைத்தார், 20 கிலோ எடையிலிருந்து 40 கிலோ எடைவரைக்கும் இருக்குது. ஒரு அறுவடையில் 600 தார்கள் கிடைக்கும். ஒரு அறுவடை முடிச்சுட்டேன். மொத்தம், 15,000  கிலோ வாழை கிடைச்சது. ஒரு கிலோ 20 ரூபாய்ங்கிற விலையில 3,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஏற்கெனவே ஊடுபயிர் மூலமா, 1,00,000 ரூபாய் கிடைச்சது. ஒரு ஏக்கர்ல மொத்த வருமானம் 4,00,000 ரூபாய். முருங்கை இப்போதான் மகசூலுக்கு வந்துருக்கு. மாதுளை மகசூலுக்கு வர இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதெல்லாம் மகசூலுக்கு வந்துட்டா இன்னும் வருமானம் கூடும். இதைத்தாண்டி நிலத்தைச் சுத்தி இருக்கிற மரங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் மாதிரி. 15 வருஷம் கழிச்சு வட்டி சேர்த்து லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும். அதெல்லாம் என் பையனுக்கு” என்ற நாட்ராயன் வரப்பிலிருந்து அடுத்து தோப்புக்கு அழைத்துச் சென்றார்.

“இது 1 ஏக்கர் 30 சென்ட் நிலம். இங்கே பச்சை வாழை இருக்கு. இரண்டாவது தலைமுறை. 6 அடி இடைவெளியில மொத்தம் 1,500 வாழை மரங்கள் இருக்கு. மரத்துக்கு ரெண்டு பக்கமும் தட்டைப்பயறு நட்டிருக்கேன். இது காத்துல இருக்கிற நைட்ரஜனை நிலத்தில் சேர்க்கும் உயிர் மூடாக்கு. வாழை அறுவடை முடிஞ்சதும் அதை வெட்டி இரண்டு வரிசைக்கு இடையில் மூடாக்காகப் போட்டுடுவோம். என்னோட எல்லா வாழைத் தோப்புகளிலும் மூடாக்குதான் முக்கியமான வேலையைப் பார்க்குது.

இங்க ஊடுபயிரா வெங்காயம் நடவு செஞ்சிருந்தேன். அதுல, 1,800 கிலோ மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ 40 ரூபாய் விலைக்குப் போச்சு. அது மூலமா 72,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயம் எடுத்ததும் கொத்தமல்லி போட்டோம். அதுல 30,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. வாழை, 12 மாசத்துல அறுவடைக்கு வந்துச்சு. ஒரு தார் சராசரியா 20 கிலோ எடை இருந்தது. ஒரு கிலோ 9 ரூபாய்ல இருந்து 14 ரூபாய் வரை விற்பனையாச்சு. வாழைத்தார் விற்பனை மூலமா, 3,60,000 ரூபாய் கிடைச்சது.

இந்த 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்துல ஒரு வருஷத்துல 4,52,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. நடவு, வேலையாள் செலவைத் தவிர வேற செலவு இல்லை. தட்டைப்பயற்றை ஜீவாமிர்தம் தயாரிக்க வெச்சிக்குவோம். இனி இந்தத் தோட்டத்துல பெருசா வேலையில்லை. வாழை தலைமுறை தலைமுறையா மகசூல் கொடுத்திட்டே இருக்கும்” என்ற நாட்ராயன் அடுத்த தோப்புக்குள் புகுந்தார்.

போர்வெல் தண்ணீர் தொட்டியில் கொட்டிக்கொண்டிருந்தது. அதில் தாகம் தணித்துக்கொண்டு, தோப்புக்குள் நுழைந்தோம்.

“இது 2 ஏக்கர் 30 சென்ட் பரப்பு. இங்க செவ்வாழைதான் பிரதான பயிர். ஊடுபயிரா எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை இருக்கு. செவ்வாழையில ரெண்டு மகசூல் எடுத்தாச்சு. ஆரஞ்சு, எலுமிச்சை மரங்களுக்கு வெயில் போதலை. அதனால, கொஞ்சம் வாழை மரங்களை வெட்டி இடைவெளி ஏற்படுத்தப்போகிறோம். வேலியில 70 தென்னை மரங்களை வெச்சிருக்கேன். தென்னையைத் தனிச்சாகுபடியா செஞ்சிருந்தா, எழுபது தென்னைக்கே ஒரு ஏக்கர் நிலம் போயிருக்கும். ஆனா, வேலியில நடவு செஞ்சதால, நிலம் மிச்சமாகிடுச்சு.

தக்காளி, கொத்தமல்லி, பப்பாளி மூணும் மகசூல் முடிஞ்சிடுச்சு. அது மூலமா 2,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. செவ்வாழையில 1,500 மரங்கள் இருக்கு. 1,500 தார்கள் விற்பனை மூலமா, 7,50,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. தென்னையில் 50,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஆக, இந்த 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்துல வருஷம் 10,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாதுளையும் எலுமிச்சையும் மகசூலுக்கு வந்துட்டா வருமானம் அதிகரிக்கும்.

“என்னோட பத்து வருஷ ஜீரோபட்ஜெட் அனுபவத்தை மற்ற விவசாயிகளுக்கும் கத்துக் கொடுத்துட்டு இருக்கேன். இப்ப ஐந்தடுக்குச் சாகுபடி முறையில ஒரு நிலத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கேன். அது 2 ஏக்கர் 25 சென்ட் பரப்பு. பத்தடி இடைவெளியில் செவ்வாழை கன்றுகள நட்டிருக்கேன். ரெண்டு செவ்வாழைக்கு இடையில ரெட்லேடி பப்பாளி நடவு செய்திருக்கேன். ரெண்டு பப்பாளிக்கான இடைவெளியும் பத்தடிதான் வரும். செடியில இருந்து ஒன்றரை அடி இடைவெளியில ரெண்டு பக்கமும் சொட்டுநீர்க் குழாய் போகுது. அதனால, ரெண்டு பக்கமும் தக்காளி நடவு செஞ்சிருக்கேன். நாலு வாழைக்கு இடையில ஆமணக்கைப் பரவலா நடவு செஞ்சிருக்கேன். பிப்ரவரி மாசக் கடைசியில நடவு செஞ்சது. இப்போ மூணு மாசம் ஆச்சு. நிழல் கிடைச்சதும் கொத்தமல்லிச் சாகுபடி ஆரம்பிச்சிடுவேன். 40 அடி இடைவெளியில தென்னை நடவு செய்யலாம்னு இருக்கேன்.

இந்த இடத்துல 1,000 செவ்வாழை மரங்கள், 1,000 பப்பாளி மரங்கள், 6,000 தக்காளிச் செடிகள் இருக்கு. இதையும் நிரந்தர வாழைத் தோட்டமா மாத்தப்போறேன். இங்க நடவு செய்றதுக்கான வாழைக்கட்டையை என்னோட தோட்டத்துல இருந்தே எடுத்துக்கிட்டேன். பப்பாளி நாத்து ஒன்று 13 ரூபாய்னு வாங்கினேன். போக்குவரத்துச் செலவோட மொத்தம் 14,000 ரூபாய் ஆச்சு. தக்காளி ஒரு நாத்து 50 பைசா. போக்குவரத்துச் செலவோட 4,000 ரூபாய் ஆச்சு. ஆமணக்கு விதை என்கிட்டயே இருந்துச்சு. எல்லாப்பயிர்களுக்கும் நாத்து, நடவுச் செலவு எல்லாம் சேர்த்து 20,000 ரூபாய் ஆச்சு. ஆரம்பத்துல உழவுச் செலவு 3,000 ரூபாய். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 50,000 ரூபாய் செலவு. மொத்தம் 70,000 ரூபாய் செலவு. இது நிரந்தர முதலீடு. ரெண்டு தடவை களை எடுக்க 3,000 ரூபாய் செலவாச்சு” என்ற நாட்ராயன் நிறைவாக,

“இப்போ தக்காளி மகசூலுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு. ஒரு செடிக்கு ரெண்டு கிலோ மகசூல்னு வெச்சுகிட்டாலும், மொத்தமுள்ள ஆறாயிரம் செடிகள்ல இருந்து 12 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ 10 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவரைக்கும் செலவு பண்ணுன தொகையைத் தக்காளி கொடுத்திடும். ஒரு பப்பாளி மரத்துல 50 கிலோ வரை காய் கிடைக்கும். ஒரு கிலோ 10 ரூபாய்னு விற்பனையாகும். 1,000 மரங்கள் மூலமா 5,00,000 ரூபாய் கிடைக்கும். ஒரு செவ்வாழை தார் 500 ரூபாய்னு விற்பனையாகும். 1,000 தார் மூலமா 5,00,000 ரூபாய் கிடைக்கும்.

சாகுபடிச் செலவுக்குக் கொத்தமல்லி, தக்காளி மாதிரியான பயிர்களை வெச்சுகிட்டாப் போதும். வேலையாள் கூலி, இடுபொருள் செலவு, களையெடுக்குற செலவு, உழவுக்கான செலவு எல்லாமே இங்க ரொம்பக்குறைவுதான். வருஷா வருஷம் நிரந்தர வருமானமா 8,00,000 ரூபாய் கிடைச்சுடும். ‘பிரதானப் பயிர்களுக்கு இடையில் ஊடுபயிர் சாகுபடி செய்யணும். பிரதானப் பயிர் செலவை ஊடுபயிர்கள் மூலமாக ஈடு செய்யணும்’ங்கிறதுதான் பாலேக்கரோட சித்தாந்தம். அந்த முறையைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

அங்கக அமிலங்களை உருவாக்கும் மூடாக்கு!

யிர்க் கழிவுகள் மூடாக்காக மாறும்போது மட்கி விடுகின்றன. இப்படி மட்கும்போது ‘ஹுயுமஸ்’ உருவாகிறது. மண்ணில் உயிரியல், பௌதிக மற்றும் வேதியியல் மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். இதனால், பயிர்க் கழிவுகள் சிதைந்து நுண்ணுயிர்கள் பெருகும். பிறகு, இந்த மட்கிலிருந்து ‘ஹூயுமிக் அமிலம்’, ‘கார்பானிக் அமிலம்’ மற்றும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அங்கக அமிலங்கள் நுண்ணுயிர்கள்மூலம் உருவாகிப் பயிர்கள் வளர்கின்றன. ஒரு கிலோ மட்கு, காற்று மண்டலத்திலிருந்து ஆறு லிட்டர் தண்ணீரை உறிஞ்சிச் சேமித்துப் பயிர்களின் வேர்களுக்கு அளிக்கும் ஆற்றல் பெற்றது.

சக்தி தயாரிக்கும் பச்சையம்!

சுமையான இலைகளில் பச்சை நிறத்தில் ‘குளோரோஃபில்’ என்று சொல்லப்படும் நிறமிகள் உள்ளன. இவை, அடினோசைன் டிரைபாஸ்பேட்  (Adenosine Triphosphate) சூரிய செல்களின் மூலம் நேரடியாகச் சூரியசக்தியைப் பெற்று இலைகளில் சேமிக்கின்றன. சூரிய சக்திமூலம் இலைகள் உணவு தயாரிக்கும் முறைதான் ஒளிச்சேர்க்கை.

ஒரு சதுர அடிப் பரப்பில் உள்ள பச்சைத் தாவரங்கள் சூரியனிடமிருந்து ஒரு நாளைக்கு 1,250 கிலோ கலோரி சக்தியைப் பெறுகின்றன. இதில் ஒரு சதவிகிதம் மட்டுமே இலைகளில் சேமிக்கப்படுகிறது. இதிலிருந்து 4.5 கிராம் உணவு தயாரிக்கப்படுகிறது. பயிர்களின் வேர் வளர்ச்சிக்காக 1.5 கிராம், தண்டு வளர்ச்சிக்காக 1.5 கிராம், தானியம் அல்லது காய் பழுப்பதற்கு 1.5 கிராம் என்ற இயற்கையின் நியதிப்படி பயிர்கள் வளர்ச்சியடைகின்றன. இதற்கு மண்ணை வளமாக வைத்துக்கொண்டாலே போதும்.

தொடர்புக்கு, நாட்ராயன், செல்போன்: 9585206516 .

– ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *