வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயம்!

`ஊருக்குக் கடைசி உலகம்பட்டி’ என்ற சொலவடை செட்டிநாடு நகரத்தார் மத்தியில் பிரபலம். `ஊருக்குக் கடைசியா உள்ள உலகம்பட்டி ஊரிலா பொண்ணு எடுக்கப் போற’ என்று கிண்டல் அடிப்பார்களாம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் விவசாயத்தில் நல்ல லாபம் பார்த்து வருகிறார் சிவராமன் என்பவர்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் உள்ளது உலகம்பட்டி கிராமம். இப்பகுதியில் பலரும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இயற்கை விவசாயத்தில் வெற்றி நடைபோடுகிறார்.

இயற்கை விவசாயி சிவராமன்

சிவராமனிடம் பேசினோம். ” என்னுடைய தாத்தா இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தார். என் அப்பா அதை மாற்றி ரசாயன உரம் பயன்படுத்தி நல்ல லாபம் எடுத்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அதே லாபம் எடுக்க முடியவில்லை. எனக்கு 2002-ம் ஆண்டில் நம்மாழ்வார் ஐயாவின் அறிமுகத்தால் அவருடைய கூட்டங்களில் கலந்துகொண்டு என்னை இயற்கை விவசாயம் மீது ஆர்வப்படுத்திக்கொண்டேன். தேடல் மட்டும் இருந்தது விவசாயம் செய்ய ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து வெளிநாடுகளிலும் வேலை செய்தேன். எங்கு சென்றாலும் ஐயாவின் காணொலிகளையும் புத்தகங்களையும் கைவிடவில்லை.

ஊருக்கு வந்த பின், 2014-ல் முழுமையாக இயற்கை விவசாயத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை இயற்கை முறையில் பதப்படுத்தினேன். அரை ஏக்கருக்கும் குறைவாக பாரம்பர்ய நெல் வகையான மாப்பிள்ளைச் சம்பா நட்டு 14 மூட்டை நெல் எடுத்தேன். அதற்குப் பின் இலும்பைப்பூ சம்பா, கருடன் சம்பா, ஆத்தூரு கிச்சடி சம்பா என்று தொடர்ந்து பாரம்பர்ய நெல் வகைகளை இயற்கை விவசாயத்தில் அறுவடை செய்தேன்.

இயற்கை முறையில் பூங்காரு நெல்

இயற்கை முறையில் பூங்காரு நெல்

தொடர்ந்து இயற்கை விவசாயம் கை கொடுக்க கூடுதலாக 7 ஏக்கர் ஒப்பந்த அடிப்படையில் நிலம் பெற்று மொத்தம் 9 ஏக்கர் இயற்கை விவசாயம் செய்கிறேன். தற்போது பூங்காரு நெல், வாழை, கேப்பை, கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் போட்டுள்ளேன். நெல் விவசாயத்தைப் பொறுத்தவரை நிலத்தில் தொழு உரம் போட்டு வரப்பில் உளுந்து விதைப்பேன். உயிரி உரத்துடன் குப்பை கலந்து நிலத்தில் போட்டு நல்ல பதமாக்குவேன். நடவு, களை எடுப்பு முடிந்தபின். குறிப்பிட்ட கால அளவு முடிந்த பின்னர் வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம், உயிரி உரம் போடுவேன்.

பயிர் உயர வளர பஞ்சகவ்யம் ஸ்பிரே பண்ணுவேன். வாமடையில் குழி தோண்டி பசுந்தாள் இலை, சாணம், பனம்பழம், வேம்பம் புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து துணி பையில் கட்டி வைத்துவிடுவேன். இதனால் தண்ணீர் மூலம் பயிர்களுக்குச் சென்று நல்லபடியாக கிளையடிக்கும்.

இயற்கை முறையில் கேழ்வரகு

இயற்கை முறையில் கேழ்வரகு

பின்னர் 45-60 நாள்களுக்குள் மீன் அமிலம் தெளிப்பேன். பாரம்பர்ய நெல் என்பதால் என்னுடைய பயிர்களை பூச்சி தாக்காது. ஒருவேளை தாக்கினால் ஒடித்தால் பால்வரும் செடி, வீசும் செடி, கசக்கும் செடி உள்ளிட்ட 3 வகை செடிகளை மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து பின்னர் செடிகளுக்கு பூச்சி விரட்டியாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

பின்னர் இஞ்சி, பூண்டு கரைசல் செய்து தெளிப்பேன். இதனால் சார் உறிஞ்சும் பூச்சி, தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தும். அதற்கு பின் நல்ல அறுவடைக்குப் பயிர் வந்துவிடும். இந்த முறையை நெல்லுக்குப் பயன்படுத்துகிறேன். தோட்டப் பயிர்களுக்கும் இதேமுறைதான். ஆனால் வாமடையில் குழி தோண்டிச் செயல்படுத்தும் முறையை மட்டும் பயன்படுத்த மாட்டேன். இவ்வாறு என்னுடை நுட்பமான முறை நல்ல விளைச்சலைத் தருகிறது

வாழை

வாழை

அரசும் நான் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்துகிறது. திடக்கழிவு மேலாண்மை, வாழைக்கு ஊக்கத் தொகை, விளக்குப் பொறி, விதைப் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் உதவி செய்கிறது. இதனால் விவசாயத்தில் என்னால் முழு வெற்றி அடைய முடிகிறது” என்றார் உற்சாகத்துடன்.

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயம்!

  1. ராஜா சிங் says:

    வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *