கருவேல முள்செடிகள் மண்டிய வறண்ட தரிசு காடு, நீராதாரம் இல்லாத கரம்பு மண், மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள பூமியில் விளை பொருட்களை விளைவித்து லாபம் ஈட்டுவது சவாலானது. இப்படி சோதனைகளை சாதனையாக்கியுள்ளார்
விருதுநகர் மென்பொறியாளர் கிருஷ்ணகுமார்.
அமெரிக்காவில் விப்ரோ நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர், தனது குலத்தொழிலான விவசாயம் மீது பற்றுதலால் பணிக்கு விடை கொடுத்து விட்டு விவசாயத்தில் இறங்கினார். தனது ஊரான விருதுநகர் அருகே உள்ள மேலதுளுக்கன்குளம் கிராமத்திற்கு வந்தார்.
தனது 20 ஏக்கரில் இயற்கை முறையில் கிணற்று பாசனம் மூலம் காய்கறிகள், கிழங்கு வகைகளை விளைவித்தார்.
காட்டுப்பன்றிகள் தொல்லையால் ஓரளவு நஷ்டம் ஏற்பட்டது. பின் மானாவாரி தரிசு நிலம் 80 ஏக்கரை ஒத்திக்கு எடுத்தார். மூன்று மாத பயிரான வி.என்.ஆர்.4343 ரக மக்காச்சோளத்திற்கு குறைந்தளவு தண்ணீர் போதும் என்பதால் 80 ஏக்கரிலும் பயிரிட்டுள்ளார்.
அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து கிருஷ்ணகுமார் கூறியதாவது:
- பாசிப்பயறு, உளுந்தம் பயறு, தட்டைப்பயிறு ஆகியவற்றை பயிரிட்டேன். இவற்றுடன் வேப்பம்பிண்ணாக்கை சேர்த்து ஒரு மாதத்திற்கு பின் உழவடை செய்தேன். இதனால் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் 50 சதவீதம் குறையும்.
- ஊடு பயிராக ஐந்து வரிசைக்கு ஒரு வரிசையில் பாசிப்பயறு நடவு செய்தேன். இதனால் சோளத்தை தாக்கும் படைப்புழுக்கள் பாசிப்பயிறுக்கு தாவும்.
- மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் வெகுவாக குறையும். முதல் முறையாக 40 ஏக்கரில் சோதனை அடைப்படையில் பல ரகங்களை சேர்ந்த மக்காச்சோளம் பயிரிட்டேன்.
- ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 8 மூடைகள் என நிகர லாபம் ரூ.60 ஆயிரம் கிடைத்தது.
- தற்போது 80 ஏக்கரில் வி.என்.ஆர்.4343 ரக மக்காச்சோளம் பயிரிட்டுளேன். படைப்புழு தாக்குதல், பன்றி தொல்லைகள் இருக்காது. இதன் மூலம் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 16 மூடைகள் மகசூல் எடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
- விருதுநகர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் காந்திமதிநாதன் வழிகாட்டுதல்படி உழவடை, விதைப்பு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், களையெடுத்தல் என அனைத்து வேளாண் பணிகளும் முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலம் செய்வதால் வேலையாட்கள் வைத்து கொள்ளவில்லை.
- ‘டாபே’ டிராக்டர் கம்பெனியுடன் இணைந்து 12 டிராக்டர்களை விவசாய பணிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அவற்றின் செயல்பாடுகளை கம்ப்யூட்டர் மூலம் கண்காணித்து பணியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அலைபேசி வழியாக வழங்கி வருகிறேன்.
விவசாயம், பொறியியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். ‘விவசாயத்தால் நான்; விவசாயிகளுக்காக நான்’ என்பதே எனது தாரக மந்திரம், என்றார்.. 9900839325
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “80 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி – சாப்ட்வேர் இன்ஜினியர் சாதனை”