பாலிதீன் பாக்கெட்டுகளில் வழங்கி வந்த, பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, வேளாண் துறை நடப்பு ஆண்டில் இருந்து, திரவ வடிவில், உயிர் உரங்கள் (பயோ- பெர்டிலைசர்) விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தீவிரம் காட்டி வருகிறது.
இந்த திரவ உயிர் உரங்களின் பயன்பாட்டினால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறையும் என, விவசாயிகளிடம் வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 1.48 லட்சம் ஏக்கரில் நெல்லும்; 25,490 ஏக்கரில் வேர்க்கடலை; 10,139 ஏக்கரில் பயறு வகை பயிர்கள், பயிரிடப்பட்டுள்ளதாக, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மேலும், விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த, வேளாண் துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மண் மாதிரி சேகரிப்பு
முதல் கட்டமாக, விவசாயிகள் மண்ணின் தன்மை குறித்து அறிய, மாவட்டம் முழுவதும், மண் மாதிரிகளை, விவசாயிகளுடன் அந்தந்த வேளாண் உதவி அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். மண் பரிசோதனை முடிவில், மண்ணின் தன்மை; சத்துக்கள் விவரம்; பயிரிடப்படும் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகள், வேளாண் துறையால் வழங்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, உரச் செலவை குறைக்கவும், நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும்; உயிர் உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், உயிர் உரங்களை அசோஸ்பயிரில்லம்; பாஸ்போ பாக்டீரியா; ரைசோபியம் ஆகிய பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, நடப்பாண்டில் இருந்து, திரவ உயிர் உரங்களை வழங்குவதற்கு, வேளாண் துறை, தீவிரம் காட்டி வருகிறது.
கூடுதல் மகசூல்
இந்த திரவ உயிர் உரங்களை, விவசாயிகள் எளிதாக பயன்படுத்துவதற்கும், விதை நேர்த்தி மற்றும் நேரடியாக மண்புழு; தொழு உரத்துடன் கலந்து வயலில் இடுவதற்கும்; இலை வழி ஊட்டமாகவும் (தெளிப்பு முறை); நீர் வழியாகவும் (சொட்டு நீர் பாசனம்) பயன்படுத்தலாம்.
மேலும், விவசாய கூலி ஆட்கள் மற்றும் யூரியா; டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களின் பயன்பாட்டை கணிசமான அளவு குறைத்து, பூச்சி நோய் தாக்குதலை தவிர்ப்பதன் மூலம், 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதம் வரை, கூடுதல் மகசூல் கிடைக்கும் என, வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டில் இருந்து, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், தேவையான அளவிற்கு, திரவ உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சம்பா பருவத்தில், விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்றவாறு, திரவ உயிர் உரங்களை வாங்கி பயன்பெறலாம். மேலும், பாக்கெட் உயிர் உரங்களின் வினியோக பயன்பாடும் அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்