வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

வேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

 

 

வேப்பவிதைக் கரைசல்:

இந்தக் கரைசல் தயாரிக்க ஏக்கருக்கு 3 முதல் 5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம் பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம் பருப்பைப் பொடியாக்க வேண்டும். இதை காடாத்துணியில் மூட்டையாக கட்டி சுமார் 10 லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இக் கரைசலை வடிகட்டினால் 6 முதல் 7 லிட்டர் வேப்பவிதைக் கரைசல் கிடைக்கும்.

இதை பயிருக்குத் தெளிக்கும்போது 10 லிட்டர் நீரில் 500 முதல் 1000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 முதல் 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டர் – 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது.

ஓர் ஏக்கர் பயிருக்கு 60 லிட்டர் வரை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பானைப் பயன்படுத்தினால் 110 லிட்டர் பயன்படுத்த வேண்டும். கரைசலின் அடர்த்தியை பூச்சித் தாக்குதலின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

வேப்பிலைக் கரைசல்:

ஓர் ஏக்கர் பயிருக்குத் தெளிக்க 10 முதல் 12 கிலோ இலை தேவைப்படும். இந்த இலையை ஒன்றிரண்டாக இடித்து காடாத்துணியில் மூட்டையாகக் கட்ட வேண்டும். பின்னர், அந்த மூட்டையை 20 முதல் 24 லிட்டர் வரை தண்ணீர் உள்ள பானையில் ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

பின்னர், இக் கரைசலை வடிகட்ட வேண்டும். அப்போது 15 முதல் 17 லிட்டர் கரைசல் கிடைக்கும். ஒரு டேங்குக்கு (10 லிட்டர் அளவு) 500 – 1,000 மி.லி. வரை பயன்படுத்தலாம். அதாவது 500 – 1,000 மி.லி. கரைசலை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு டேங்க் கரைசலுடன் 100 மி.லி. காதி சோப்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். (1 லிட்டருக்கு 10 மி.லி. என்ற அளவு) காதி சோப்புக் கரைசல் தாவரக் கரைசலின் ஒட்டும் தன்மையை அதிகரிக்கிறது. ஓர் ஏக்கர் பயிருக்கு 10 டேங்க் வரை தெளிக்க வேண்டும். இக் கரைசல் சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

 

வேப்பம் பிண்ணாக்கு:

வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டு தண்ணீர் செல்லும் மடைவாயில்களில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வயலுக்குள் செல்லும் தண்ணீருடன் வேப்பம் பிண்ணாக்கு கரைந்து சீராகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயிரின் வேரைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், தூர்ப்பகுதியில் வரும் பூச்சிகள் ஆகியவற்றை வராமல் தடுக்கலாம். பயிர்களுக்கு பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *