மீன் கழிவிலிருந்து பூச்சிவிரட்டி, பழக் கழிவிலிருந்து இயற்கை உரம்

கழிவாக வீசப்படும் மீன், பழங்களிலிருந்து பூச்சிவிரட்டி, இயற்கை உரம் தயாரித்திருக்கிறார் தேனி மாவட்ட விவசாயி.தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். விவசாயிகள் பலர் அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகளில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

சில நேரம் இயற்கை உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு தேவாரத்தைச் சேர்ந்த ஆர். நவநிதி என்னும் பட்டதாரி விவசாயி, கழிவுநீர் ஓடை, குப்பையில் கொட்டப்படும் மீன்கழிவு மற்றும் அழுகிய பழங்களைக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக உரம் மற்றும் பூச்சிவிரட்டியைத் தானே தயாரித்துப் பயன்படுத்திவருகிறார்.

இந்தப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்துவதன் மூலம் அவருடைய நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதன்மூலம் லாபம் சம்பாதித்து, மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் நவநிதி.

தனது வீட்டு மொட்டை மாடியில் கீரைச் செடிகள், புதினா, கொத்தமல்லி, ஓமம் போன்ற மூலிகை செடிகளையும் இயற்கை விவசாய முறையில் வளர்த்து வருகிறார்.

கழிவிலிருந்து

இதுகுறித்து அவர் பகிர்ந்துகொண்டது: “படிக்கும் காலத்திலிருந்தே இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. இதனால் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கையான உரங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன். எதற்கும் பயன்படாமல் குப்பை, சாக்கடையில் வீசப்படும் மீன்கழிவைச் சேகரித்து மீன் கரைசல் என்ற பூச்சிவிரட்டியைக் கண்டறிந்துள்ளேன். இந்தக் கரைசலைப் பயிர்கள் மீது தெளிக்கும்போது, பூச்சிகளுக்கு எந்தப் பயிர் என்று கண்டறிய முடியாமல் போகிறது.

இதனால் பயிர்களில் பூச்சி, புழுக்களால் ஏற்படும் நோய் தாக்குதல் குறைகிறது. இந்தப் பூச்சிவிரட்டியில் 60 சதவீதத்துக்கு மேல் தழைச்சத்து உள்ளது. இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

 

Courtesy: Hindu
Courtesy: Hindu

இயற்கை உரம்

இதுதவிர அழுகிய பப்பாளி, பூசணி, வாழைப்பழத்தைக்கொண்டு உரம் தயாரித்துள்ளேன். இந்த உரத்தை இடுவதன் மூலம் நுண்ணுயிர்கள் பெருகி மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. என்னுடைய மூன்று ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மெட்டாஸ் மல்லி என்று அழைக்கப்படும் காக்கரட்டான் பூத் தோட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவசாய முறையைப் பின்பற்றி வருகிறேன். ஏழு டன்வரை பூ வரத்து கிடைக்கிறது. செயற்கை உரத்தைப் பயன்படுத்தியிருந்தால் சராசரியாக ஐந்து டன் மட்டுமே வரத்து இருந்திருக்கும்.

கொய்யா, முருங்கைகளுக்கும் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து வருவதால், இதுவரை தோட்டத்தில் எந்தவொரு நோய்ப் பாதிப்பும் ஏற்படவில்லை. மற்ற விவசாயிகள் கேட்டுக்கொண்டால் நான் கண்டறிந்த பூச்சிவிரட்டி மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு குறித்து இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளேன்” என்றார்.

விவசாயி ஆர். நவநிதி தொடர்புக்கு: 09865941703.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *