சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் ஒன்றான மாவுப்பூச்சி மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
- இப்பூச்சியினைச் சுற்றி வெளிப்புறத்தில் வெண்மைநிற பஞ்சு போன்ற அமைப்பு காணப்படும்.
- இப்பூச்சியினை போர்வை போன்று சுற்றி இருந்து பாதுகாக்கிறது.
- இதனால் இப்பூச்சியினை எவ்வளவு ரசாயன மருந்து அடித்தாலும் போகாது.
- மல்பெரி, பப்பாளி போன்றவற்றில் இதன் தாக்குதல் அதிகம் காணப் படுகிறது.
இயற்கையில் மாவு பூச்சியை உண்ணும் பொறி வண்டுகள் இதற்கு ஒரு பதிலாகும. இதன் அடிப்படையில் தற்போது பொரி வண்டுகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த அதனை வளர்த்து வயலில் விடும் தொழில்நுட்பம் உருவானது.
இத்தொழில் நுட்பத்தினை பரவலாக ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே அவற்றின் ஆய்வகங்களில் வைத்து குறுகிய அளவில் உற்பத்தி செய்து வருகிறது.
அதனால் விவசாயிகள் இதன் பயனை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதோ, இந்த பொறி வண்டுகளை தானே தயாரித்து கொள்ளும் முறை:
பொரிவண்டு உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் / வசதிகள்
1. 20 x10 அடி பரப்பளவு அறை (2) இரும்பு வளையம் (3) பூசணிக்காய் (4) பவிஸ்டின் மருந்து (5) சுண்ணாம்பு பவுடர் (6) அடுப்பு (7) சல்லடை (8) பிரஷ் (9) தேன் (10) மெழுகு (11) மேடை. டப்பாக்கள் (மூடி காற்றுப்போகும் வண்ணம் சிறு துளைகளுடன் இருக்க வேண்டும்). இவற்றுடன் தினமும் இரண்டு நபர்கள் வேலைசெய்ய தேவைப்படும்.
பொரி வண்டுகளை உற்பத்தி செய்யும் முறை:
- அரை அடி விட்டமுள்ள டப்பாவினை எடுத்து அதில் 2 கிராம் மாவுப்பூச்சியினை பிரஷ்சால் தொட்டுவிட வேண்டும்.
- இதில் 10 நாட்கள் வயதான 10 ஜோடி கிரிப்டோலோமஸ் பொரிவண்டு அல்லது 20 ஜோடி ஸ்கிம்னஸ் என்ற பொரிவண்டினை விட்டு மூடிவைக்க வேண்டும்.
- இந்த பொரிவண்டுகள் மாவுப்பூச்சியினை உண்டு முட்டைகளை தனித்தனியாகவோ அல்லது 4 முதல் 12 முட்டைகள் சேர்ந்த குவியலாகவோ இடும்.
- அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களில் சின்ன புழுக்கள் வெளிவந்து மாவுப்பூச்சியினை உண்ண ஆரம்பிக்கும்.
- 10வது நாளில் முட்டை இடுவதற்கு விட்ட பொரிவண்டுகளை தனியாக பிரித்து வேறு டப்பாவில் விட வேண்டும்.
- இந்த இளம்புழுக்களுக்கு 1 முதல் 2 கிராம் மாவுப்பூச்சியினை தினமும் தொடர்ந்து 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும் (15 நாட்கள்).
- பின்வரும் 10 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 3 கிராம் மாவுப்பூச்சியினை தீனியாக விட வேண்டும் (25 நாட்கள் வரை).
- 25வது நாளில் புழுக்கள் கூட்டுப் புழுவாக மாறத் துவங்கும். இந்த நிலையிலும் தொடர்ந்து மாவுப்பூச்சியினை உணவாகக் கொடுக்க வேண்டும்.
- இப்போது ஒரு நாள் விட்டு ஒரு நாளைக்கு 1 கிராம் மாவுப்பூச்சி போதுமானது.
- கூட்டுப்புழு பருவம் அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் (32-35 நாட்கள் வரை).
- பின் 32 முதல் 35 நாளில் வளர்ந்த பொரிவண்டுகள் கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும்.
- இதுவரை 20 வண்டுகளுக்கு 35 கிராம் மாவுப்பூச்சி இரை தேவைப்படும்.
- இந்த பொரிவண்டுகளை ஒரு டப்பாவில் 15 வண்டு வீதம் போட்டு தேனினை உணவாக வழங்க வேண்டும்.
- இவ்வாறு தேன் கொடுத்து அடுத்த 10-15 நாட்கள் இவற்றை வளர்க்க வேண்டும்.
- இச்சமயத்தில் ஆண் மற்றும் பெண் பூச்சிகள் இணைந்து பெண்பூச்சி முட்டையிடும் பருவத்தினை அடையும்.
- இந்த 10 முதல் 15 நாட்களுக்கு தேனினை உணவாக விழுங்கும்போது ஒரு பங்கு தேனுடன் இரண்டு பங்குநீர் சேர்த்து பஞ்சில் நனைத்து அதனை பிழிந்து டப்பாவின் பகுதியில் நட்டுவிட வேண்டும்.
- இந்த பஞ்சினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அல்லது புளிப்பாகி பூச்சிகள் அதனை சாப்பிடாது.
தொடர்புக்கு: செல்வமுகிலன், கன்னிவாடி, திண்டுக்கல். 09486165088.கே.சத்தியபிரபா, 09486585997
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்