பொகாஷி composting

வளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன.

தற்போது, மட்கும் பொருட்களை மண்ணில் புதைக்கும் போது, சிறிது நுண்ணுயிரிகளை அப்பொருட்களுடன் கலந்து புதைகிறார்கள். அந்த நுண்ணுயிரிகள் அப்பொருட்களை விரைவாக மட்கச் செய்து உரமாக்குகின்றன.

இது எளிதில் மட்கும் பொருட்களை வைத்து செய்யப்படுவதால் வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட, மிகக் குறைந்த விலையில் செய்யலாம். இரசாயனங்கள் இல்லாமல் கிடைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை கலப்புரம் இது. இதனை மக்கியுரம் என்றும் சொல்கிறார்கள்.

வீடுகளில் இதனை செய்ய நமக்கு தேவை ஒரு பொகாஷி உர வாளி (Bokashi Compost Bin). இது தற்போது தோட்டம் சார்ந்த வணிக மையங்களில் கிடைக்கிறது. அல்லது, நாமே கூட வீடுகளில் இரு வாளிகளை வைத்து தயார் செய்து கொள்ளலாம். நாமே செய்யும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்: –

1. வாளிக்கு காற்று புகாத வண்ணம் மூடி இருக்க வேண்டும்.
2. ஒரு வாளி, மற்றொன்றின் உட்சென்று உட்கார வேண்டும், அவ்வாறு உட்காரும் போது காற்று புகாத வண்ணம் இருக்க வேண்டும்.
3. கீழுள்ள வாளியில் ஒரு குழாயை பொருத்திக் கொள்ள வேண்டும்.
4. மேலுள்ள (உட்செல்லும்) வாளியின் அடிப்பகுதியில் சில துவாரங்களை இடவேண்டும்.

சரி, உர வாளி தயார் என்றால், உரம் எப்படி செய்வது?

நுண்ணுயிரியை வாங்க வேண்டும், அது நாம் பயன்படுத்தும் ஈஸ்ட் போன்று பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. நுண்ணுயிரியை வாங்காமல் நம்மிடம் இருக்கும் பழைய மண்புழு மற்றும் மட்கிய உரத்தினையும், மண்ணையும் வைத்தே உரம் செய்யலாம், ஆனால் பொருட்கள் மட்க அதிக காலம் பிடிக்கும். வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் நுண்ணுயிரிகளை வாங்குவதே சிறந்தது, சீக்கிரம் வேலை ஆகும் – சீக்கிரம் என்றால் இரு மாதங்களுக்குள்! இது நுண்ணுயிரி என்பதால், இதில் இரசாயனங்கள் இல்லை என்பதை சொல்லத் தேவையில்லை.

வாளியில் கீழ் பகுதியில் சிறிது நாட்டு சர்க்கரை போட்டு அதல் மேல் வாளியை வைத்து விட வேண்டும். மேல் வாளியில் (துவாரங்கள் இருக்கும் வாளியில்) சில நாப்கின் பேப்பர்களை போட்டு சமப் படுத்தி ஒரு தேகரண்டி நுண்ணுயிரி தூளினை போட்டு காற்று புகாத வண்ணம் மூடி விட வேண்டும்.

மறுநாள் முதல், வீட்டு சமலறையில் கிடைக்கும் திடக் கழிவுகளை அதில் போட வேண்டும். ஒரு விரலாழத்தில் கழிவுகள் சேர்ந்த பின் கையிறை பயன்படுத்தியோ அல்லது தட்டையான ஒன்றை பயன்படுத்தியோ கழிவுகளை அமுக்கி விட்டு அதில் ஊடே உள்ள காற்றினை வெளியேற்றி ஒரு தேக்கரண்டி நுண்ணுயிரி தூளினை தூவி விட்டு காற்று புகாத வண்ணம் மீண்டும் மூடி விட வேண்டும். இவ்வாறு வாளி நிறையும் வரை செய்ய வேண்டும்.

முதல் கழிவுகள் போட்ட மூன்று அல்லது நான்கு நாட்களில் இருந்து ஒரு வகையான திரவம் உருவாகி கீழுள்ள வாளியில் தேங்கும். அந்த திரவத்தினை குழாய் மூலம் வெளியேற்ற வேண்டும். அந்த திரவத்தினை நீரில் கலந்து செடி/கொடிகளுக்கு ஊற்றலாம் அல்லது சமையலறை சிங்குகளில் ஊற்றி விடலாம். இந்த திரவம் நுண்ணுயிரிகள் நிறைந்தது என்பதால் சிங்க் வழியாக சென்று அப்பாதையில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனை தின்று சரி செய்யும். (சூடான நீருடன் கலந்தால் நுண்ணுயிரிகள் இறந்துவிடும்).

வாளி நிறைந்த பின் பதினைந்து நாட்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். (அவ்வப்போது குழாய் வழியாக திரவத்தினை வெளியேற்ற மறந்து விடகூடாது). அக்கழிவுகள் நன்கு ஊறி இருக்கும், திறந்து பார்த்தால் அதன் மேல் வெண்மை நிறத்தில் நுரை போன்ற படலம் உருவாகி இருக்கும். இதுதான் உரமாக்கல் நன்முறையில் நடைபெறுகிறது என்பதன் அறிகுறி. அவ்வாறு நுரை படலம் உருவாகாவிட்டால் ஏதோ தவறு நடந்திருகிறது என்று பொருள். தவறுகள் பொதுவாக நாம் இடும் கழிவுகளால் வருபவை. சில கழிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

போடக்க்கூடிய கழிவுகள்: –

– காய்கறிகளின் தோல்கள்
– பழங்களின் தோல்கள்
– பூக்கள்
– முட்டை ஓடுகள்
– மீதமான சாப்பாத்தி, ரொட்டி துண்டுகள்
– சீஸ், பனீர் வகைகள்
– காப்பி, தேநீர் பைகள் ,
– டிக்காஷன் வடிகட்டிய தூள்
– பேப்பர்கள், அட்டைகள் (துண்டு-துண்டுகளாக)
– மரத்தூள் (அதிகம் வேண்டாம்)
– பச்சை மற்றும் மீதமான சமைத்த இறைச்சி போன்ற உணவுபொருட்கள் (சிறிய அளவில் மட்டும்).

தவிர்க்கவேண்டிய கழிவுகள்: –

– பால், தயிர், சாம்பார், ரசம், கூட்டு, ஜூஸ் போன்ற நீர் வகைகள்
– எலும்புகள்
– எண்ணெய், எண்ணெய்த்தாள்
– பிளாஸ்டிக், அலுமினிய உறைகள்

அவ்வாறு மேல்மட்டத்தில் நுரை தள்ளியவுடன் அதனை தோட்டத்தில் குழி பறித்து நிரப்பி விடலாம். ஓரிரு மாதத்திற்கு பின் அந்த மண்ணை கிளறி எடுத்து உரமாக பயன்படுத்தலாம் அல்லது அப்படியே விட்டு விடலாம்.

மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், மேல்மட்டத்தில் நுரை தள்ளியவுடன் அதனை வேறொரு பெரிய வாளியில் ஒரு பங்கு உரத்திற்கு இரண்டு பங்கு மண் அல்லது cocopeat எனப்படும் தேங்காய்நார் கழிவுடன் சேர்த்து சேமித்து வைத்து ஒரு மாதம் கழித்து அதனை தொட்டிகளுக்கு மண்ணாகவே பயன்படுத்தலாம்.

இதில் உருவாகும் உரம் மண் வாசனையுடனே இருக்கும், கழிவுகள் நாற்றம் எடுக்காது. தாராளமாக வெறும் கையில் தொடலாம்.

ஒருவேளை நுரை படலம் உருவாகாவிட்டாலோ அல்லது நாற்றம் எடுத்தாலோ நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். அந்த வாளியில் உள்ளவற்றை அப்படியே வெளியே கொட்டி விட்டு அல்லது மண்ணில் போட்டு மூடி விட்டு மீண்டும் முதலில் இருந்து வேலையை தொடங்க வேண்டியதுதான்.

நன்றி:agriwiki

Bokashi composting


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பொகாஷி composting

  1. Saravanan Nagarajan says:

    நண்பரே,

    நன்றி.

    நுண்ணுயிரியை, Bokashi Compost Binஐ எங்கு வாங்கலாம்??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *