மானாவாரி சாகுபடியில் அங்கக வேளாண்மை

மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறை யை கையாண்டு நஞ்சில்லா சுத்தமான சுவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யலாம்

  • இயற்கையாக கிடைக்கும் எந்தவொரு வேளாண் இடுபொருளையும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கா வண்ணமும் மண் வளத்தையும் நலத்தையும் பேணி மனித மற்றும் கால்நடை வளத்தையும் காக்கும் வண்ணமும் பயன்படுத்தி இயற்கை வளத்தினை பாதுகாத்து மேம்படுத்தி வேளாண்மை செய்வதே அங்கக வேளாண்மை ஆகும்.
  • பயிற் சுழற்சி, ஊடுபயிர், கவர்ச்சிப்பயிர், நீர் மேலாண்மை, சரியான விதைக்கும் மற்றும் அறுவடை செய்யும் பருவம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் பூச்சி நோய்களால் ஏற்படும் பாதிப்பை வெகுவாக குறைக்கலாம்.
  • பல்வேறு இயற்கை சக்திகளான வெப்பம், குளிர்ச்சி, ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • எடுத்துக்காட்டாக தானியங்களை நன்கு வெயிலில் காயவைத்து அதன் ஈரப்பதத்தை 8ல் இருந்து 10 சதவீதம் என்ற அளவுக்கு குறைப்பதன் மூலம் பூச்சி மற்றும் பூஞ்சானங்களை தவிர்க்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி, கருவாட்டுபொறி போன்றவற்றைக் கொண்டும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
  • இயற்கை வேளாண்மையில் பயிர் செய்ய பூச்சி நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக நெல்லில் புகையான் எதிர்ப்புத்திறன் கொண்ட கோ 42, தண்டுதுளைப்பான் எதிர்ப்புதிறன் கொண்ட டி.கே.எம்.6, சோளத்தில் குருத்து ஈயைத் தாங்கி வளரும் கோ 1 மற்றும் பருத்தியில் தண்டுக் கூன்வண்டு எதிர்ப்புத்திறன் கொண்ட எம்.சி.யு3 போன்ற ரகங்களை பயன்படுத்தலாம்.
  • பூச்சிகளை தாக்கி அழிக்க வல்ல உயிரினங்களை கொண்டு பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
  • பொறி வண்டு, பச்சை கண்ணாடி, இறக்கைப்பூச்சி போன்ற உண்ணிகள், டிரைக்கோகிராமா, பிராக்கான் போன்ற ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சானங்கள் ஆகியவற்றைக் கொண்டும் பூச்சிகளை அழிக்கலாம்.
  • பயிர்களைத் தாக்கும் நோய்களை சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா போன்ற நுண்ணுயிரிகளுடன் விதை நேர்த்தி மூலமோ மண்ணில் இட்டோ கட்டுப்படுத்தலாம்.
  • பயிர்களை அழிக்கும் பூச்சிகளை இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தி சரியான தருணத்தில் கட்டுப்படுத்தலாம்.
  • தாவரங்களிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லிகளை இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தலாம்.
  • வேம்பு, நொச்சி, பூண்டு ஆகியவற்றின் கரைசல்கள் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவதை கண்டறியப்பட்டுள்ளது.
  • மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட உத்திகளை கையாண்டு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் குறைந்த பயிர் உற்பத்தி செலவில் மண்வளம் மற்றும் நீரின் தன்மை மாறாமல் பாதுகாத்து நஞ்சில்லா சுத்தமான சுவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யலாம்

இவ்வாறு தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் மை துணை இயக்குநர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *