“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி வருகிறது,” என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழா கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி கே.எம்.ஆர்., அரங்கத்தில் நடந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
“இந்தியாவில் ஆண்டுக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரை விவசாய நிலங்களில் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. பறவை இனங்கள் 200க்கும் அதிமாக உள்ளது. பூச்சிகள், சிலந்தி மற்றும் குளவிகளை தின்று பறவைகள் உயிர் வாழ்கிறது. ஆனால், வயல்களில் போடப்படும் மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிவதால், பறவைகளும் உணவின்றி அழிந்து வருகிறது. முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் எல்லாம் நஞ்சாக மாறி வருகிறது.
இயற்கை சுழலை புரிந்து கொண்டு விவசாயம் மேற்க்கொள்ள வேண்டும்.இந்தியாவில் ஐந்து முதல் 10 சதவீதம் வரைதான் பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால் 55 சதம் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், உணவு மட்டுமல்ல, மனிதன் உடுத்தும் துணி வகைகள் கூட நஞ்சாக மாறி வருகிறது.மனிதர்கள் அனைவரும் முடிந்தவரை மரங்களை நடவேண்டும். இயற்கையான விவசாயத்தை மேற்கொண்டால்தான், மனிதனை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.” இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்