பயிர்களுக்கு உர டீ!

மனிதர்கள் டீ குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என்று படித்து இருக்கிறோம். இப்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. ராஜ்பிரவீன் அவர்கள் பயிர்களுக்கும் ஒரு டீ தயாரித்து இருக்கிறார்.


தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை சந்திக்கின்றனர்.

இத்தகைய சூழலில் அதிக மகசூல்  தரும் இயற்கை உர டீ பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம்.

தயாரிக்கும் முறை:

விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், வயல்களில் சுற்றி கிடைக்கும் 5 வித இலை, தழைகள்- 5 கிலோ, 5 கிலோ சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு சணல் சாக்கில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும், இத்துடன் அரை கிலோ கல்லையும் சேர்த்து விடவும், பின்னர் இந்த மூட்டையை ஒரு பிளாஸ்டிக் கேனின் உள்ளே கவிழ்த்து வைக்கவும். மூட்டை மூழ்கியிருக்கும் வரை தண்ணீர் ஊற்றவும், இந்த மூட்டையை மேலும், கீழும் அசைப்பது போலாக கயிறு கட்டியிருக்க வேண்டும், தினமும் விவசாயிகள் அதை அசைத்தால் மூட்டைக்குள்ளிருக்கும் சாறு, கேன் தண்ணீரில் கலக்கும்.

அது அடுத்த இரண்டு வார காலத்தில் உரம் டீயாக தயாராகிவிடும். 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து எல்லாவிதமான பயிர்களுக்கும், மரங்களுக்கும் இதை தெளிக்கலாம்.

பிற பயன்கள்:

உரம் டீ விவசாய பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது. பயிர்களுக்கு உரம் டீ கொடுத்தால் பயிர்கள் வேகமாக வளர்வதாக பாரம்பரியமிக்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, குறைந்த செலவில் அதிக லாபம் பெற இயற்கை உரம் டீயை தங்களது தோட்டத்திலேயே தயாரித்து வளம் பெறலாம். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல், லாபம் இயற்கையில் பெற முடியும்.

நன்றி: cuddalore newsபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *