‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. ஆனா நாங்க கனவுலயும் நினைச்சுப் பார்க்காத வகையில அவருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்திருக்குன்னு சமீபத்துல தெரிஞ்சப்போ என் தலையில இடியே விழுந்தமாதிரி ஆகிடுச்சுங்க…” – கண்கள் கசியப் பேசுகிறார் சித்ரா ஜெயராமன்.
இயற்கை விவசாய ஆர்வலரான ‘நெல்’ ஜெயராமனின் மனைவி.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து, 14 வருடங்களாக இயற்கை விவசாயத்துக்காக பல தளங்களிலும் பிரசாரம் செய்து வருபவர் ‘நெல்’ ஜெயராமன். குறிப்பாக, நம் பாரம்பர்ய அரிசி ரகங்களை அழிவில் இருந்து மீட்க, 10 வருடங்களாகத் தொடர்ந்து பாரம்பர்ய விதைநெல் திருவிழாவை நடத்தி வருபவர். காட்டுயானம், குழியடிச்சான், கறுப்புக்கவுனி உள்ளிட்ட 169 வகையான நெல் ரகங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, கட்டிமேடு கிராமத்தில் இருக்கிறது ஜெயராமனின் வீடு. அவரது மனைவி சித்ரா தொடர்கிறார்… “அவரு எங்கம்மாவோட தம்பி, எனக்குத் தாய்மாமன். எங்களுக்கு 1999-ல் திருமணம் ஆச்சு. நான் பத்தாவதும், அவரு ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கோம். எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேற எதுவும் தெரியாது. இயற்கை விவசாயத்தைப் பத்தின விழிப்புஉணர்வு இல்லாம ரசாயன உணவுகளைச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். 1998-ல் அவருக்கு நம்மாழ்வார் ஐயாவின் தொடர்பு கிடைச்ச பிறகு, எங்க வாழ்க்கை முறையே முற்றிலும் இயற்கை பக்கமா மாறிடுச்சு.
நம்மாழ்வார் ஐயாகூட சேர்ந்து நிறைய இயற்கை விவசாய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள்ல கலந்துக்குவார் என் கணவர். அப்படித்தான் 2003-ம் வருஷம் காவிரி டெல்டா பகுதிகள்ல நம்மாழ்வார் ஐயா மேற்கொண்ட இயற்கை விவசாய விழிப்புஉணர்வு பிரசார நடைப்பயணத்துலயும் கலந்துகிட்டாரு. அந்த பயணத்துலதான் ஒரு விவசாயி என்னோட கணவருக்கு ‘காட்டுயானம்’ங்கிற விதைநெல்லைக் கொடுத்து, அதோட பயன்பாடுகளையும் சொல்லியிருக்காரு. அப்படியே கொஞ்ச நாள்ல ஏழு விவசாயிங்ககிட்ட இருந்து அவருக்கு ஏழு வகையான பாரம்பர்ய விதைநெல் கிடைச்சுது.
நம்மாழ்வார் ஐயாவும் இவர்கிட்ட, ‘இந்த விதைநெல்லைக் கொண்டு விவசாயம் செஞ்சு இனி பாரம்பர்ய நெல் ரகங்கள் அழிஞ்சுடாம பார்த்துக்கோ’ன்னு சொன்னாரு. அப்போதுல இருந்து அவருக்கு பாரம்பர்ய இயற்கை விவசாயம் மற்றும் நெல் ரகங்கள் மேல அளவுகடந்த ஆர்வம் உண்டாகிடுச்சு” என்பவர் ‘நெல்’ ஜெயராமன் விதைநெல் திருவிழா நடத்த துவங்கிய கதையைச் சொல்கிறார்.

“முதல்கட்டமா கிடைச்ச ஏழு வகையான விதைநெல்லைக் கொண்டு 2004-2005ம் வருஷம் விவசாயம் செஞ்சு, கூடுதலான விதைநெல்லை மறு உற்பத்தி செஞ்சோம். 2006-ம் வருஷத்துல முதல் முறையா எங்களுக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தரோட பண்ணையில பாரம்பர்ய விதைநெல் திருவிழாவை நடத்தினோம்.
147 விவசாயிங்க கலந்துகிட்ட அந்த திருவிழாவைத் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் மே மாசம் 30, 31-ம் தேதிகள்ல விதைநெல் திருவிழாவை நடத்திட்டு இருக்கிறோம். அந்தத் திருவிழாவுல கலந்துகிட்டு, விருப்பப்பட்டு கேட்குற விவசாயிங்களுக்கு ரெண்டு கிலோ விதைநெல்லைக் கொடுப்போம். கூடவே, வாங்கின விதைநெல்லை இயற்கை விவசாயம் செஞ்சு, அடுத்த வருஷத் திருவிழாவுல நாலு கிலோ விதைநெல்லா திருப்பிக் கொடுக்கணும்ங்கிற உறுதிமொழி படிவத்தையும் கொடுத்திடுவோம். கடந்த 10 வருஷமா இப்படி பல்லாயிரக்கணக்கான விவசாயிங்க விதைநெல்லை வாங்கி விவசாயம் செய்து பயனடைஞ்சு இருக்காங்க.
இதுக்கு நடுவுல என் கணவர் ரொம்ப சிரமப்பட்டு தமிழ்நாடு முழுக்க இருக்குற விவசாயிகளை சந்திச்சு,
பாரம்பர்ய விதைநெல்களை வாங்கிவந்து சேகரிச்சுட்டே இருந்தாரு. அதன்படி இப்போ எங்ககிட்ட 169 வகையான அரிய பாரம்பர்ய விதைநெல் ரகங்கள் இருக்கு. இப்போ சராசரியா 6,000 விவசாயிங்க வரைக்கும் விதைநெல் திருவிழாவுல கலந்துக்கிட்டு இயற்கை விவசாயத்தோட அருமையை தெரிஞ்சுக்கிறாங்க. விருப்பப்பட்ட விவசாயிங்க விதைநெல்லை வாங்கிட்டுப் போறாங்க. அப்படித் திருவிழாவுல கலந்துகிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிங்க இப்போ தனித்தனியே விதை நெல் திருவிழாவை நடத்திட்டு இருக்காங்க. இந்த முயற்சிகளால, இயற்கை விவசாய உணவுகள் உற்பத்தி அதிகரிச்சு பொதுமக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்குது. அதுதான் எங்களோட நோக்கமும், சந்தோஷமும்.
நூற்றுக்கணக்கான முறை நம்மாழ்வார் ஐயா எங்க வீட்டுக்கும், விவசாய நிலத்துக்கும் வந்திருக்காரு. ஒவ்வொரு வருஷமும் அவர் தலைமையிலதான் விதைநெல் திருவிழா நடக்கும். என் கணவர் நம்மாழ்வார் ஐயாகிட்ட இருந்து நிறைய இயற்கைச் சார்ந்த விஷயங்களைக் கத்துக்கிட்டு அதை குடும்பத்துல இருக்குற எங்களுக்கும், விவசாயிங்களுக்கும் சொல்லுவாரு. குறிப்பா, ‘ரசாயன உரத்தைச் சேர்க்குறதால அதிக மகசூல் கிடைக்குதுன்னு நிறைய விவசாயிங்க ரசாயன விவசாயம் செய்றாங்க. ஆனா முழுமையான ஈடுபாட்டோட முறைப்படியும் ஆர்வத்துடனும் செஞ்சா இயற்கை விவசாயத்துலதான் அதிக மகசூல் கிடைக்கும். ரசாயன உரத்தைப் பயன்படுத்தி விஷத்தன்மை கொண்ட விளைபொருள்களை உற்பத்தி செஞ்சு சாப்பிட்டு நம்ம உடல்நலத்தைக் கெடுத்துக்குறது தவறு’னு தமிழ்நாடு முழுக்கவும், வெளிமாநிலங்கள்லயும் நிறைய ஊர்களுக்குப் போய் இயற்கை விவசாய, பாரம்பர்ய விதைநெல் விழிப்புஉணர்வு பிரசாரங்களைப் பண்ணிட்டு இருக்காரு. இதுக்காக ஒருமுறை ஃபிலிப்பைன்ஸுக்கும் போயிட்டு வந்திருக்காரு. இதனாலயெல்லாம்தான் அவர் பெயர்ல ‘நெல்’ அடைமொழி சேர்ந்துச்சு.
10 வருஷத்துக்கும் மேல எங்க குடும்பத்துல எல்லோருமே பாரம்பர்ய அரிசியைத்தான் சாப்பிடுறோம். நாலாவது படிக்குற எங்க பையனையும் பிறந்தது முதலே இயற்கை உணவுகளைக் கொடுத்து வளர்த்துட்டு இருக்கிறோம். குறிப்பா, நம்மாழ்வார் ஐயா ஆலோசனைப்படி கடந்த 10 வருஷமா என் கணவர் அசைவ உணவு, பரோட்டா உள்ளிட்ட துரித உணவுகள் எதையுமே சாப்பிடுறது இல்ல. சாப்பிடுற ஒவ்வொரு உணவையும் நல்லதுதானான்னு பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாரு. அவர் மது, புகையிலைப் பொருட்களையும் தொட்டதுக்கூட கிடையாது. தினமும் யோகா பயிற்சியும் செய்துகிட்டு இருக்காரு. இப்படி ஆரோக்கியப் பழக்கங்களோட இருந்தவருக்கு சிறுநீரகப் புற்றுநோய்னு சொன்னப்போ, உடைஞ்சே போயிட்டோம்.
இப்போ சிகிச்சைகள் நடந்துகிட்டு இருக்கு. ஓய்வுல இருக்குறாரு. ‘பயப்படவேண்டியது இல்ல… முழுமையா குணப்படுத்திடலாம்’னு டாக்டருங்க சொல்லியிருக்காங்க. மருத்துவத்துக்கு போதிய பணம் இல்லாம நாங்க இருக்குற இந்த சூழல்ல, நிறைய நல் உள்ளங்கள் உதவி செய்துகிட்டே இருக்காங்க. அவங்க எல்லோருக்கும் நன்றிங்க. வர்ற மே மாசமும் வழக்கம் போல விதைநெல் திருவிழாவை நடத்துற முயற்சியிலயும், விவசாயப் பணியையும் செய்துகிட்டு இருக்காரு. எப்பவும்போல என்னால முடிஞ்ச எல்லா வேலைகளையும் செஞ்சுகொடுத்து அவருக்கு பக்கபலமா இருக்கேன்.”
சித்ரா நம்பிக்கையாக முடிக்க, ஜெயராமன் குரலிலும் வார்த்தைகளிலும் நிதானம்.
“நான், இதை ஒரு பெரிய நோயா நினைக்கல. இந்தப் புற்றுநோயில இருந்து மீண்டு வந்ததும், இந்த நோய் பத்தின விழிப்புஉணர்வுக்கு என் சோதனைக் காலத்தை பிரசாரக் கருவியா பயன்படுத்திக்க முடிவெடுத்திருக்கேன். விதைநெல் திருவிழா மூலமா 27,000 பேருக்கும் மேல இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்காங்க. மதிப்புக்கூட்டல் செஞ்சு நல்ல வருமானம் பார்க்குறாங்க. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு சீரும் சிறப்புமா விதைநெல் திருவிழாவை தொடர்ந்து நடத்துவேன். இந்த வருஷ திருவிழா வேலைகள்ல தீவிரமா கவனம் செலுத்திட்டு இருக்கேன். எனக்கு உதவி செய்யுறவங்களுக்கு எல்லாம் நன்றி” – கைகள் கூப்புகிறார் நம் மதிப்புக்கும் நன்றிக்கும் உரிய விவசாயி!
நலம் பெற்று வாருங்கள் ஐயா!
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
anda aandavan ungaluku kai kuduppar. bayappudaadeenge!
Kandippa Avar meendu varuvaar. Innum neraya
Nel Tiruvizha nadutthuvaar.
sairam ungalukku thunai iruppar
ungalai meetu tharuvar
neeengal theerka ayusha vazhveergal