பூங்காக்களில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து உதிரும் இலைகள், வீணாக குப்பைக்கு செல்வதை தடுத்து, பிளாஸ்டிக் தொட்டி மற்றும் மூங்கில் கட்டமைப்பு அமைத்து, உரம் தயாரிக்கும் நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், பூங்காக்கள் துாய்மையாகவும், இயற்கை உரத்தின் மூலம், மரம், செடிகள் பசுமையாகவும் மாறும் என்பதால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில், 525க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பூங்காக்களில், அடர்த்தியான மரங்கள், நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, சிமென்ட் இருக்கை போன்ற வசதிகள் உள்ளன.
உரம் தயாரிக்க அமைத்துள்ள, ‘சின்டெக்ஸ்’ தொட்டி கட்டமைப்பு.
தற்போது, இவற்றுடன், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், யோகா மையம், புல்தரை, மூலிகை செடிகள் உள்ளிட்ட வசதிகளுடன், பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முந்தைய பூங்காக்கள், 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளன. இதில், அடர்த்தியான பலதரப்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன.இவற்றில், இருந்து உதிரும் இலைகள், குப்பை தொட்டியில் போடப்படும்; சில இடங்களில், தீயிட்டு கொளுத்தப்படும்.
காய்ந்த மற்றும் மக்கிய இலைகளை உரமாக்கி, அதே பூங்காவில் பயன்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, ஒவ்வொரு பூங்காவிலும், தனி கட்டமைப்பு கள் அமைக்கும் பணி நடக்கிறது. பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மூங்கில் பள்ளம் என, இரு கட்டமைப்புகள் அமைக்கப்படுகிறது.
சின்டெக்ஸ் தொட்டியில், அடிப்பாகத்தை அகற்றி, காற்றோட்டம் கிடைக்க, பக்கவாட்டில் ஆங்காங்கே துளை போடப்பட்டுள்ளது.தொட்டி அளவுக்கு ஏற்ப, பள்ளம் எடுத்து, அதில் புதைத்து வைத்து, மேல் மூடி துவாரம் வழியாக, காய்ந்த இலைகள் கொட்டப்படுகின்றன.தொட்டியில் நிரப்பிய இலைகள், மக்கி உரமாக, 45 நாட்கள் தேவைப்படும் என்பதால், பூங்கா பரப்பளவை பொறுத்து, இரண்டு தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், 8 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து, அதற்கு மேல், 4 அடி உயரத்தில், சுற்றி மூங்கில் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.பெரிய பூங்காக்களில், மூங்கில் கட்டமைப்பும், சிறிய பூங்காவில் சின்டெக்ஸ் தொட்டியும் அமைக்கப்படுகிறது.பூங்கா ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை கொண்டு, இவை பராமரிக்கப்பட உள்ளன. சில இடங்களில், பூங்கா நடைபயிற்சியாளர்கள் சங்கம் உள்ளது. அவர்கள் உதவியை பயன்படுத்தியும், உரம் தயாரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இலையில் இருந்து கிடைக்கும் உரத்தில், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகம் இருப்பதால், தாவரங்களின் வளர்ச்சியை துாண்டும்; பூங்கா பசுமையாக காட்சியளிக்கும்.இந்த திட்டம், பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ‘மாநகராட்சியில், எந்த தலைமை வந்தாலும், இத்திட்டத்தை தொடர வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீணடிக்கப்படும் இலைகள், உரமாவதால், பூங்கா பசுமை மேம்படும். மரம், செடிகள் அடர்த்தி யாக வளரும். ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும். மாநகராட்சி மட்டும் பராமரித்து வந்தால், அதிகாரிகள் மாறும்போது, இத்திட்டம் சில மாதங்களில் காணாமல் போய்விடும். தொய்வு ஏற்படாமல், இத்திட்டம் தொடர, எங்களால் முடிந்த உதவியை செய்ய தயாராக உள்ளோம்.
உரம் தயாரிக்க தேவையான, சேதமடைந்த சின்டெக்ஸ் தொட்டிகளை, குடிநீர் வாரியம் மற்றும் காயலான் கடைகளில் இருந்து வாங்கி வருகிறோம். உரம் தயாரிப்பை, முழு வீச்சில் நடத்த, பூங்கா பயன்படுத்துவோர் உதவியையும் நாடி உள்ளோம்.
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக, பிரகாஷ் பதவியேற்ற பின், திடக்கழிவு மேலாண்மையில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.அவர் இதற்கு முன், நகராட்சி நிர்வாக கமிஷனராக இருந்தவர். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார்.
நகராட்சிகளில், வெற்றிகரமாக செயல்படுத்தப்படும், நுண் உர செயலாக்க மையத்தை, பிரகாஷ் நேரடி கண்காணிப்பில், பல நகராட்சிகள் செயல்படுத்தின. அதே போல, சென்னை மாநகராட்சியிலும், உரம் தயாரிக்கும் திட்டங்களில், ஆர்வம் காட்ட, மண்டல அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளை மேம்படுத்தும் திட்டத்திலும், புதிய கமிஷனர் ஆர்வம் காட்டுவதால், சென்னையின் குப்பை பிரச்னை விரைவில் தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்