மானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..!

‘இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். ஆனா, எனக்கு ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஜீரோ பட்ஜெட் விவசாயம் கிறதால பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம திரட்சியா விளைஞ்சுருக்கு” என சக நண்பர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், சுப்ரமணியன்.

இச்செய்தி நமக்கும் எட்டவே, கோவிந்தபுரம் தேடிச் சென்று, தோட்டத்தில் உளுந்து புடைத்துக் கொண்டிருந்த சுப்ரமணியனைச் சந்தித்தோம்.

”15 வயசுலேயே விவசாயத்துல இறங்கிட்டேன். இது செம்மண்ணும் லேசா களியும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல நெல்லும், 4 ஏக்கர்ல தென்னையும் சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கோம். இந்த ஒரு ஏக்கர் மட்டும் மேட்டு நிலமா தனியா இருக்கு. அஞ்சாறு வருசத்துக்கு முன்னவரைக்கும் இந்த நிலத்துல வாழை சாகுபடி செஞ்சோம். அப்போ, வீரசோழன் ஆத்துல இருந்து வாய்க்கால் தண்ணி கிடைச்சது. இப்போ, இந்த நிலம் வரைக்கும் தண்ணி வர்றதில்லை. இந்த நிலத்துல போர்வெல்லும் கிடையாது. அதனால, நிலத்தைத் தரிசா போட்டுட்டோம்.

இடையில, ‘பசுமை விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு. சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பங்கள் அத்தனையும் ரொம்ப விரிவா, எளிமையா அதுல வந்துச்சு. அதையெல்லாம் படிச்சு தெரிஞ்சுட்டு… அஞ்சு வருஷமா, இந்த ஒரு ஏக்கர்ல மட்டும் ஜீரோ பட்ஜெட் முறையில மானாவாரியா உளுந்து சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.

படிப்படியாக அதிகரித்த மகசூல்!

”முதல் வருஷம் ஏக்கருக்கு 15 டன் மாட்டு எரு போட்டு, விதையைத் தெளிச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு கொடுத்தேன். அந்த வருஷம் ஏக்கருக்கு 200 கிலோ மகசூல் கிடைச்சுது. அடுத்த ரெண்டு வருசமும், அடியுரம் எதுவும் போடல. மத்த இடுபொருட்கள் எல்லாம் கொடுத்தேன்.

400 கிலோ அளவுக்குக் கிடைச்சுது. போன வருஷமும் அதேமாதிரிதான் செஞ்சேன். கொஞ்சம்கூட, மழையே இல்லாம, வறட்சி கடுமையா இருந்ததால, பயிர் கருகிப் போச்சு. இந்த வருஷம் புழுதி உழவு ஓட்டிட்டு, கண்டிப்பா மழை வரும்ங்கற எதிர்பார்ப்போட பசுந்தாள் உரத்தை விதைச்சு மடக்கி உழுது, உளுந்து விதைச்சேன். ரெண்டு, மூணு மழை கிடைக்கவும் நல்ல விளைச்சல் கிடைச்சுருக்கு” என்ற சுப்ரமணியன், தனது சாகுபடி முறையைச் சொன்னார். அது பாடமாக இங்கே…

இயற்கை முறை எலி கட்டுப்பாடு!

‘ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில், ஐந்து சால் புழுதி உழவு ஓட்டி, மழை கிடைக்கும் நாட்களில், ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதையைத் தெளிக்க வேண்டும். 10 மற்றும் 25-ம் நாட்களில் 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். சணப்பில் 45-ம் நாளுக்குப் பிறகு பூ எடுத்ததும், மடக்கி உழுது… நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, 10 கிலோ ஆடுதுறை-3 ரக விதை உளுந்தைத் தெளிக்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் எலிகளைச் சாப்பிடக்கூடிய பறவைகள் வந்து அமர்வதற்காக… தலா 12 அடி இடைவெளியில், 5 அடி உயரமுள்ள குச்சிகளை ஊன்றி, அதன் மேல் பகுதியில் கவட்டை (ஆங்கில ‘வி’ வடிவம்) போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இதுபோல் அமைத்தால் பகல் நேரங்களில் பறவைகள் வந்தமர்ந்து, பூச்சிகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடும். இரவு நேரங்களில் கோட்டான்கள் வந்தமர்ந்து, பொந்துகளில் உள்ள எலிகளைப் பிடித்துச் சாப்பிடும்.

65 நாளில் 22 ஆயிரம்!

உளுந்து விதைத்த 4-ம் நாள், 100 கிலோ கன ஜீவாமிர்தத்தை நிலம் முழுக்கத் தூவவேண்டும். 10-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்துத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45-ம் நாள், பூ பூக்கும் தருவாயில் 4 லிட்டர் தேமோர் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். இந்த தேமோர் கரைசல், வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு, அதிகளவில் பூ பூத்து, நன்றாகக் காய் பிடிப்பதற்கு உதவும். 52-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும்  ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 65-ம் நாள் நன்றாக முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.’

சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ”மேற்கண்ட முறையில நான் சாகுபடி செஞ்சதுல, ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் விலை கிடைக்குது. அந்தக் கணக்குல ஏக்கருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம். அதுல, 10 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 22 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும். மானாவாரியில, அதுவும் 65 நாள்ல இப்படியொரு லாபம்கிறது… சந்தோஷமான சமாச்சாரம்தானே” என்றார் சிரித்தபடியே!

தொடர்புக்கு, சுப்ரமணியன்,
செல்போன்: 9486333759 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..!

  1. Dachanamurthi says:

    Hi sir my name Dachanamurthi Villupuram district sankarapuram talka ,periyakillour village என் கேள்வி உளுந்து எந்த மாதம் பயிர் சாகுபடி செய்யலாம் இது தான் என் கேள்வி ? பதில் சொல்ல வேண்டும் ok sir

  2. N Raja says:

    தண்ணீர் உள்ள நிலத்தில் உளுந்து பயிர் செய்ய எந்த எந்த மாதங்கள் உகந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *