விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க., செயல்படுகிறது: நம்மாழ்வார் காட்டம்

“”பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது,” என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நேற்று நடந்தது.

“நமது நெல்லைக் காப்போம்’ இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வரவேற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிடவேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மற்றும் வேளாண் தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வரவே வேளாண் மன்றம் பயன்படும். விவசாயிகளுக்கு விதை மற்றும் வேளாண் உறவில் உள்ள உரிமை, அறிவு பகிர்வை இச்சட்டம் முடக்கிறது.

ஒட்டு மொத்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மனித வளங்களை, இயற்கை வளங்களை உறிஞ்சுவதற்கு தமிழக அரசை பயன்படுத்துகின்றன.அதன் விளைவாகவே அரசு இச்சட்டத்தை முன்வைக்கிறது. வேளாண் பல்கலையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் 90 சதவீதம் மரபணு, மாற்றுத் தொழில்நுட்பம் போன்றவை, பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்துக்காக அவர்களின் நிதியுதவியுடன் நடத்தப்படுகிறது.

“வேளாண் மன்றச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரக்கூடாது’ என்பதற்காக மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டமும், கலெக்டர்களிடம் மனுவும் வழங்கப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து நம்மாழ்வார் நிருபர்களிடம் கூறியதாவது:வேளாண் மன்றச்சட்டத்தில் விவசாயி என்று ஓர் இடத்தில் கூட வார்த்தை இல்லாத நிலையில், வேளாண் பட்டதாரி அல்லாதோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினால், சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கலாம் எனவும், இச்சட்டத்தை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு ஆண்டாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *