வேஸ்ட் டீகம்போஸர்… விவசாயிகளின் அமுதசுரபி!

விவசாய நிலத்தைச் சோதனைக் கூடமாக மாற்றிப் புதுப்புது விஷயங்களைச் சோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார்.

அப்படி விவசாயிகள் கண்டுபிடித்து மேற்கொண்டு வரும் தொழில்நுட்பங்களைக் கற்று தனது பண்ணையில் செயல்படுத்தி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கதிரேசன்.

“காசி, ராமேஸ்வரம்னு ஆன்மிகப்பயணம் போறது போல, நான் பன்னிரண்டு வருஷமா இயற்கை விவசாயப் பயணம் போய்ட்டுருக்கேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல இடம்பெறுகிற விவசாயிகளைச் சந்திச்சு அவங்களோட தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுட்டு வர்றதுதான் என்னோட விவசாயப் பயணத்தோட நோக்கம். இந்தப் பயணத்துல ஏராளமான விஷயங்களைக் கத்துக்கிட்டு அதை என்னோட முப்பது ஏக்கர் பண்ணையில செயல்படுத்திட்டிருக்கேன்” என்று பெருமையாகச் சொல்லி வருகிறார், கதிரேசன்.

ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள். இடையில் நிலம் தெரியாத அளவுக்குப் பசுமை போர்த்தியிருக்கும் தட்டைப்பயறுச் செடிகள். அவற்றுக்குச் சுழன்று சுழன்று நீரைத்தெளித்துக் கொண்டிருந்தன, தெளிப்பு நீர்ப்பாசனக் குழாய்கள். அந்த எழில் கொஞ்சும் சூழ்நிலையில், பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார், கதிரேசன்.

“எனக்குப் பூர்வீகம் இந்தக் கிராமம்தான். வயசு 69 ஆச்சு. 1970-கள்ல விவசாயிகள் சங்கம் தீவிரமா இருந்துச்சு. அப்போதான் நான் படிப்பு முடிச்ச சமயம். பேங்க்ல வேலை கிடைச்சும், அதை விட்டுட்டு விவசாயச் சங்க வேலைகள்ல இறங்கிட்டேன். கிட்டத்தட்ட 30 வருஷம் சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் சங்கத்தலைவரா செயல்பட்டேன்.

2007-ம் வருஷம் நடந்த பசுமை விகடன் வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைச்சிருந்தாங்க. மொத ஆளா போய்க் கலந்துக்கிட்டேன். அங்கதான், பாலேக்கர், நம்மாழ்வார் ரெண்டு பேரோட பேச்சையும் கேக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அதுவரைக்கும் நானும் ரசாயன உரம் போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன். என்னோட நிலத்துல நிறைய பூச்சிக்கொல்லி கம்பெனிகள், உர கம்பெனிகள் பரிசோதனை வயல் அமைச்சுருக்காங்க. அந்தளவுக்குத் தீவிரமா ரசாயன விவசாயம் செஞ்சவன் நான்.

பாலேக்கர், நம்மாழ்வார் ரெண்டு பேரோட பேச்சையும் கேட்டபிறகு மனம் மாறிட்டேன். அவங்க பேசுற பயிற்சிகள், கருத்தரங்குகள்னு தேடித்தேடிப் போய்க் கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம், ரசாயன உரங்களை ஒதுக்கித்தள்ளிட்டு இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ என் பண்ணை, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பரிசோதனை செய்யும் பண்ணையா மாறிடுச்சு. எந்தப் புதுத்தொழில்நுட்பத்தைக் கேள்விப்பட்டாலும் அதைப் பரிசோதனை பண்ணிப்பார்த்து எனக்குத் திருப்தியா இருந்தா, மத்த விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்துடுவேன்” என்ற கதிரேசன், நிலத்தைச் சுற்றிகாட்டிக்கொண்டே, தான் கடைப்பிடிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இயற்கை விவசாயக் கருத்தரங்குகள்ல நான் கத்துக்கிட்ட முக்கியமான விஷயம், மூடாக்கு. விவசாயத்துல களை எடுக்குறதுக்கு நிறையச் செலவு பண்றாங்க. சிலர் களைக்கொல்லிகளையும் பயன்படுத்துறாங்க. அதெல்லாம் இல்லாம களைகளை மேலாண்மை பண்றதுதான், மூடாக்குத் தொழில்நுட்பம். மூடாக்குல ‘உலர் மூடாக்கு’, ‘உயிர் மூடாக்கு’னு ரெண்டு வகை இருக்கு.

தென்னை மரத்துல இருந்து கிடைக்கிற மட்டை, கீற்று, பாளை; மா, கொய்யா மாதிரி மற்ற மரங்கள்ல இருந்து விழுற காய்ஞ்ச இலைதழைகளைப் பயன்படுத்துறது உலர் மூடாக்கு. இதை மரப்பயிர்களைச் சுத்தி வட்டப்பாத்தி எடுத்து அதுல இந்த மாதிரி உலர்ந்த இலைதழைகள், தென்னைக் கழிவுகளைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி விடுறதுதான், உலர் மூடாக்கு. இதனால, மண் ஈரப்பதமா இருக்கும். இந்த இலைதழைகள் மட்கி மண்ணுல உரமாகிடும்.

தட்டைப்பயறு, கொள்ளு, நரிப்பயறு மாதிரியான படர்ந்து வளர்ற பயிர்களைத் தோப்புகள்ல நிலம் முழுக்க விதைச்சு விடுறது, உயிர் மூடாக்கு. நிலம் முழுக்க இந்தப்பயிர்கள் இருந்தா மத்த களைகள் முளைக்காது. இதோடு இந்தப்பயிர்கள் காத்துல இருக்கிற நைட்ரஜனைக் கிரகிச்சு வேர் மூலமா மண்ணுல நிலைநிறுத்தும். நான் 5 ஏக்கர் வாழைத்தோப்புலயும், 25 ஏக்கர் தென்னந்தோப்புலயும் தட்டப்பயறை விதைச்சு உயிர் மூடாக்கு அமைச்சு இருக்கேன். உயிர் மூடாக்கு ஊடுபயிர் மாதிரி கணிசமான வருமானத்தையும் கொடுக்கும்.

வாழை நடவு செய்றதுக்கு முன்னாடி, ஏக்கருக்கு 5 கிலோ வீதம் தட்டப்பயறு விதைகளை விதைச்சுவிட்டேன். அதுக்கப்புறமா ஆறு அடி இடைவெளியில வாழை நடவு செஞ்சுருக்கேன். வாழை, தட்டப்பயறு ரெண்டுக்கும் தண்ணீர் கிடைக்கிற மாதிரி சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். தொடர்ந்து பாசனம் செய்றப்போ ஊடுபயிரும் நல்லா வளந்துடும். வாழைக்குக் கொடுக்குற இடுபொருள்களே தட்டப்பயறுக்கும் போதுமானதா இருக்குது. முக்கியமா நிலத்துல களைகளே முளைக்கலை. தட்டப்பயறுல 60 நாள்ல பூவெடுத்து 90 நாளுக்குள்ள முழுமையாகக் காய்ச்சுடும். தட்டப்பயறை அறுவடை செஞ்சுட்டு அந்தச் செடிகளைப் பிடுங்கிப்போட்டு டில்லர் மூலமா உழுது விட்டுடணும். இந்தச்செடிகள் மண்ணுல மட்கி வாழைக்கு நல்ல உரமாகிடும். இதே மாதிரிதான் தென்னந்தோப்புலயும் கடைப்பிடிக்கிறேன். இதனால, களை எடுக்குற செலவு, இடுபொருள் செலவு கணிசமான அளவு குறையுது” என்ற கதிரேசன் அடுத்ததாக ‘வேஸ்ட் டீகம்போஸர்’ குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“பசுமை விகடன்ல வேஸ்ட் டீகம்போஸர் பத்தி வந்தவுடனேயே இணையதளம் மூலமா அதை வரவழைச்சுட்டேன். வேஸ்ட் டீகம்போஸர்ங்கிறது, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். அங்கக விவசாயத்துக்குக் கிடைச்ச அமுத சுரபி இது. அனுபவபூர்வமா அதோட பலன்களை நான் உணர்ந்துருக்கேன். இதன் பலனை விவசாயிகள் பயன்படுத்தினால்தான், உணர முடியும்.

200 லிட்டர் தண்ணீர்ல 2 கிலோ நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கலக்கி, அதுல 30 மில்லி வேஸ்ட் டீகம்போஸரை ஊற்றி, தினமும் காலையிலயும், சாயங்காலமும் கலக்கிவிடணும். ஒரு வாரம் இப்படிக் கலக்கினா கரைசல் கிடைச்சுடுது. இதுல 180 லிட்டர் கரைசலை எடுத்து வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்திக்கலாம். மீதி இருக்குற 20 லிட்டர் கரைசல்ல 2 கிலோ வெல்லம் சேர்த்து 80 லிட்டர் தண்ணீர் சேர்த்தா அடுத்த கரைசல் பாசனத்துக்குத் தயாராகிடும். இதுபோல, தயிர் உறை ஊத்துற மாதிரி தொடர்ந்து உற்பத்தி பண்ணிட்டே இருக்கலாம். வாழ்நாள் முழுக்க இதைப் பயன்படுத்தலாம். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாவும், கிருமி நாசினியாவும், பூச்சி விரட்டியாவும் செயல்படுது. இதை வாரம் ஒருமுறை தென்னைக்கும் வாழைக்கும் கொடுத்துட்டுருக்கேன். இதைப்பயன்படுத்த ஆரம்பிச்சதும் பயிர்ல நல்ல மாற்றம் தெரியுது” என்றவர் நிறைவாக,

“ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்துனா… என்னோட 25 ஏக்கர் தென்னைக்கும், 5 ஏக்கர் வாழைக்கும் இன்றைய விலை நிலவரத்துக்கு, வருஷத்துக்கு 9,00,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனா, இயற்கை விவசாயத்துல இடுபொருள்கள், பூச்சிவிரட்டிக்கு 2,00,000 ரூபாய்தான் செலவாகுது. அதே சமயத்துல ரசாயன விவசாயத்துல கிடைச்ச மகசூலைவிடக் கொஞ்சம் கூடுதலாத்தான் மகசூல் கிடைக்குது. இன்னும் என்னோட விவசாயப் பயணம் தொடர்ந்துட்டுதான் இருக்கு. நேத்துகூடப் பஞ்சகவ்யா வடிகட்டித்தொட்டி அமைச்சுருக்குற பொள்ளாச்சி விவசாயியைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். பசுமை விகடன் இருக்குறதால எனக்குப் பயமே இல்லை” என்று சொல்லி விடைகொடுத்தார் கதிரேசன்.

தொடர்புக்கு

கதிரேசன்,
செல்போன்: 9942466343

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “வேஸ்ட் டீகம்போஸர்… விவசாயிகளின் அமுதசுரபி!

  1. Venkatachalam says:

    இயற்கை பயிர் ஊக்கி பயோ ஆக்சி(26.07.2017)அன்று பசுமை தமிழகம் இதலிள் வெளியான முளுத்தகவல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *