எந்த ஒரு பயிரும் தனக்குத் தேவையான சத்துகளைத் தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலிருந்தும், மண்ணிலிருந்தும் தானாகவே கிரகித்துக் கொள்கிறது.
மண்ணில் தழைச்சத்தை நிலைப்படுத்தி ரசாயன உரங்களைத் தவிர்த்து அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, டாக்டர் பெருமாள் அறிவியல் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறியது:
- பொதுவாக உயிர் உரங்கள் பெரும்பாலும், தழைச்சத்தையும், மணிச்சத்தையும் அளிக்கவல்லன.
- காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்தியும், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்தும் கொடுக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உயிரி உரங்களாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
- உயிர் உரங்களைத் தழைச்சத்தை நிலைப்படுத்தும் உரங்கள், மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் நுண்ணுயிர் உரங்களாகப் பிரித்து வகைப்படுத்தலாம்.
- தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரங்களுக்கு உதாரணமாக ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர் போன்றவற்றையும் கூறலாம்.
ரைசோபியம்
- ஒரு பாக்டீரியா இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர் ஆகும்.
- அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில், வேர் முடிச்சுகளை உண்டாக்குகிறது.
- ரைசோபியம் நுண்ணுயிர் உபயோகத்தால் தழைச்சத்து உரத்தைச் சேமிப்பதுடன், 20 சதம் அதிக மகசூலையும் தருகிறது.
- பயிர்களின் வேர்களில் இருந்து கசியும், வேர்க்கசிவுகளும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருள்களும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன.
- பயிர்களின் ரகங்களுக்கு ஏற்ற பயிரிடப்படும் இடத்துக்கு உகந்த ரைசோபிய வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உபயோகப்படுத்தும் முறைகள்:
- 10 கிலோ விதைகளுக்கு ஒரு பாக்கெட் ரைசோபியம் (200 கிராம்) போதுமானது.
- 10 கிலோவுக்கு மேல் தேவைப்படும் விதைகளுக்கு, இரண்டு பாக்கெட்கள் ரைசோபியம் போதுமானது.
- இலைமக்கு, மண் அல்லது கரித்தூளில் கலக்கப்பட்ட ரைசோபியம் நுண்ணுயிரை ஒரு டம்ளர் (200 மி.லி.) அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும்.
- இந்தக் கலவையில் தேவையான அளவு விதைகளை இட்டு, எல்லா விதைகளிலும் கலவை ஒட்டிக் கொள்ளுமாறு நன்றாகக் கலக்க வேண்டும்.
- கலந்த விதைகளை நிழலில் 30 நிமிஷங்கள் உலர்த்தி உடனடியாக விதைக்கலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்