காய்கறி கழிவு, மீன் முள், முட்டை ஓடு… கிச்சன் கழிவுகளை உரமாக்குவது எப்படி?

குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம்.

‘மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரிச்சு குப்பைத் தொட்டியில போடுங்க’ என்று மாநகராட்சி எத்தனை முறை சொன்னாலும், அவையெல்லாம் வெறும் காதோடு போச்சு. காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில போடுவோம். குப்பைத் தொட்டி நிரம்பிக் கிடந்தா, மறுநாள் குப்பையைப் போட்டுக்கலாம்னு பெரிய மனசெல்லாம் பண்ண மாட்டோம். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்துலேயே வீசிட்டு வந்துடுவோம். நாம போட்டுட்டு வந்த அந்தக் குப்பைக் கவருக்குள்ள இருக்கிற பழைய சோற்றுக்காக, நாய் அதை குதறிப்போட, காய்கறிக் கழிவுகளுக்காக மாடு அதை நடுத்தெரு வரைக்கும் இழுத்துச் செல்ல… நம்ம வீட்டுக் குப்பை ஒரு தெருவோட சில சதுர அடிகளை நாறடிக்கும். அதிலும் வார இறுதியில் வீசப்படுற மீன் கழிவுகளோட வீச்சும் பக்கத்துத் தெரு வரைக்கும் மூக்கைப் பொத்த வைக்கும். ‘நாங்க என்ன பண்றது, குப்பை லாரி எங்க ஏரியாவுக்கு ரெகுலரா வர்றதில்ல…’ என்ற காரணத்தில் நியாயம் இருந்தாலும், நம்ம வீட்டுக் குப்பை நாம வசிக்கிற தெருவை பாழாக்காமல் இருக்க, குறைந்தபட்சமா நாம என்ன செய்யலாம்; அந்தக் குப்பைகளை வைத்து பயனுள்ளதா ஏதாவது செய்யலாமா… சமூக ஆர்வலர் இந்திரகுமாரிடம் கேட்டோம்.

குப்பை

”வருங்காலத்துல குப்பையை வெளியே போட முடியாது, போடவும் கூடாது. ஏன்னா, குப்பையைப் போடறதுக்கு இடம் இருக்காது. தொடர்ந்து நீங்க குப்பையை வெளியே போட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, உங்க அடுத்த தலைமுறை குப்பைமேட்டுலதான் வாழணும்” – நம்ம வீட்டுப் குப்பைகளைத் தொடர்ந்து தெருவில் கொட்டிக்கொண்டிருந்தால், எதிர்கால பூமி எப்படியிருக்கும் என்பதைப் பொட்டில் அறைவது மாதிரி சொல்கிற இந்திரகுமாரிடம், மக்கும் குப்பைகளை, தெருவுக்குத் தாரை வார்க்காமல் பயனுள்ளதாக மாற்றுவதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

சமூக ஆர்வலர் இந்திரகுமார்

”நம்ம எல்லோருடைய வீட்டிலும், தினமும் இரண்டு கைப்பிடி அளவுக்காவது காய்கறிக் கழிவுகள் கிடைக்கும். கீரைச் சமைக்கிற அன்னிக்கு இன்னும் அதிகமாவே கிடைக்கும். ரெண்டு பூந்தொட்டி வாங்கி வெச்சிக்கோங்க. கூடவே கொஞ்சம் வறட்டியும் (காய்ந்த மாட்டுச் சாணம்).

பூந்தொட்டிக்குள்ளே ஒரு வறட்டியை உடைச்சுப் போட்டு, அதுக்கு மேலே காய்கறிக் கழிவுகளைப் போடுங்க. ஒருவேளை அழுகிப்போன காய்கறிகள், இல்லைனா அழுகின தக்காளியை இந்தப் பூந்தொட்டிக்குள்ள போடப்போறீங்கன்னா, அதுல இருக்கிற தண்ணியையெல்லாம் நல்லா பிழிஞ்சு எடுத்துடுங்க. மறந்துபோயி அப்படியே போட்டீங்கன்னா, பூந்தொட்டியில கெட்ட வாடை வர ஆரம்பிக்கிறதோட, தொட்டிக்குள்ள கொசுக்களும் குடியேற ஆரம்பிச்சுடும்.

மீதமான ஒரு உருண்டை சாதத்தை இந்தத் தொட்டியில போடறதா இருந்தாக்கூட அதை நல்லா பிழிஞ்சுட்டுதான் போடணும். ஒரு லேயர் காய்கறிக் கழிவுகளைப் போட்டுட்டீங்கன்னா, அதுக்கு மேலே ஒரு வறட்டியைத் தூளா உடைச்சுத் தூவி விடணும். எக்காரணம் கொண்டும் இந்தத் தொட்டியை மூடக் கூடாது.

இப்படியே தினமும் செஞ்சு, ஒரு தொட்டி நிறைஞ்சவுடனே அடுத்தத் தொட்டியில கொட்ட ஆரம்பிச்சிடுங்க. ரெண்டாவது தொட்டி நிறையறதுக்குள்ள, முதல் தொட்டியில கொட்டிய காய்கறிக் கழிவுகளானது காய்ந்து போயிருக்கும். கையில் எடுத்து உடைச்சா தூள் தூளாகும். எந்தக் கெமிக்கலும் கலக்காத செடிகளுக்குப் பாதுகாப்பான இயற்கை உரம் இது.

இன்னிக்கு நிறைய பேர் வீட்டில் மாடித்தோட்டம் இருக்கு. அதுக்கு இந்த உரத்தைப் பயன்படுத்திக்கலாம். நாலு தொட்டியில் வெந்தயக்கீரை, கொத்தமல்லி பயிர் வச்சிருக்கீங்கனாலும் நீங்களே தயாரிச்ச இந்த உரத்தைப் போட்டு வளர்க்கலாம்.

முட்டை ஓடு, நண்டு ஓடு, இறால் ஓடு, மீன் முள், எலும்பு என எல்லாவற்றையும் நல்லா காய வைத்து, தூளாக்கி, பூச்செடிகளுக்குப் போட்டா, செடிகள் பூத்துக் குலுங்கும்.

காய்கறி கழிவு

மீன் கழிவுகளை வெளியே கொட்டினா வியாதிகள்தான் வரும். அதனால, மீன் கழிவு கொஞ்சமா இருந்தா பூனை, நாய்னு வாயில்லா பிராணிகளோட பசியாத்திடுங்க. அதிகமா இருந்தா, மீன் கழிவு, வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவுக்குள்ளப் போட்டு, இறுக்கமாக மூடி விடுங்கள். 40 நாள் கழித்துத் திறந்தா பழ வாசனையோட உரம் ரெடியாக இருக்கும். ஒரு கப் உரத்துக்கு 50 கப் தண்ணிக் கலந்து ஊத்தினா, பட்டுப் போகிற நிலைமையில இருக்கிற செடிகூட தழைக்க ஆரம்பிக்கும்.

இறால், நண்டு ஓடு உரம்

நான் மேலே சொல்லியிருக்கிற உரங்களை வீட்டுக்கும் பயன்படுத்தலாம், விற்பனையும் செய்யலாம். மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணுல போடக்கூடாதுங்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மக்கும் குப்பைகளை மறுசுழற்சி முறையில பயன்படுத்துறதும் முக்கியம். இது காலத்தோட கட்டாயம். உங்க பிள்ளைகளுக்கு பூமியை விட்டுட்டுப் போகப் போறீங்களா, இல்ல குப்பை மேட்டை விட்டுட்டுப் போகப் போறீங்களான்னு பெற்றோர் நீங்களே முடிவெடுங்க…” – தீர்க்கமாகப் பேசி முடித்தார் இந்திரகுமார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *