லாபம் தரும் சுழற்சியைத் தடுக்கலாமா?

இயற்கைச் சுழற்சியில் ஈடுபடும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா முதல் யானைகள்வரை தமக்கான பணியை விடாமல் செய்கின்றன. அவற்றுக்குரிய இடத்தையும் தேர்வு செய்துகொள்கின்றன, தங்களுக்கான வாய்ப்பையும் உருவாக்கிக் கொள்கின்றன. தமிழ் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் இடம் என்பதை நிலம்/வெளி (Space) என்றும் வாய்ப்பு என்பதை பொழுது/காலம் (Time) என்றும் கொள்ளலாம்.

சுழற்சியும் விளைச்சலும்

சுழற்சி அல்லது சுழல்வை அடிப்படையாகக் கொண்டு எந்த இடத்தில், எத்தனை முறை ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பண்ணையை வடிவமைக்க வேண்டும். ஒரு கோழிப் பண்ணை வைப்பதற்கான இடம் எவ்வளவு முக்கியமோ, அந்த இடம் மற்ற அமைப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதும் முக்கியம். அது மட்டுமல்ல அந்தக் கோழியின் எச்சத்தை எப்படி உரமாக மாற்றப் போகிறோம் என்பதும் முக்கியம்.

ஒரு புறாக்கூண்டு அமைக்கிறோம் என்றால், அது ஒரு பாஸ்பேட் தொழிற்சாலையாகவும் இருக்கும். மாட்டின் சாணமானது மண்புழுவாக மாறுதல்; மண்புழுக்கள் கோழிக்கு உணவாக மாறுதல்; கோழிகளிடமிருந்து முட்டை கிடைத்தல் என்ற சுழற்சி இங்கு மிக முக்கியம். சுழற்சியின் எண்ணிக்கை கூடக்கூட விளைச்சலின் அளவு அதிகமாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுழற்சியைத் தடுக்க வேண்டாம்

நாம் செய்யும் செயல்கள் சுழற்சியைத் தடுக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். குறிப்பாகச் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதன் மூலம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறோம். ஆனால், வாய்க்கால் பாசனத்தின்போது எண்ணற்ற பறவைகள் நீரை அருந்துகின்றன. அவை பண்ணைக்கு வரும் பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. வாய்க்கால் நீர் வழிந்த பின்னர் உள்ள ஈரத்தில் தேனீக்களும் குளவிகளும் நீர் அருந்துகின்றன.

குளத்து நீரையும் வெள்ளமாகப் பாயும் நீரையும் குளவிகளால் அருந்த முடியாது, ஈரத்தில் இருந்தே அவை தனக்கான நீரைப் பெற முடியும். ஆனால், சொட்டு நீர்ப் பாசனம் மூலம் குளவிகளுக்கான நீரே இல்லாமல் செய்துவிட்டோம். அவைதாம் எண்ணற்ற தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துபவை. ஆகவே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நுட்பமான கவனிப்பு தேவையாக உள்ளது.

பண்ணையை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த அமைப்பில் ஏற்கெனவே கிடைத்துக்கொண்டிருக்கும் நன்மைகளை நாமே தடுத்துவிடக் கூடாது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *