எவ்வளவு சம்பாதித்தாலும் நஞ்சில்லா உணவை சாப்பிட்டால் தான் நன்றாக வாழ முடியும். ஒரு விவசாயியாக நஞ்சில்லா உணவை நானும் என் குடும்பத்தினரும் சாப்பிட நினைத்தோம். இப்போது மற்றவர்களுக்கும் அதையே கொடுக்கிறோம் என்கிறார் மதுரை பாரபத்தியைச் சேர்ந்த சுரேஷ்.
பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 2 ஏக்கர் மல்லிகை சாகுபடி செய்கிறோம். கண்மாய் பாசனம் இல்லை. கிணற்றில் தண்ணீர் இல்லை. போர்வெல் சொற்ப தண்ணீரில் மல்லிகைக்கு சொட்டுநீர் அமைத்துள்ளோம். 2 ஏக்கரில் கார்த்திகையில் எள் நடவு செய்த போது பனியிலேயே அறுவடை வரை மழையின்றி தாக்குப் பிடித்தது. கருப்பு, வெள்ளை, சிவப்பு எள் ரகங்களில் மொத்தம் 250 கிலோ கிடைத்தது. 2 ஏக்கரில் நிலக்கடலை விதைத்த போது ஒரு மாதம் மழையில்லை. பின் கிடைத்த மழையில் செடிகள் வளர்ந்தது. காய்ப்பிடிக்கும் நேரத்தில் மழை பெய்யாததால் 20 மூடை கடலை தான் அறுவடையானது.
கஷ்டப்பட்டு அறுவடை செய்ததை வியாபாரிகள் அடிமாட்டுக்கு விலைக்கு கேட்டார்கள். அதனால் விவசாய பொறியியல் துறை மூலம் செக்கு எண்ணெய் மெஷின் வாங்கினேன். ரூ.2 லட்சம் செலவில் 60 சதவீதம் மானியமாக தந்தனர். உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினராக இருப்பதால் குழு மூலம் நிலக்கடலை உடைக்கும் மெஷினை மானியமாக வாங்கினேன். ஒரு மணி நேரத்தில் 600 கிலோ நிலக்கடலை தோலை உடைத்து எடுக்கலாம்.
10 கிலோ எள், கடலை ஆட்டினால் 4 முதல் 4.25 கிலோ நல்லெண்ணெய், கடலை எண்ணெய் கிடைக்கும். மீதி புண்ணாக்கு ஆக விற்பனை செய்கிறோம். பக்கத்தில் உள்ள விவசாயிகளும் எள், கடலை, தேங்காய் அரைக்க கொடுக்கின்றனர். தேங்காய்க்கு கிலோ ரூ.20, எள், கடலைக்கு ரூ.25 கூலி வாங்குகிறோம்.
மெஷின் இல்லாவிட்டால் 20 மூடை கடலைக்கு ரூ.40ஆயிரம் கிடைத்திருக்கும். ஆட்டி எண்ணெயாக விற்பதால் ரூ.60ஆயிரம் வரை லாபம் கிடைத்தது. உழுதவன் கணக்கு பார்த்தால் தான் வியாபாரியாக மாறி லாபம் பெற முடியும். மக்களுக்கு கலப்படமில்லாத உணவை தரமுடியும் என புரிந்து கொண்டேன் என்றார்.
இவரிடம் பேச 9659395434
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்