வீடுகளுக்கு நேரடி விற்பனை சாதிக்கும் என்ஜினீயர் விவசாயி

மூன்றரை ஏக்கர் நிலத்தில் அளவெடுத்தாற்போல ஆங்காங்கே பிரித்து கத்தரி, வெண்டை, தக்காளி, பருப்பு கீரை பயிரிட்டு தேவைக்கேற்ப அறுவடை செய்து விற்பனை செய்கிறார் மதுரை கப்பலுாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவக்குமார்.
அவர் கூறியதாவது:

  • சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். ஐந்தாண்டுகளுக்கு முன் சொந்தஊருக்கு வந்து விவசாயத்தை ஆரம்பித்தேன்.
  • ஆர்கானிக் விவசாயம் தான் இலக்காக வைத்திருந்தேன். ஒவ்வொன்றாக மெல்ல கற்றுக் கொண்டேன். ஒன்றரை ஏக்கரில் குதிரைவாலி, சாமை, வரகு, தினை, காடைக்கன்னி என குறுந்தானியங்கள் ஏதாவது இரண்டை பயிரிடுகிறேன்.
  • அவற்றை விதையாகவும், அரிசியாக பிரித்தும் விற்பனை செய்கிறேன். குதிரைவாலி மதுரை 1 ரகத்தை, விவசாய கல்லுாரி பேராசிரியர்கள் அறிவுறுத்தியபடி பயிரிட்டு விளைச்சல் எடுத்தேன். வேளாண் பல்கலைகழகத்தின் ‘சாம்பியன் பார்மர்’ பாராட்டு கிடைத்தது.
  • 75 சென்டில் பீர்க்கு, கொத்தவரை, அவரை, முள்ளங்கி, கடலை, தக்காளி, பாகற்காய் பயிரிட்டுள்ளேன். இதுவும் ஒரே முறையாக அறுவடை எடுக்காமல் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி மாற்றி பயிரிட்டுள்ளேன். இதனால் ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு காய்கறியை அறுவடை செய்கிறேன்.
  • மீதியுள்ள நிலத்தில் கடலை, உளுந்து, பாசிப்பயறு, துவரை விளைகிறது. தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக பயிரிட்டு அறுவடை செய்து வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். பயிர்களுக்கு ரசாயன உரம் பயன்படுத்துவதில்லை. பயோ பெர்டிலைசர், நுண்ணுயிர்களை பயன்படுத்துகிறேன்.
  • வேப்பங்கொட்டையை அரைத்து ஊறவைத்து பயிர்களுக்கு தெளிக்கிறேன். மாட்டின் கோமியத்தை இலைவழி ஊட்டமாக தெளிக்கிறேன். தக்காளியில் பூச்சி அதிகம் வராது. அந்தந்த பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்டத்தை பிரித்து தருவதால் விளைச்சலும் நன்றாக உள்ளது. நகர்ப்புற பகுதியில் கிடைக்கும் நகராட்சி குப்பை உரம், மாட்டுச்சாணம் இவற்றை அதிகம் பயன்படுத்துகிறேன்.
  • குறுகிய கால அறுவடையாக பருப்பு கீரை, பாலக் கீரை விற்பனை செய்கிறேன். அனைத்து காய்கறிகளும் குறைந்தது 5 கிலோ அளவில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்கிறேன்.
  • இது ஆர்கானிக் விவசாயம் என்பதற்கான சான்றிதழ் பெற்றுள்ளேன். என்னிடம் இல்லாத காய்கறிகளை பக்கத்து ஆர்கானிக் தோட்டத்தில் நியாயமான நிலைக்கு வாங்கி விற்பனை செய்கிறேன். இதனால் எனக்கு லாபம் இல்லை என்றாலும் எனது காய்கறிகளோடு சேர்ந்து விற்பதால் மற்றவர்களுக்கும் லாபம் கிடைக்கும்.
  • நிலக்கடலையை எண்ணெய்யாக ஆட்டியும் விற்பனை செய்கிறேன். அதில் கிடைக்கும் புண்ணாக்கை செடிகளுக்கு உரமாகவும், மாடுகளுக்கு தீவனமாகவும் தருகிறேன். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதையே மற்றவர்களுக்கும் தரவேண்டும் என்பதால் ஆர்கானிக் காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்கிறேன் என்றார்.

தொடர்புக்கு – 8939710859

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *