பயிர் வளர்ச்சியில் நுண்ணுாட்ட சத்துக்களின் பங்கு

நுண்ணுாட்ட சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கு குறைந்த அளவிலேயே தேவைப்படும். இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம் மற்றும் குளோரின் என ஏழு தனிமங்கள் நுண்ணுாட்ட சத்துக்களாக கூறப்படுகின்றன.

போரான்: புதிய செல்கள் உற்பத்தி, மகரந்த சேர்க்கை, காய், கனி உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. அமினோ அமிலங்கள் மற்றும் புரத உற்பத்தியிலும் உறுதுணையாக உள்ளது. பயறு வகை பயிர்களின் வேர்களில், வேர் முடிச்சுகள் உண்டாவதை துாண்டுகிறது.

குறைகள்: இலைகள் சுருண்டு, நொறுங்கும் தன்மையை அடையும். இலைகள் மற்றும் கனிகள் முதிராமலே உதிரக் கூடும். காய்களில் வெடிப்பு உண்டாகும்.

நிவர்த்தி: போராக்ஸ் 10 கிராம்/லிட்டர் அல்லது போரிக் அமிலம் 3 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தாமிரம்: வைட்டமின் ‘ஏ’ உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தாவரங்களில் சுவாசம் தங்குதடையின்றி நடக்க ஒரு துாண்டு கோலாக விளங்குகிறது. பச்சைய உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

குறைகள்: பயிர் வளர்ச்சியில் பின்னடைவு, வளர்ச்சி குன்றுதல், இளம் குறுத்துகளில் மஞ்சள் நிறம் போன்ற அறிகுறிகள் தென்படும். பழங்களில், காய்கறிகள் வெடிப்பு ஏற்படும். இலை நுனிகள் மற்றும் ஓரங்களில் கருகல் ஏற்படும்.

நிவர்த்தி: காப்பர் சல்பேட் 0.5-1 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

துத்தநாகம்: ஹார்மோன்கள் உற்பத்தியில் முக்கிய செயலாற்று கிறது. தாவர இனப் பெருக்கத்தில் தலையாய பங்களிக்கிறது.

குறைகள்: இளங்கொழுந்துகளில் நரம்புகளிடையே மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைகள் சிறுத்தும், உருமாறியும் காணப்படும்.

நிவர்த்தி: சிங்க் சல்பேட் 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

இரும்பு: பச்சைய உற்பத்தியில் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

குறைகள்: இளம் கொழுந்துகளின் நரம்புகளிடையே வெளிர் மஞ்சள் நிறம் தென்படும். பற்றாக்குறை நீடித்தால் முழு பயிரும் வெளிர் பச்சை நிறமாகி விடும்.

நிவர்த்தி: அன்னப்பேதி உப்பு (பெரஸ் சல்பேட்) 25 கிராம்/ எக்டர் என்ற அளவில் இடலாம் அல்லது பெரஸ் சல்பேட் 5 கிராம்/லிட்டர் என்ற அளவில் இலை வழியாகவும் தெளிக்கலாம்.

மாங்கனீசு: பச்சையம் உற்பத்தி செய்ய உதவுகிறது. ஒளிச் சேர்க்கைக்கு மிகவும் உறுதுணையாக செயல்படுகின்றது.

குறைகள்: இளம் கொழுந்து களின் நரம்புகளிடையே வெளிர் மஞ்சள் நிறம் தென்படும். ஆனால், செடி பச்சை நிறத்தில் இருக்கும். குறைபாடு நீடித்தால் வளர்ச்சி குன்றும்.

நிவர்த்தி: சுண்ணாம்பு கலந்த மாங்கனீசு சல்பேட்டை தெளிக்கவும்.
மாலிப்டினம்: தாவரமானது, இரும்புச் சத்தினை மண்ணில் இருந்து எடுக்கவும், ஊடுருவிச் செல்லவும் வழிவகை செய்கிறது. தழைச்சத்து கிரகிக்கவும் உதவி புரிகின்றது.

குறைகள்: தழைச்சத்து பற்றாக்குறை போல அறிகுறி தென்படும்.
முதிர் மற்றும் மத்திய இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இலையோரங்கள் மடங்கியும், வளர்ச்சியில் சற்று பின்னடைவும் காணப்படும். பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது.

நிவர்த்தி: அமோனியம் மாலிப்டேட் 1-5 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.

தொடர்புக்கு 9443990964 .
த.விவேகானந்தன்
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்
மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *