வானம் பார்த்த பூமியில் குண்டு மிளகாய் சாகுபடி!

து வானம் பார்த்த பூமி… மழைதான் எங்க சாமீ…’’ என மழையை நம்பி விவசாயம் செய்யும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனி அடையாளம் குண்டு மிளகாய். இந்த மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக விளைந்து கிடக்கும் மிளகாய்தான் விவசாயிகளின் வாழ்க்கையைச் செழிப்பாக வைத்துக் கொண்டிருக்கிறது.

மானாவாரி விவசாயமாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்தித்தான் மிளகாய் சாகுபடி செய்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் குண்டு மிளகாய் உற்பத்தி செய்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார், தங்கவேல்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரம் மும்முடிசாத்தான் கிராமத்தில் இருக்கிறது, தங்கவேலுவின் நிலம். அந்தி சாயும் நேரத்தில் அவரது நிலத்தில் இறங்கினோம். காய்ந்த மிளகாய்ப் பழங்களை அறுவடை செய்துகொண்டிருந்தனர், பெண்கள். அவர்களோடு அறுவடைப் பணியில் முனைப்பாக இருந்த தங்கவேலுவிடம் பேசினோம்.

வழிகாட்டிய பயிற்சி!

‘‘இந்தப் பகுதியில மிளகாய்தான் பெருங்கொண்ட விவசாயம். பரம்பரையா விவசாயக் குடும்பம். எனக்கு இருபது ஏக்கர் நிலம் இருக்கு. இறவை, மானாவாரி ரெண்டு முறையிலயும் விவசாயம் இருக்கு. இறவையில கரும்பும், மானாவாரியில மிளகாயும் சாகுபடி பண்றேன். இப்ப, மூணு ஏக்கர்ல கரும்பு, அரை ஏக்கர்ல எள்ளு, ரெண்டு ஏக்கர்ல மிளகாய் இருக்கு. ரெண்டு ஏக்கர்ல குதிரைவாலி நடுறதுக்காக நாத்து போட்டிருக்கேன். மத்த நிலம் காலியாத்தான் இருக்கு. நானும் ஆரம்பத்துல ரசாயனத்தைக் கொட்டித்தான் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

நான், விவசாயத்துல நவீனமா ஏதாவது செய்யணும்னு ஆர்வம் உள்ள ஆளு. ‘பசுமை விகட’னோட வாசகர். அதுல, வந்த நம்மாழ்வார் கட்டுரைகளைப் படிச்சு, இயற்கைக்கு மாறுற யோசனையில இருந்தேன். ஆனா, ‘எப்படி செய்றது’னு கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. அந்த சமயத்துலதான் எட்டிவயல் கிராமத்துல பசுமை விகடனும், மாவட்ட நிர்வாகமும் ஒரு களப்பயிற்சியை ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நம்மாழ்வார் அய்யா கொடுத்த அந்தப் பயிற்சியில கலந்துக்கிட்ட பிறகுதான், இயற்கைக்கு மாறினேன். அதுக்கப்பறம் என் நிலத்துல மண்வளம் கூடுனதோடு, சாகுபடிச் செலவும் குறைஞ்சிடுச்சு” என்று முன்னுரை கொடுத்த தங்கவேலு தொடர்ந்தார்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த கலப்புப் பயிர்!

“பொதுவா, எந்த விவசாயம் செஞ்சாலும் தனிப்பயிரா செய்யக் கூடாது. கூட நாலு பயிர்களைக் கலந்து விதைக்கணும். இதைத்தான் நம்ம பாட்டன், பூட்டன் காலத்துல செஞ்சாங்க. ஆனா, நாம அதை விட்டுட்டு ஒத்தைப் பயிரா சாகுபடி செய்றப்ப, வயலுக்கு வர்ற மொத்தப் பூச்சியும் பயிரை உண்டு இல்லைனு பண்ணிட்டுப் போயிடுது. நான், மிளகாய்க்கு இடையில ஊடுபயிரா, கத்திரி, தக்காளி, கொத்தவரை போட்டிருக்கேன். வரப்பு ஓரங்கள்ல அகத்தி, ஆமணக்குனு பல பயிர்களை நடவு செஞ்சிருக்கேன். வயலுக்கு வர்ற பூச்சிகள், ஆமணக்குச் செடியிலயும், கத்திரி மாதிரியான மத்த செடிகள்லயும் உட்காந்துக்கிறதால, மிளகாய்ச்செடி, பிரச்னை இல்லாம வளருது’’ என்ற தங்கவேலு, நிறைவாக,

ஒரு ஏக்கரில் 1,300 கிலோ!

“மிளகாயைப் பொறுத்தவரை பிக்கல் பிடுங்கல் இல்லாத பயிர். அறுவடைக்கு வந்த பிறகு, பத்து ஆளுங்களை விட்டா போதும். அஞ்சு நாள்ல ஒரு ஏக்கர்ல இருக்கிற பழத்தைப் பொறுக்கிடலாம். இது மாதிரி ஆறு பறிப்பு இருக்கும். இதுல, வேலையாளுங்க கூலிதான் அதிகமான செலவு. மத்தபடி பராமரிப்புக்கு அவ்வளவா செலவாகாது. நாட்டு ரகங்கிறதால அறுவடை சமயத்துல ,அடுத்த பட்டத்துக்குத் தேவையான விதையை எடுத்து வைச்சிடுவோம். இதனால, விதையை விலை கொடுத்து வாங்குற செலவு மிச்சமாகுது.

மகசூல்னு பாத்தா, ஒரு ஏக்கர்ல சராசரியா 1,300  கிலோ அளவுக்கு காய்ந்த மிளகாய் கிடைக்கும். சராசரியா ஒரு கிலோ வத்தல் 70 ரூபாய்னு விற்பனையாகுது. அந்தக் கணக்குல பாத்தா 91 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல கூலி, மத்த செலவெல்லாம் சேத்து 41 ஆயிரம் ரூபாய் போனாலும், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபமா  நிக்கும்.

ஊடுபயிரா போட்ட பருத்தி மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மத்த பயிர்கள்ல பூச்சி தின்னது, பறவை தின்னது எல்லாம் போக அறுவடை செஞ்சா, 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தமா கணக்குப் பார்த்தா ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. சில நேரங்கள்ல நல்ல விலை கிடைச்சா, மிளகாய்ல 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.  மானாவாரியில இந்த அளவு லாபங்கிறது பெரிய விஷயம். இப்போ , என்னைப் பாத்து எங்க பகுதி விவசாயிகள் நிறைய பேர் இயற்கை விவசாயத்துக்கு மாற முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்’’ என்றபடி விடை கொடுத்தார்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யும் முறை பற்றி தங்கவேல் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

“தேர்வு செய்த நிலத்தை சித்திரை மாதத்தில்  புழுதியாகுமாறு கோடை உழவு செய்து… ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி வைக்க வேண்டும்.

புரட்டாசியில் மழை கிடைத்ததும், உரத்தை இரைத்து உழவு செய்ய வேண்டும். பிறகு, 15 அடி இடைவெளியில் வடிகால் வசதிக்காக பார் அமைக்க வேண்டும். அடுத்த மழை கிடைத்தவுடன் நேரடி விதைப்பாக நாட்டு ரக குண்டு மிளகாய் விதையை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைத்த 8-ம் நாளில் முளைப்பு தெரியும்.

மிளகாய் சாகுபடியில் வெட்டுக்கிளிகள் தொந்தரவு அதிகம் இருக்கும். அதைத் தடுப்பதற்கு மிளகாய் விதைக்கும்போதே கீரை விதைகளைக் கலந்து விதைக்க வேண்டும். இதனால் வெட்டுக்கிளிகளின் கவனம் கீரைகள் மீது திரும்பி, மிளகாய் நாற்றுகள் தப்பித்துக்கொள்ளும். 15-ம் நாள் களை எடுத்து தூர் அணைக்க வேண்டும். தொடர்ந்து 25-ம் நாள் களை எடுக்க வேண்டும். செடி வளர்ந்து நிழல் கட்டும் வரை களை எடுத்துக் கொண்டிருந்தால்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

செடிகளின் எண்ணிக்கையைப் பராமரிப்பதற்காக, களை எடுக்கும்போதே நெருக்கமாக இருக்கும் செடிகளைக் கலைத்து விட வேண்டும். 90-ம் நாள் பூவெடுக்கும். அப்போது, பூ உதிராமல் இருப்பதற்காக, பஞ்சகவ்யா (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற கணக்கில் கலந்துகொள்ள வேண்டும்) தெளிக்கவேண்டும்.

நிலத்தில் ஈரம் இருப்பதைப் பொறுத்து அவ்வப்போது ஜீவாமிர்தத்தை ஸ்பிரேயர் மூலமாகத் தெளிக்கலாம். மார்கழியில் காய் காய்த்து, தை மாதம் முதல் வாரத்தில் இருந்து பழம் எடுக்கலாம்.”

சுருட்டை, பொத்தப்பூச்சி பிரச்சனைக்கு தீர்வு!

“மிளகாய் விவசாயத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரச்னைகள்தான். ஒன்று பொத்தபூச்சி (காய்த்துளைப்பான்).  மற்றொன்று சுருட்டைநோய். மார்கழி மாதம் பனி அதிகமாக இருக்கும்போது சுருட்டைநோய் தாக்கும். அதைத்தடுக்க, இலைதழைகளின்மேல் ஊறவைத்த அமுதக்கரைசலைத் தெளித்தாலே போதுமானது. மார்கழிக் கடைசியில் காய்களை பொத்தல் பூச்சிகள் தாக்கும். இது, காய்களில் துளை போட்டு விடும். அந்த நேரத்தில் பூச்சி விரட்டியைத் தெளித்தால் இதை சமாளித்து விடலாம். அல்லது நிலத்தில் பரவலாக சாமந்திப் பூக்களை நட்டு வைப்பதன் மூலமாக இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.

சேதாரத்தைக் குறைக்கும் கலப்புப் பயிர்!

“மிளகாய்க்கு ஊடுபயிராக கொத்தமல்லி, கத்திரி, தக்காளி, கீரைனு பல பயிர்களைப் பருவத்துக்கு ஏத்த மாதிரி செஞ்சிக்கிட்டு வரலாம். எலித்தொல்லை அதிகமாக இருக்கிறதால தக்காளியை அதிகம் நடமாட்டேன். மாசி மாசம் மிளகாய் மகசூல் குறைய ஆரம்பிக்கும். அது பருத்திக்கு ஏற்ற காலகட்டம். அந்த நேரத்துல ஊடுபயிரா பருத்திவிதையை ஊணிடுவேன். மிளகாய் மகசூல் முடிந்ததும்… பருத்தி, மகசூலுக்கு வரத்தொடங்கும்.

பருத்தி மூலமாகவும் ஒரு வருமானத்தை எடுத்துக்கிட்டு, மறுபடியும் சித்திரையில உழுது போட்டுடுவேன். கலப்புப்பயிர்களை விதைக்கிறது மூலமா, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கறதோட, பூச்சி தாக்குதல்ல இருந்து மிளகாய்க்குப் பாதுகாப்பு கிடைக்குது. போன போகத்துல, தர்பூசணி, கொத்தமல்லி, கொத்தவரை மூணையும் போட்டிருந்தேன். தர்பூசணி மூலமா நல்ல வருமானம் கிடைச்சது’’ என்கிறார், தங்கவேல்.

உரமல்ல… உணவு!

‘‘ஜீவாமிர்தம், பயிருக்கான உரம்னு ரொம்ப பேர் நினைக்கிறாங்க. அது, பயிருக்கான உரம் இல்லை. மண்ணுல இருக்கிற நுண்ணுயிர்களுக்கான சாப்பாடு. இதைச் சாப்பிட்டுட்டு உற்சாகமா வேலை செய்ற நுண்ணுயிர்கள் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை மண்ணுல இருந்து எடுத்துக் கொடுக்கும். உரங்களைப் போட்டுப் போட்டு இந்த வேலைக்காரங்களைத்தான் நாம கொலை பண்ணிக்கிட்டு இருக்கோம். வேலை செய்றவனை கொன்னுட்டு, வேலை நடக்கலியேனு புலம்பி என்ன பிரயோசனம்?”  என்று கேட்கிறார், தங்கவேல்.

‘ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!’

‘‘மானாவாரி விவசாயிகள் அமுதக்கரைசலைப் பயிருக்குக் கொடுக்க முடியாது, என்கிறார்கள். ஆனால், நான் அமுதகரைசலைத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதுக்காக ரொம்ப மெனக்கெடுறது இல்ல. மாட்டுத் தொழுவத்துல விழுகிற சிறுநீர் மொத்தமும், ஒரு பள்ளத்துல விழுகிற மாதிரி அமைச்சிருக்கேன். அந்தப் பள்ளத்துல வாளியை வெச்சு, சிறுநீரை எடுத்துக்குவேன். அதுல கைப்பிடி அளவு வெல்லம் போட்டு, கொஞ்சம் புதுசாணியைப் போட்டு கலக்கி… குப்பைமேனி, எருக்கு மாதிரியான நிலத்துல கிடைக்குற மூலிகைச் செடிகளை அந்தக் கரைசல்ல போட்டு ரெண்டு மூணு நாள் வெச்சிடுவேன்.

செடிகள்ல இருக்கிற சாறு, கரைசல்ல இறங்கியிருக்கும். அதுக்குப் பிறகு அதை எடுத்து, வேப்பங்குலை வெச்சி, பயிருக்குத் தெளிக்குறேன். இது அமுதக்கரைசலாவும், மூலிகைப் பூச்சி விரட்டியாவும் செயல்படுது. அதனால, என் வயல்ல பூச்சித்தாக்குதல் தொல்லை அதிகமா வர்றது இல்லை’’ என்கிறார், தங்கவேலு.

தொடர்புக்கு,தங்கவேல்,  செல்போன்: 8098954116

நன்றி: பசுமை விகடன்

 

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *