கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும்.
இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம் என்கின்றனர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை நிர்வாகிகள்.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் கே.வி.கோவிந்தராஜ் கூறியதாவது:
- முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும்.
- அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.
- அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.
- இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.
- பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.
- தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்” என்றார் அவர்.
பார்த்தீனியம் சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும். அவர்களுக்கு மூச்சி திணறல், தோல் பிரச்னைகள், தும்மல், ஜுரம் வரலாம். உங்களக்கு இந்த பிரச்னை இருந்தால் பார்த்தீனியம் அருகே செல்லாதீர்கள். இந்த அலர்ஜி இல்லாதவர்களிடம் கூறி செடிகளை பிடுங்க சொல்லுங்கள்
மேலும் விவரங்களுக்கு
09842704504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்