200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்து சாதனை படைத்துள்ளார்.

1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி, இந்தியாவின் வேளாண் முறையையே தலைகீழாக மாற்றி அமைத்துவிட்டது. ஆனால், பசுமைப் புரட்சியால் நெல் உற்பத்தி பலமடங்கு பெருகிவிட்டதாக மார்த்தட்டிக் கொண்டாலும், ரசாயன உரத்தால் ஏற்பட்ட பின்விளைவுகளும் ஏராளம் என்பதை அண்மைக் காலமாக அறியமுடிகிறது.

விளைவு இயற்கை விவசாயம் மற்றும் அதன்மூலம் விளையும் உணவுப் பொருள்களுக்கு மவுசு கூடிவருகிறது.

இதை, சரியாக அறிந்து கொண்ட மைசூர் மாவட்டம், டி. நரசிபுரா வட்டம், சித்தனஹுண்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாயத்தில் புதுமைகளைப் படைக்கத் தொடங்கியிருக்கிறார். பி.ஏ. பட்டதாரியான இவர், சட்டப் படிப்பை பாதியில் நிறுத்தியதும் வேலை தேடி அலைந்துள்ளார்.

வேலை தேடுவதே ஒரு வேலையாகி விடக் கூடாது என்பதை உணர்ந்த ஸ்ரீனிவாசமூர்த்தி, 1996-ல் தனது தந்தையின் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். ரசாயன உரத்தைப் பயன்படுத்தி அதிநவீன விவசாய முறையைப் பின்பற்றி வந்த ஸ்ரீனிவாசமூர்த்தியின் கைக்கு 2005-ல் கிடைத்த சுபாஷ்பலிகார் எழுதிய ஜீரோ கல்டிவேஷன் என்ற நூலைப் படிக்க தொடங்கினார்.

இயற்கையைத் துன்புறுத்தாமல், காசு செலவில்லாமல், கைக்குக் கிடைக்கும் பொருள்களை வைத்துக் கொண்டு, விவசாயத்தில் லாபம் ஈட்டும் கலையை இந் நூல் மூலம் அறிந்து கொண்டார். பின்னர், 2006-ம் ஆண்டில் இயற்கை விவசாயத்தில் நெல் விளைச்சலைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் செய்து, விவசாயிகளைச் சந்தித்து பாரம்பரிய நெல் வகைகளை ஒவ்வொரு பிடியாக வாங்கி வந்தேன். இயற்கை விவசாய முறையில் முதலில் 30 நெல் வகைகளைப் பயிரிட்டு வெற்றி கண்டேன்.

இதேபோல மேலும் பல நெல் விதைகளை ஊரெல்லாம் திரிந்து சேகரித்து 200 வகையான நெல் பயிரை வெற்றிகரமாக புதுப்பித்துள்ளேன். பாரம்பரிய நெல் வகைகள் நமது மண்ணுக்கு ஒத்து வராது, பயிரிடுவது சிரமம், லாபம் கிடைக்காது என்று விவசாயிகளிடையே காணப்பட்ட மூட நம்பிக்கையை இதன்மூலம் உடைத்தெறிந்தேன்.

ராஜமுடி, கெரிசன்னா, கந்தசாலே, ஜீராசன்னா, சஸ்திகாசாலி (60 நாள்களில் விளையக் கூடியது), ஜோகுளா (9 மாதங்களில் விளையக் கூடியது) போன்ற 200 வகை நெல் விதைகள் என்னிடம் உள்ளன. இவற்றை விவசாயிகளுக்கு அளித்து வருகிறேன். விவசாயிகளிடையே, பாரம்பரிய நெல் பயிர் வகைகளை பிரபலப்படுத்துவதே என் நோக்கம். 500 விவசாயிகளுக்கு நெல் விதைகளை விற்பனை செய்து வருகிறேன்.

மருத்துவ குணம் நிறைந்ததால் சின்னப்பொன்னி, ராஜமுடி, ரத்னசுடி, மைசூர் மல்லிகே, ஜீராசன்னா, கெüரிசன்னா நெல் வகைகளுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 15 குவிண்டால் நெல் விதைகளை விவசாயிகளுக்கு அளித்துள்ளேன்.

நவீன விவசாயத்தில், ஏக்கருக்கு 15 முதல் 20 குவிண்டால் மகசூல் கிடைத்தது. இயற்கை விவசாயத்தில் 22 முதல் 25 குவிண்டால் அறுவடை செய்து வருகிறேன். நல்ல லாபமும் கிடைப்பதால் திருப்திகரமாக விவசாயம் செய்து வருகிறேன்.

எத்தனை ஆண்டுகளானாலும், பாரம்பரிய நெல் வகைகளின் குணம், நிறம், மணம், சுவை மாறாது. பாரம்பரிய நெல்வகைகள் கொண்ட நெல் வங்கியை உருவாக்க வேண்டுமென்பதே எனது எதிர்கால லட்சியம். பஞ்சாயத்துகள் மூலம் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க வேண்டும் என்றார் அவர்.

தொடர்புக்கு: 09900746499.

நன்றி:  தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *