உரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்

விவசாயத்தில் முக்கிய இடுபொருள்களான விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், விவசாயக் கூலி ஆகியவற்றின் விலை, தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு உரங்களின் மானிய செலவைக் குறைப்பதற்காக யூரியா தவிர்த்து ஏனைய உரங்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

இந்த காரணங்களால் சாகுபடி செலவைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தின் மூலம் உர செலவைக் குறைக்கலாம் என கீழ்கண்ட வழிமுறைகளை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்:

 • ஆண்டுக்கு ஒருமுறை மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து அதன் பரிந்துரையின்படி நேரடி உரங்களாக (தழைச்சத்துக்கு யூரியா, மணிசத்துக்கு சூப்பர் பாஸ்பேட், சாம்பல் சத்துக்கு பொட்டாஷ்) இடுவதன் மூலம் உரச் செலவை கணிசமாக குறைக்கலாம்.
 • விளை நிலத்தில் வரப்பிலிருந்து 2 மீட்டர் அளவு உட்புறமாக இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
 • இவ்வாறு நான்கு பாகங்களிலிருந்து நான்கு இடங்களையும் மற்றும் நிலத்தின் மையம் ஆகிய 5 இடங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
 • மேற்கண்ட இடங்களில் பயிர் மிச்சங்களை அகற்றிவிட்டு மண் வெட்டியால் அரை அடிக்கு மேல் மண்ணை வெட்டி எடுத்துவிட்டு பயிரின் வேர் இருக்கும் இடத்தில் உள்ள மண்ணை சேகரித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு 5 இடங்களில் சேகரித்த மண்ணை கலந்து அரை கிலோ அளவுக்கு மண் மாதிரி எடுக்க வேண்டும்.
 • சேகரித்த மாதிரிக்கு குறியீடு அளித்து மண் ஆயவகத்துக்கு அனுப்ப வேண்டும்.மண் ஆய்வகத்தில் கார அமிலத்தன்மை, உப்பின் தன்மை, தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, நுண்ணுரங்களின் அளவு ஆகியவற்றை அறிந்து உரமிடுகையில் உர செலவு குறைவதோடு, பயிர் பாதுகாப்பு மருந்துகளின் செலவும் குறைகிறது.

பசுந்தாள் பயிர்களைப் பயிரிடுதல்:

 • பசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டு 25 முதல் 35 நாள்களில் மடக்கி உழுவதன் மூலம் நிலத்தின் வலம் அதிகரிக்கிறது.
 • மண்ணின் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைகிறது. விளைச்சலும் அதிகரிக்கிறது.
 • தக்கைப் பூண்டு எனப்படும் டெய்னசா காவாலை எனப்படும் கொளஞ்சி அல்லது நரிப்பயிறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 10 கிலோ வீதம் விதைத்து 25 முதல் 30 நாள்களில் மடக்கி உழுது பின்னர் ஒருவாரம் கழித்து நடவுப் பணி மேற்கொள்ளலாம்
  நுண்ணுயிர் உரங்கள் உபயோகம்:
 • உயிர் உரங்களைப் பயன்படுத்தியும் உர செலவைக் குறைத்துக் கொள்ள முடியும். தழைச்சத்துகளான அசோஸ்பயிரிலம் ரைசோபியம் நுண்ணுயிர் உரங்களையும், மணிச்சத்து எனப்படும் பாஸ்பரம் சத்திற்கென பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்தலாம்.
 • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா உபயோகிக்கலாம்.
 • இதை விதை நேர்த்தி, நாற்றங்காலில் இடுதல், நடவு வயலில் இடுதல் ஆகிய மூன்று முறைகளில் உபயோகிக்கலாம்.
 • நுண்ணுயிர் உரங்கள் வேளாண்மை துறை மூலம் 50 சதவீதம் வரை மானியத்திலும் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களும் மேற்கண்ட நுண்ணுயிர் உரங்களை தயாரித்து விநியோக்கின்றனர்.

தழைச்சத்து பிரித்து எடுத்தல்:

 • இந்த நடவடிக்கை கையாளுவதன் மூலம் உர செலவைக் கட்டுபடுத்துவதோடு பயிர் பாதுகாப்பு செலவையும் கட்டுப்படுத்த முடியும்.
 • சம்பா பட்ட நெற் பயிருக்கு அடியுரம் இட்டபிறகு 20 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தழைச்சத்தை மேல் உரமாக இட வேண்டும்.
 • ஒருமுறைக்கு 22 கிலோவுக்கு மிகாமல் (10 கிலோ தழைச்சத்து) யூரியா உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
 • விலைக் குறைவு என்பதால் அதிகமாக யூரியா இடுவதால் பூச்சித் தாக்குதல் கண்டிப்பாக அதிகமாகும்.

அசோலா (தரணி வகை தாவரம்) இடுதல்:

 • நெற்பயிருக்கு அசோலா இடுவதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது.களைகள் இயற்கையாக குறைகிறது. விளைச்சல் கூடுகிறது.
 • ரசாயன உர உபயோகத்தையும் குறைத்துக் கொள்ள முடியும். நடவு வயலில் அசோலாவை விட்டு களை எடுக்கும்போது தண்ணீரை வடிகட்டி மிதித்து விடுகையில் மண்ணுக்கு தழைச்சத்து சேர்ந்து விடுகிறது.

மேற்கண்ட 5 முறைகளையும் பயன்படுத்தி விவசாயிகள் குறைந்த உரச்செலவில் அதிக மகசூலைப் பெற முடியும் என்கிறார் வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *