முக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்!

ஞ்சில்லா காய்கறிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… அவற்றுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கட்டுப்பாடில்லாமல் ‘இயற்கை அங்காடிகள்’ எனப் பெருகி வரும் பெரும்பாலான கடைகளில்… 100 சதவிகிதம் இயற்கைக் காய்கறிகள்தான் விற்கப்படுகின்றன என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இந்நிலையில், இயற்கை விவசாயிகளே நேரடியாக விற்கும்போது நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு எல்லா இயற்கை விவசாயிகளுக்கும் அமைந்து விடுவதில்லை.

பல இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருளை வழக்கமான சந்தைகளில்தான் விற்பனை செய்து வருகிறார்கள். ஆனாலும், பல இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனையில் அசத்தி வருகிறார்கள். அத்தகையோர்தான், கோயம்புத்தூரை ஒட்டியுள்ள சின்னத்தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சி.ஆர்.ஜெயப்பிரகாஷ்-கீதாப்ரியா தம்பதி.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றும் ஜெயப்பிரகாஷ், இயற்கை விவசாயமும் செய்து… காய்கறிகளை தனது வீட்டில் வைத்தே விற்பனை செய்து வருகிறார். ஒரு விடுமுறை நாளில், குடும்ப சகிதமாக தோட்டத்தில் இருந்த ஜெயப்பிரகாஷைச் சந்தித்தோம்.

கோயம்புத்தூரில் இருந்து வடமேற்குத் திசையில் 16 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, சின்னத்தடாகம் கிராமம். குதிரை லாடம் வடிவில் மேற்குத்தொடர்ச்சி மலை அரணாக நிற்கும் இந்த ஊரைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள். எதிரும் புதிருமாக ‘சர் சர்’ என்று மண் சாரலைத் தூவிச்செல்லும் லாரிகள். வானம் தொடும் புகைப்போக்கிகள், அது ஓயாமல் கக்கும் கரும்புகை மேகங்கள். இப்படியாக சுற்றுச்சூழலை காவு வாங்கிகொண்டிருக்கும் இந்த ஊரில், விவசாயம் செய்யவே சாத்தியம் இல்லாத போது… இயற்கை விவசாயம் மூலம் அதை சாத்தியப்படுத்தி வருகிறார், ஜெயப்பிரகாஷ்.

கீரைத்தோட்டத்தில் ஆசிரியர் மனைவி

பசுமை விகடனிடம் எங்களைச் சேர்த்த இயற்கைத் தேடல்!

“எனக்குச் சொந்த ஊர் இதுதான். பரம்பரை விவசாயக் குடும்பம். அப்பா விவசாயத்தோடு செங்கல் சூளையையும் நடத்தினார். நான் படிப்பை முடிச்சதும் கொஞ்ச வருஷம் பத்திரிகைத்துறையில வேலை பார்த்தேன். அப்புறம், கல்லூரி ஆசிரியர் வேலைக்கு மாறிட்டேன். சுற்றுச்சூழல், வன உயிரினங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். விடுமுறை நாட்கள்ல கேமராவைத் தூக்கிட்டு மலைக் காடுகள்னு சுத்தப்போயிடுவேன். இயற்கை மேல இருந்த ஆர்வம்தான் என்னை ‘பசுமை விகடன்’ வாசகரா மாத்திச்சு. ஓய்வுநாட்கள்ல சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை சம்பந்தமா நடக்கிற கூட்டங்கள்ல கலந்துக்குவேன்.
செங்கல் சூளைக்குள் சோலை! 

அப்பா காலமானதும், இந்த நிலம் என்னோட பொறுப்புக்கு வந்துச்சு. விவசாயத்தையும் சேர்த்து பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம். உடனடியா விவசாயம் செய்ய முடியலை. பண்ணையில் இருந்த செங்கல் சூளை இடைஞ்சலா இருந்திச்சு. அதை இடிச்சுட்டு, விவசாயம் செய்யலாம்னு முடிவுசெய்து இடிக்க ஆரம்பிச்சேன். ‘லட்சக்கணக்கில வருமானம் கொடுக்கிற பொன்முட்டையிடும் வாத்து இந்த செங்கல் சூளை, அதைப்போய் இடிக்கலாமா? நடத்த முடியலைனா, யாருக்காச்சும் குத்தகைக்கு விட்டாகூட, ஆயிரக்கணக்கில் வாடகை வருமே’னு பலரும் யோசனை சொன்னாங்க. நான் எதையும் காதில் வாங்கிக்கலை. சூளையை இடித்து நிலத்தை சமன் பண்ணினேன். பல வருஷங்களாக சூடுபட்ட நிலம்ங்கிறதால மண் காய்ந்து இறுகிக்கிடந்தது. அந்த மலட்டு மண்ல எந்த நுண்ணுயிரியும் இல்லை. அதை பல முறை உழுது பொலபொலப்பாக்கி டன் கணக்குல செம்மண்ணைக் கொண்டு வந்து கொட்டித்தான் நிலத்தை உயிர்ப்பிச்சேன்” என்று பெருமூச்சு விட்ட ஜெயப்பிரகாஷ், தொடர்ந்தார்.

பாடம் கற்ற பேராசிரியர்!

“நிலம் தயாரானதும், இயற்கை விவசாயம் செய்றதுக்கான வழிமுறைகளைத்  தேட ஆரம்பித்தேன். அந்த சமயத்துல (2010-ம் ஆண்டு) கோயம்புத்தூர் கொடீசியா அரங்குல நடந்த அக்ரி-இன்டெக்ஸ் வேளாண்மைக் கண்காட்சியில் பசுமை விகடன் ஸ்டாலுக்குப் போனேன். அங்க, அத்தப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’  சுப்பையனைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவர்தான், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இடுபொருட்களைத் தயார் பண்ற விதங்களைக் கத்துக் கொடுத்தார். அவரோட ஆலோசனைப்படி, 10 சென்ட்ல கீரை, கத்திரி, தக்காளி, சின்னவெங்காயம் நாலையும்  நடவு செய்தேன். ஏற்கெனவே தோட்டத்தில் இருந்த நாட்டு ரக தென்னை மரங்களையும் இயற்கை முறையில் பராமரிக்க ஆரம்பித்தேன். சோதனை முறையில நடவு செய்த காய்கறிகளை வீட்டுத்தேவைக்கு வெச்சிக்கலாம்னு நினைச்சோம்” என்ற ஜெயப்பிரகாஷைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி கீதாப்ரியா.

வீட்டுக்காய்கறி வியாபாரமாகியது!

“அப்படி இவர் கொண்டு வர்ற காய்கறிகள்ல வீட்டுக்கு எடுத்தது போக மீதியை அப்பப்போ பக்கத்து வீடுகளுக்கு இலவசமா கொடுத்துடுவேன். அதை சமைச்சுப் பார்த்தவங்க எல்லாரும், ‘ரொம்ப ருசியா இருக்கு. ரெண்டு மூணு நாள் கூட வாடறதில்லை’னு சொல்லி ‘எங்களுக்கு இனிமே ரெகுலரா விலைக்கே காய்களைக் கொடுங்க’னு கேட்க ஆரம்பிச்சாங்க.  அப்பறம்தான் கொஞ்சம் கொஞ்சமா சாகுபடிப்பரப்பை அதிகரிக்க ஆரம்பித்தோம். இப்போ முக்கால் ஏக்கர்ல காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்து விற்பனை செய்துக்கிட்டிருக்கோம்” என்றார்.

தயாராக உள்ள இயற்கை உரம்

ஊடுபயிராக விளையும் காய்கறிகள்!

தொடர்ந்து பேசிய ஜெயப்பிரகாஷ், “மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலம். ஒரு ஏக்கர்ல தென்னை இருக்கு. 20 சென்ட் இடத்துல பண்ணை வீடு, களம் இருக்கு. மீதமுள்ள இடங்கள்ல சீதா, நாவல், கொய்யா, எலுமிச்சை, திராட்சை, சப்போட்டானு பழமரங்கள் இருக்கு. இந்தச் செடிகளுக்கு இடையிலதான் காய்கறி, கீரைகளை சாகுபடி செய்றோம். வெண்டை, தக்காளி, கத்திரி, பூசணி, அவரை, சுரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைகோஸ், பொன்னாங்கண்ணி, புதினானு 30 விதமான பயிர்கள் இருக்கு. மகோகனி, குமிழ், நீர்மருது, வேங்கை, செம்மரம், ஈட்டி, சந்தனம், நோனி, புன்னை, நாகலிங்கம், மகிழம், மருதுனு பலவகையான மரங்களும் இருக்கு. முழுநேர விவசாயியா இல்லாததால, இப்போதைக்கு பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம்னு எல்லாத்தையும் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துறோம்.

வாரந்தோறும் வருமானம்!

வாராவாரம் சனிக்கிழமை மட்டும் காய்கறிகளை விற்பனை செய்றோம். வாரம் 60 கிலோ அளவுக்கு காய்கறிகளையும் 100 கட்டு கீரைகளையும், 200 தேங்காய்களையும் விற்பனை செய்றோம்.

எந்த காயா இருந்தாலும் கிலோ 50 ரூபாய்னும் ஒரு கட்டு கீரை 15 ரூபாய்னும், ஒரு  தேங்காய் 15 ரூபாய்னும் விலை வைத்து விற்பனை செய்றோம். அந்தக் கணக்குல வாரத்துக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகுது. எங்களுக்கு இடுபொருட்கள், போக்குவரத்துக்கே நிறைய செலவாகிடும். எல்லாம் போக வாரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் லாபமா நிக்கும். இந்த லாபம் குறைவுனாலும், விஷமில்லாத காய்கறிகளை எல்லோருக்கும் கொடுக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது” என்றார்.

நிறைவாகப் பேசிய ஜெயப்பிரகாஷ்-கீதாப்ரியா தம்பதியர், “விவசாயம் சொல்லிக்கொடுக்க இங்க யாரும் இல்லாத சூழலில் என் போன்றவர்களுக்கு  முன்னோரின் தொழில்நுட்பங்களை, பழைய தகவல்களை பசுமை விகடன்தான் மீட்டுக் கொடுத்துக்கிட்டிருக்கு. நேரடி விற்பனைங்கிற உந்து சக்தி கூட எங்களுக்கு பசுமை விகடன் கொடுத்ததுதான். 10-ம் வருஷம் வரை மலர்ந்துள்ள பசுமை விகடன் பல நூறு வருஷங்கள் விவசாயிகளுக்கு சேவை புரியணும்” என்று வாழ்த்துச் சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு,  சி.ஆர்.ஜெயப்பிரகாஷ்,   செல்போன்: 09894259100 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “முக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *