பாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்!

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 55. விவசாயத்தின் மீதான காதலால் வங்கிப்பணிக்கு 2000ல் விருப்ப ஓய்வு கொடுத்தார்.

2012ல் ஊருக்கு அருகில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். வறண்ட நிலத்தில் என்ன செய்ய முடியும்? என பலர் ஏளனம் பேசினர். அதை செவிமடுக்காமல் ஆர்வத்தை உழைப்பில் காட்டினார். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது, சந்தையூர் வைகை ஆற்று படுகையில் 10 சென்ட் நிலம் வாங்கி, கிணறு மற்றும் ஆழ்துளையும் அமைத்தார்.
ரோட்டோரம் குழாய் அமைத்து 5 கி.மீ., தொலைவுக்கு தண்ணீர் கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அவரது தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு, பாலை நிலத்தை பசுமையாக்கியது. அதில் இயற்கை விவசாயத்துடன் புதிய புதிய முயற்சிகளை செய்து வருவதால் ஒருங்கிணைந்த பண்ணையாக உருமாறியுள்ளது.
தேவைக்கு அதிகமாக கிடைக்கும் தண்ணீரை தனக்கு மட்டும் பயன்படுத்தாமல், விவசாய ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொடுத்து உதவுகிறார். இந்த உதவியால் 10 விவசாயிகளுக்கும் பிழைப்பு கிடைத்துள்ளது.
இயந்திர பயன்பாடு இல்லை

பண்ணை ஊழியர் வள்ளுவன் கூறுகையில், “மற்றவர்களைப் போல் பண்ணைக்குட்டை அமைக்காமல், குட்டையின் கரையில் மூன்றடுக்கில் தென்னை வளர்க்கிறார். செழிப்பான காலத்தில் குட்டையில் தேங்கியுள்ள தண்ணீர் மரங்களுக்கு சரியாக வரும். மற்ற நாட்களில் சொட்டு நீர் பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சுகிறோம். இவரது பண்ணை குட்டை அருகேயுள்ள விவசாய கிணறுகள், ஆழ் துளைகள் ஊற்றுப் பிடித்து மேலும் சில விவசாயிகள் பயன் அடைகின்றனர்” என்றார்.

சாகுபடிக்காக சிறிதளவு உரத்துடன், மீன் அமிலக் கரைசல், பஞ்சகவ்யா, கன ஜீவாமிர்தத்தை கலந்து விவசாயம் செய்கிறார். இப்படி 23 ஆண்டுகளாக விவசாயத்தில் கிடைத்த வருமானத்தை மீண்டும், மீண்டும் நிலத்திலேயே முதலீடு செய்துள்ளார். 15 ஆண்டுகளாக எலுமிச்சையில் ரூ.பல லட்சம் வருமானம் பார்த்தார். அதைக் கொண்டு தென்னை நடவு செய்தார்.
தற்போது இவரது பண்ணையில் 1800 தென்னை, 1000 முருங்கை மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. அதில் ஊடுபயிராக கத்தரி, நார்த்தங்காய், வாழை பயிரிட்டுள்ளார். பண்ணையில் வளரும் 10 வெள்ளாடுகள் இயற்கை உரத்தை தருகின்றன. அடுத்து நாட்டு மாடுகள் வளர்ப்புக்கு புல் தேவை என்பதால் அதையும் வளர்க்கிறார்.
தொடர்புக்கு 09787438809
– ஸ்தானிகபிரபு, வத்தலக்குண்டு

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *