தென்னை நார்க்கழிவு தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. அதே போல் களர்நிலங்களை திருத்தும் பண்புடையவை தான் தென்னை நார்க்கழிவுகள். அதை பற்றி காண்போம்.
தென்னை நார்க்கழிவு அதன் எடையைக் காட்டிலும் 5 மடங்கு நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
தென்னை நார்க்கழிவு மண் திருத்தியாகவும், மானாவாரி நிலங்களில் ஈரப்பதம் காத்திடும் நிலப்போர்வையாகவும் பயன்படுகிறது. கடின மண்ணை பொலபொலப்பாக மாற்றவும் உதவுகிறது.
தென்னை நார்க்கழிவில் தழைச்சத்து 0.21-0.30 சதவீதம், மணிச்சத்து 0.09-0.10 சதவீதம், சாம்பல் சத்து 0.78-1.02 சதவீதம் மற்றும் இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பயிர்சத்துக்கள் உள்ளன. எனவே, இது நல்ல உரமாகவும் பயன்படுகிறது.
தென்னை நார்க்கழிவை நேரடியாக மண்ணில் இடும்போது அது எளிதில் மக்குவதில்லை. இதற்கு காரணம், அதில் 20 முதல் 27 சதவீதம் செல்லுலோஸ், 25 முதல் 30 சதவீதம் லிக்னின் ஆகியவை இருப்பதே காரணம்.
தென்னை நார்க்கழிவை மக்க வைத்து நிலத்தில் இடும் போது அது நன்கு பொலபொலப்பான துகள்களாக மாறி விடுகிறது.
இந்த நார்க்கழிவு துகள்கள் நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் உடையதாகவும், உரமாகவும் செயல்படுகிறது.
தென்னை நார்க்கழிவை மக்க வைக்க புளுhரோட்டஸ் என்னும் சிப்பிக்காளானை பயன்படுத்தலாம்.
தென்னை நார்க்கழிவை மக்க வைக்க அதனுடன் சில இடு பொருட்களை சேர்க்க வேண்டும்.
தயாரிக்கும் முறை :
தென்னை நார் உரம் தயாரிக்க 5-க்கு 3 மீட்டர் அளவில் குழி எடுத்து கொள்ள வேண்டும். இந்த குழியில், 100 கிலோ நார்க்கழிவை போட்டு அதனுடன் 300 கிராம் சிப்பிக் காளான் வித்து, போட்டு மீண்டும் அடுக்குகளை உருவாக்க வேண்டும். இது போல், 5 அடுக்குகளை அமைக்கலாம்.
இவ்வாறு, நார்க்கழிவு அடுக்குகளை அமைத்தவுடன் குழியை நார்க்கழிவுகளால் மூடி 30 நாட்கள் வரையில் விட்டு விட வேண்டும். பிறகு இதனை எடுத்து பார்த்தால் தென்னை நார்க்கழிவு நன்கு அடர்மர நிறத்தில் பொலபொலப்பானதாக மாறியிருக்கும். இதனை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்