அங்கக கழிவுகள் மற்றும் அங்கக (organic) பொருட்கள், முழுவதமாக மட்கிய நிலையில் மட்கிய உரம் என்று அழைக்கப்படுகிறது. கரும்புச் சக்கை, வைக்கோல் புல், களை போன்றவற்றை கொண்டு மட்கிய உரம் தயாரிக்கலாம். சராசரியாக 0.5% தழைச்சத்தும், 0.15% மணிச்சத்தும், 0.5 % சாம்பல் சத்தும் இதில் இருக்கும். பண்ணை மற்றும் தோட்டங்களில் இருந்து வரும் உரம் – ஒரு டன்னுடன் (1000 கிலோ) 10-15 கிலோ ராக் பாஸ்பேட் அல்லது சூப்பர் பாஸ்பேட் கலப்பதன் மூலம், அதன் தன்மை மேம்படுத்தப்படுகிறது.
நகரத்திலிருந்து வரும் கழிவுகளாகிய மனிதக் கழிவுகள் , நகராட்சி குப்பைகள் , சமையலறைக் குப்பைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப் படும் மட்கிய உரத்தில், 1.4 தழைச் சத்தும், 1 மணிச் சத்தும், 1.4 சாம்பல் சத்தும் இருக்கும். உரம் தயாரிக்க, 4.5 – 5.0 மீட்டர் நீளமும், 1.5-2.0 மீட்டர் அகலமும் 1-2 மீட்டர் உயரமும் கொண்ட குழிகள் உகந்தது. பண்ணைக் கழிவுகளை குழிகளில் அடுக்கடுக்காக வைத்துத் தண்ணீர் தெளிக்க வேண்டும்(தண்ணீர் அல்லது மாட்டு சாளம் அல்லது சிறுநீர் கரைசலை உபயோகப்படுத்தலாம்).
தரை மட்டத்திலிருந்து 0.5 உயரம் அளவு நிரப்பட்ட குழிகள் சுமார் 5 மாதங்களுக்கு மட்க விட வேண்டும். நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால், கழிவுகள் உரமாக உருப் பெறும்.
உரம் தயாரிக்கும் முறை :
1. கோவையில் பின்பற்றப்படும் முறை :
குப்பை மற்றும் கழிவுகளின் அளவைப் பொறுத்து குழிகளை வெட்டவும். ஒர் அடுக்கு குப்பையைக் குழியில் இடவும். பின்னர், இரண்டாம் அடுக்காக, 5-10 கிலோ மாட்டு சாணம், 25-5.0 லிட்டர் தண்ணிர் மற்றும் 0.5-1.0 கிலோ எலும்பு தூள் ஆகியவற்றை சமமாக பரப்பவும். இதே போல் பல இரண்டு அடுக்குகளை அமைக்கவும். தரையிலிருந்து 0.75 மீட்டர் அளவு உயரம் வந்தவுடன் மேலாக ஈர மண்ணைக் கொண்டு மூடிவிடவும். இக் குழிகளை நிழலின் கீழ் இருக்கச் செய்வது நல்லது.
2. பெங்களுருவில் பின்பற்றப் படும் முறை :
இந்த முறையில், சுமார் 25 செ.மீ அளவு உலர்ந்த கழிவுகளை குழிகளில் கொட்டி அதன் மேல் அடர் மாட்டுசான கரைசலை ஊற்றவும். பின்னர் அதன் மேல் உலர்ந்த கழிவுகளை பரப்பவும். இது போல் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு தரைக்கு மேல் 25செ.மீ அளவு வரும் வரை நிரப்பவும். இதை 15 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவும். பின்னர் அடர் மண் கரைசல் கொண்டு மேலாக பூசி விடவும். பின்னர் 5 மாதங்கள் கழித்து உரமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
3. இன்டோர் மக்கிய செய்முறை :
இது அதிக அளவு உரம் தயாரிக்கப் பயன்படுத்தும் முறையாகும். அங்கக குப்பைகளை மாட்டுத் தொழுவத்தில் பரப்பவும். சிறுநீர் மற்றும் மாட்டுச் சாணம், இவை இரண்டையும் சுமார் 15 செ.மீ அளவு அடுக்காக பரப்பவும். சிறுநீர் கலந்த மண்ணை தண்ணிருடன் சேர்த்து கரைசலாக்கி, அவ்வடுக்கின் மேல் 2-3 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும். சுமார் நாற்பந்தைந்து நாட்களுக்கு இதை தொடர்ந்து செய்யவும். பின்னர் அந்த குமிழின் மேல் மட்கிய உரம் ஒரு சிறு அடுக்காக பரப்பவம். ஒரு மாதத்திற்கு இந்த குமிழை அப்படியே விட்டு விடவும். பின் அதனை ஈரமாக்கிக் கிளறவும். இதை ஒரு மாதம் வைத்து பின்னர் உரமாக உபயோகிக்கலாம்.
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்