14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்!

ஞ்சில்லா உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… வேறு தொழிலில் உள்ள பலரும் தங்களது முன்னோர் செய்து வந்த வேளாண்மையைக் கையிலெடுத்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள கச்சக்கட்டுக் கிராமத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள்.

நிர்வாகத் திறனும் தீவிரமான கண்காணிப்பும் இருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் விவசாயத்தைச் செய்ய முடியும் என்று நிரூபித்து வருகிறார்கள், இவர்கள். ஒரு பகல் பொழுதில் நெல் வயலிலிருந்த நண்பர்கள் சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

தங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த சீனிவாசன், “நாங்க இரண்டு பேருமே ஆடிட்டர்கள். சென்னையில் ரொம்ப வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்றோம். நாங்க, விவசாயத்திலும் பங்குதாரர்கள். விவசாயம் செய்யணும்கிறது எங்களோட நீண்ட காலக் கனவு. என்னோட பூர்வீகம் கும்பகோணம் பக்கத்துல உள்ள ஊத்துக்காடு. சங்கருக்குப் பூர்வீகம் கோமல். என்னோட அப்பா ரயில்வேயில் வேலை செஞ்சார். சங்கரோட அப்பா சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துல வேலை செஞ்சார். அதனால, ரெண்டு பேரோட குடும்பங்களுமே கிராமத்தை விட்டு நகரத்துக்கு இடம் மாறிய குடும்பங்கள்தான். கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு முன்னாடியே நாங்க நகரத்துக்குப் போயிட்டோம். எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈர்ப்பு உண்டு. ஆடிட்டரான பிறகும், எங்க ரெண்டு பேருக்குமே விவசாய ஆசை அதிகமாகிட்டே இருந்துச்சு.

நிலம் வாங்கலாம்னு முடிவு பண்ணி 1998-ஆம் வருஷத்துல நிலம் தேட ஆரம்பிச்சோம். பல மாவட்டங்களுங்கு தேடி அலைஞ்சதுல, 2007-ஆம் வருஷம், இந்த 20 ஏக்கர் நிலம் மொத்தமாகக் கிடைச்சது. பக்கத்துலேயே ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சதால, அதை வீடு, களம், மண்புழு உரம் தயாரிப்பு, வீட்டுத்தோட்டம் மாதிரியான தேவைக்கு வெச்சுக்கிட்டோம். பத்து நாள்களுக்கு ஒரு தடவை இங்க வந்து, இரண்டு நாள்கள் தங்கி விவசாயத்தைக் கவனிச்சுக்குவோம். நாங்க சென்னையில இருக்குற சமயங்கள்லயும், இங்கு நடக்குற நிகழ்வுகள் எல்லாத்தையும் கண்காணிச்சுட்டே இருப்போம்.

தினமும் செய்ய வேண்டிய வேலைகளைப் போன் மூலமா பணியாளர்கள்கிட்ட சொல்லிடுவோம். பண்ணையின் மேலாளர் பால்ராஜ் பயிர்களை வீடியோ, போட்டோ எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பிடுவார். பயிர்ல இருக்குற அறிகுறிகளை வெச்சு என்ன செய்யணும்கிறதை நாங்க சொல்லிடுவோம். எங்களுக்குப் ‘பசுமை விகடன்’தான் வழிகாட்டி. சில இயற்கை விவசாய நண்பர்களும் இருக்காங்க. அவங்ககிட்டயும் ஆலோசனை கேட்டுக்குவோம். இப்படி நாங்க ஆலோசனை கேட்டுச் சொல்ற விஷயங்களைப் பண்ணையில சரியாச் செய்றாங்களாங்கிறதையும் கண்காணிச்சுக்குவோம்.

விதைப்புல இருந்து விற்பனைவரை நாங்க சொல்ற மாதிரிதான் பணியாளர்கள் செய்வாங்க. எங்க பணியாளர்கள், நேர்மையாவும் கடமையுணர்ச்சியோடவும் செயல்படுறதால எங்களால வெற்றிகரமா விவசாயம் செய்ய முடியுது” என்ற சீனிவாசன் தங்களது விவசாய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். “ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்திதான் வாழை, கரும்பு, நெல்னு சாகுபடி செஞ்சோம். ஆனா, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளைப் பயன்படுத்தலை. படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாறி, கடந்த 5 வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கோம். 14 ஏக்கர் பரப்புல நெல் சாகுபடி பண்றோம். 6 ஏக்கர் நிலத்துல மா, கொய்யானு பழ மரங்கள் இருக்கு. இது களிமண் நிலம்கிறதால, மண் இறுக்கமாகி, பயிர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்காது. அதனால தூர்கள் அதிகமாக வெடிக்காது.

மழை பெய்ஞ்சா தண்ணீர் தேங்கி நின்னுடும். வேலை செய்றவங்க கால்கள் மண்ணுக்குள் புதைஞ்சுடும். அப்புறம்தான் வருஷத்துக்கு ரெண்டு முறை ஏக்கருக்கு 500 கிலோ அளவு இலைதழைகளைப் போட்டு உழவு ஓட்ட ஆரம்பிச்சோம். இதன்பிறகு 1 டன் எருவோடு 3 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவத்தைக் கலந்து 10 நாள்களுக்கு நிழல்ல வெச்சிருந்து, அதையும் நிலத்துல கொட்டி உழவு ஓட்டுவோம். இதுமாதிரி தொடர்ந்து செய்றதால மண் பொலபொலப்பா மாறியிருக்கு. நெல் சாகுபடி செய்றப்போ, மண்புழு உரம், பஞ்சகவ்யா, உயிர் உரங்கள், இ.எம்னு இயற்கை இடுபொருள்களைத்தான் கொடுக்குறோம். அதனால பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாம பயிர்கள் ஆரோக்கியமாக வளருது. பக்கத்து வயல்கள்ல புகையான் தாக்கினப்போகூட எங்க வயல்ல பாதிப்பு இல்லை” என்ற சீனிவாசன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இங்க விளையுறதுல குறிப்பிட்ட அளவை நெல்லாவே விற்பனை செய்றோம். மீதியை அரிசியாக்கி எங்க உறவினர்கள், நண்பர்களுக்கே விற்பனை செஞ்சுடுறோம். இயற்கை அரிசி, இயற்கை நெல்னு கூடுதல் விலையெல்லாம் வைக்கிறதில்லை. உற்பத்திச் செலவைக் கணக்குப் பண்ணி அதோட கொஞ்சம் லாபம் வெச்சு விற்பனை செய்றோம். சத்துக்கள் குறைய கூடாதுங்கிறதுக்காக அரிசியை அதிகமா பட்டை தீட்டமாட்டோம். குறுவைப் பருவத்துல ஏ.டீ.டி-43 ரகத்தையும் சம்பாப் பருவத்துல கிச்சிலிச்சம்பா ரகத்தையும் சாகுபடி செய்றோம்.

குறுவைப் பட்ட சாகுபடியில ஏக்கருக்கு 25 மூட்டைங்கிற (60 கிலோ மூட்டை) கணக்குல 14 ஏக்கர் பரப்புல 350 மூட்டை நெல் மகசூலாகும். இதுல பாதியை நெல்லா விற்பனை செஞ்சுடுவோம். ஒரு மூட்டை 1,050 ரூபாய் வீதம் 175 மூட்டை நெல் விற்பனை மூலமா 1,83,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 175 மூட்டை நெல்லை அரிசியாக அரைச்சா 105 மூட்டை அரிசி கிடைக்கும். ஒரு மூட்டை அரிசி (60 கிலோ மூட்டை) 3,600 ரூபாய் விற்பனை செய்றதுல 3,78,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். குறுவைப் பட்டத்துல 14 ஏக்கர் நெல் சாகுபடி மூலமா 5,61,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவும் போக 2,30,000 ரூபாய் லாபமா நிக்கும்.  சம்பாப் பட்ட சாகுபடியில ஏக்கருக்கு 20 மூட்டைக்குக் குறையாமல் மகசூல் கிடைச்சுடும். 14 ஏக்கர் பரப்புல 280 மூட்டை நெல் மகசூலாகும். இதுல 100 மூட்டை நெல்லை, விதைநெல்லா ஒரு மூட்டை 3,000 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். அது மூலமா, 3,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். மீதி 180 மூட்டை நெல்லை அரிசியா அரைக்கிறப்போ, 117 மூட்டை அரிசி கிடைக்கும். ஒரு மூட்டை அரிசியை 3,900 ரூபாய்னு விற்பனை செய்றதுல 4,56,300 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

சம்பாப் பட்டத்துல 14 ஏக்கர் நெல் சாகுபடி மூலமா, 7,56,300 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச்செலவும் போக, 4,30,000 ரூபாய் லாபமா நிக்கும். வருஷத்துக்கு ரெண்டு போகம் நெல் சாகுபடி மூலமா மொத்தம் 6,60,000 ரூபாய் லாபம் கிடைக்குது”என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

மேம்படுத்தப்பட்ட எரு

ஒரு டன் பசுஞ்சாணத்துடன் 500 கிலோ இலைதழைகள், 3 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவம், 2 லிட்டர் இ.எம் திரவம், 20 லிட்டர் அமுதக்கரைசல் ஆகியவற்றைக் கலந்து நிழலில் மூடி வைக்க வேண்டும். 20 மற்றும் 60-ஆம் நாள்களில் இக்கலவையைக் கிளறிவிட வேண்டும். 70-ஆம் நாளில் நன்கு மட்கி, மேம்படுத்தப்பட்டுவிடும்.

பண்டமாற்று

“இயற்கை விவசாயத்துக்காக 3 மாடுகள் வளர்க்குறோம். நெல் சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வைக்கோல், நெல் அரவையின்போது கிடைக்கக்கூடிய தவிடு எல்லாத்தையும் எங்க மாடுகளுக்குப் பயன்படுத்துறோம். எங்க தேவைக்குப் போக மீதியிருக்குறதை, கோவிந்தபுரம் கிராமத்துல இருக்குற கோசாலைக்குக் கொடுத்துடுவோம். அதுக்குப் பதிலா கோசாலையில இருந்து எரு வாங்கிக்குவோம்” என்கிறார், சீனிவாசன்.


“நாங்களே அரிசியா மாத்திடுவோம்!”

“அரிசி ஆலைகள்ல நெல்லை வேக வைக்கச் சுத்தம் இல்லாத தண்ணியைப் பயன்படுத்துறாங்க. சில சமயம் நாம கொடுக்குற நெல்லையும் மாத்திடுறாங்க. அதனால, தஞ்சாவூர்ல இருக்குற இந்திய உணவு பதனீட்டுக்கழகம் மூலமாகத் தெரிஞ்சுக்கிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாங்களே நெல்லை அவிக்க ஆரம்பிச்சுருக்கோம். இரண்டு அடுக்குகளைக் கொண்ட பாத்திரத்துல கீழ் அடுக்குல தண்ணீர் கொதிக்கும். மேல் அடுக்கின் அடிப்பாகத்துல சல்லடை இருக்கும்.

மேல் அடுக்குல நெல்லைப் போட்டுட்டா சல்லடை மூலமா நீராவி மேல வரும். நெல் சீக்கிரமா வெந்துடும். 25 நிமிடத்துல 30 கிலோ நெல்லை வேக வைக்க முடியும். இந்த முறையில சத்துக்கள் விரயமாகாம இருக்குறதோடு, நெல்லும் ஒரே சீராக வெந்துடும். சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 26,000 ரூபாய்க்கு நெல் அரவை எந்திரத்தை வாங்கியிருக்கோம். அதுல ஒரு மணிநேரத்துல 70 கிலோ நெல்லை அரைக்க முடியும்” என்கிறார், சீனிவாசன்.

இப்படித்தான் நெல் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யும் விதம் குறித்துச் சீனிவாசன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

ரு ஏக்கர் நடவுக்கு 7 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்கால் நிலத்தில் 125 கிலோ மேம்படுத்தப்பட்ட எரு மற்றும் 100 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, விதைநேர்த்தி செய்யப்பட்ட 35 கிலோ விதைநெல்லை நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும்.  15-ஆம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 20-ஆம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சூடோமோனஸைக் கலந்து தெளிக்க வேண்டும். 25-ஆம் நாளில் நாற்றுகள் தயாராகிவிடும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 750 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவைப் போட்டு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திச் சேறாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, முக்கால் அடி இடைவெளியில், ஒரு குத்துக்கு 4-5 நாற்றுகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலம் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15-ஆம் நாள் 50 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவுடன் 1 லிட்டர் நிலக்கரி சாம்பல் திரவம் கலந்து 12 மணி நேரம் ஊறவைத்து நிலத்தில் இட வேண்டும். 20-ஆம் நாள் களையெடுக்க வேண்டும். 40-ஆம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 1 கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில், 50 கிலோ மேம்படுத்தப்பட்ட எருவுடன், 1 லிட்டர் இ.எம் திரவம் கலந்து நிலத்தில் இட வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல், மஞ்சள் நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் தெரிந்தால், 100 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ சூடோமோனஸ், 1 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு, சீனிவாசன், செல்போன்: 9840035620 .

கு.ராமகிருஷ்ணன் படங்கள்: ம.அரவிந்த்

நன்றி: பசுமை விகடன்


 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்!

  1. Pratheep says:

    இ.எம் கரைசல் என்றால் என்ன இதை தயாரிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *