முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்

சிக்கிம் மாநிலம்100% இயற்கை விவசாயம் மாற திட்டம் இருப்பதை பற்றி 2012 ஆண்டே தகவல் படித்தோம். இப்போது அந்த மாநிலம் இந்த இலட்சியத்தை அடைந்து விட்டது மட்டும் இல்லாமல் பிரதமர் மோடியிடம் இருந்து சிறப்பு பரிசையும் வென்று இருக்கிறது. இதை பற்றிய செய்தி ஹிந்துவில் இருந்து….

முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்

இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.

முதல்வரின் முழு முயற்சி

இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.

வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.

மத்திய மானியம் மறுப்பு

ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.

உயிர் கிராமங்கள்

இதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.

இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.

தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.

எடுபடாத எதிர்ப்பு

அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.

வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.

modi-sikkim-story_647_011816085641

இயற்கை உரத் தொழிற்சாலை

பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.

ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

sikkim

எப்போது மீள்வோம்?

“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன்.

மெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது. தமிழகம்?

நன்றி:ஹிந்து

மேலும் படிக்க:


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்

  1. Sankar says:

    உன்மைதான் அந்தமாநிலம் போல் இங்கேயும் ஒருவிவசாயின் மகனே விவசாயியோ முதல்வர் ஆநமட்டும்தான் நடக்கும்.விவசாயத்தை முகவும் விரும்புகிரேன் அனைத்து விவசாயிகலும் இயக்கை விவசாயத்திர்குமாறிநால் நம் இலயசமுதாயம் கொடுர நோய்கல் வாராமல் காக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *