பாரம்பரியம் மிக்க “மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகத்தை காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயிர் செய்து வருகிறார்.
இந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால் அழிந்துவிட்டன.
தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. அவையும் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான எழிலன், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக, “மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகத்தை காஞ்சிபுரத்தை அடுத்த தாமல், கீழ் அம்பி பகுதிகளில் உள்ள தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். இந்த நெல்லை வேதியியல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் சாகுபடி செய்கிறார். விவசாயத்தை மீட்பதும், இயற்கை விவசாயத்தில் விவசாயிகளை ஈடுபடுத்துவதும் தான் தனது நோக்கம் என்கிறார் எழிலன்.
இந்த நெல்லுக்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர் வந்தது குறித்து இவர் கூறும் தகவல் மிகவும் சுவராஸ்யமானது.
பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.
இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. இந்த அரிசியை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் என்றும், அரிசி சாதத்தின் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் பலப்படும் என்றும் வேளாண் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காஞ்சி எழிலன் கூறியதாவது:
தற்போது, காஞ்சிபுரம் பகுதியில் மாப்பிள்ளை சம்பா நெல்லை பயிரிட்டுள்ளேன். பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்குப் பதிலாக மீன் அமிலக் கரைசல், பூச்சி விரட்டிக் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன்.இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல்லை பயிரிட்டால் தான் அதற்கான பலன்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.இதுபோன்ற இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடுவதில் விவசாயிகள் பலரை ஈடுபடுத்த உள்ளேன். அவர்களுக்கு இந்த வகை அரிசியையும், காய்கறிகளையும் விற்பனை செய்வதில் சிக்கல் இருக்கும். அதற்காக காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கடையையும், சென்னையில் 10 கடைகளையும் அமைக்க உள்ளோம். இதற்காக, இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளோம். எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தில் விளைந்த அரிசி, காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.
இயற்கை விவசாயத்தில் பயிரிடும்போது நம் நிலத்திலேயே அதற்குத் தேவையான பூச்சி விரட்டிச் செடிகள், சத்துகளை அளிக்கும் மூங்கில், பயிர் ஊக்கிகளுக்குத் தேவையான தழைகள் ஆகியவற்றை வரப்போரத்தில் வளர்த்துக் கொள்ளலாம்.
இயற்கை விவசாயத்துக்குத் தேவையான பொருள்கள் வெளியில் கிடைத்தாலும் அவற்றை வாங்கி பயிரிடும்போது செலவு அதிகமாகும். அதற்குத் தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்து உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும்.
விவசாயத்துக்குத் தேவையான அனைத்தையும் நம் நிலத்தில் இருந்தே எடுக்க வேண்டும். ஆட்களுக்கான கூலி தவிர வேறு எதுவும் வெளியில் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் இயற்கை விவசாயத்திலும் லாபம் பார்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் எழிலன்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Ezhilan contact no kidaikuma…
Dear Sir,
i could not find it. If I get it, I will forward to you
-admin
Ezhilan contact number kidakuma
Ezhilan phone number kidaikuma my number 7810910664
எழிலன் தொலைபேசி எண் கிடைக்குமா?
எழிலன் அலைபேசி எண் கிடைக்கவில்லை. கிடைத்தால் அனுப்புகிறேன்.
-அட்மின்
nEED contact number,,,pls ?