கடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், 35 ஆயிரம் எக்டேருக்கும் மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாட்டுச்சாணம், வேப்பம்புண்ணாக்கு உட்பட பாரம்பரிய இயற்கை உரங்களை மட்டுமே முன்பு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.பின்னர், பல்வேறு காரணங்களால், ரசாயன உரங்களுக்கு மாறினர். ரசாயன உரங்களால் சாகுபடியில் விளைச்சல் அதிகரித்தாலும், தொடர் பயன்பாட்டால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு, தண்ணீரின் தேவையும் அதிகரித்தது.
தண்ணீர் பற்றாக்குறை
கடந்தாண்டு பொய்த்த பருவமழையினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும்பாலான தென்னந்தோப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகள் போர்வெல் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டும் பலனில்லை.
இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மரங்கள் காய்ந்தன. பிற பகுதிகளில், வறட்சியின் பாதிப்பால், 80 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காப்பாற்றும் இயற்கை
பஞ்சகவ்யா, மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த தோப்புகளில், மரங்கள் பசுமையுடன் காணப்படுவதுடன், மகசூல் பாதிப்பும் இல்லையென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ரசாயன உர பயன்பாட்டினை தவிர்த்து, அனைத்து விவசாயிகளுமே பாரம்பரிய சாகுபடி முறைக்கு மாறினால் மட்டுமே எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டினை சமாளித்து விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்கின்றனர்.
மண்ணின் வளம் மேம்படும்
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:
- விவசாயிகள் பெரும்பாலும் மண்ணின் வளம், நீர்பயன்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளாமல், உயர் விளைச்சல் மற்றும் லாபத்தினை மட்டுமே எதிர்பார்த்து ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
- அவற்றின் விளைவு, இன்று ஏற்பட்டுள்ள வறட்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 40, 50 ஆண்டுகள் பலன் கொடுக்க வேண்டிய தென்னை மரங்கள் பட்டுபோய் நிற்கின்றன.
- ரசாயன உர பயன்பாட்டினால் உயர் விளைச்சலை அறுவடை செய்து, லாபம் ஈட்டலாம் என்று காத்திருந்த விவசாயிகள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது.
- இனியாவது விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வேளாண் முறைக்கு மாற வேண்டும்.
- இல்லையெனில் மேலும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
- விவசாயிகள் இயற்கை உரங்களுக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் சாணம், சிறுநீர் இவற்றினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பஞ்சகவ்யா, ஜூவாமிர்தம் போன்றவற்றினை தயாரித்து பயன்படுத்தலாம்.
- மேலும் வீடுகளில் மீதமாகும் காய்கறி உணவுக்கழிவுகள், சாணம் மற்றும் தோப்புகளில் கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரமும் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
- இதுபோன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தண்ணீரின் பயன்பாடு பாதியாக குறைவதுடன், மண்ணின் வளமும் மேம்படுகிறது.
- தண்ணீரின் பயன்பாடும் பாதியாக குறைக்கப்படுவதால், கிணறுகளிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- இதனால், மரங்களுக்கு தடையில்லாமல் சீராக தண்ணீர் பாய்ச்ச முடியும். அதுமட்டுமில்லாமல் விவசாயத்தில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால், நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்