மண்ணின் மலட்டுத்தன்மையை நீக்கும் பசுந்தாள் உரச்செடிகள்

ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்பாட்டினால், மண்ணின் அங்ககச்சத்துகள் குறைந்து மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது. இதனை நீக்க இயற்கைவழி உரங்களான பசுந்தாள் உரச்செடிகளை அதிகம் பயிரிட வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், வேளாண் அறிவியல் மையத்தினரும் வலியுறுத்துகின்றனர்.

ஆடிப்பட்டத்தில் வயல்களில் கால்நடைகளின் கழிவுகள் சாணக் குப்பைகளை கொட்டியும், நெல் சாகுபடி நிலத்தில் தொழி உழவின்போது செடிகளையும், மலைகளில் வளரும் தழைகளையும் சேற்றில்போட்டு உரமாக்கியும் சாகுபடி செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் மலைகளில் செடி, கொடிகள் தழைக்கவில்லை. இந்நிலையில், வயலில் கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, சஸ்பேனியா, குதிரைமசால் போன்றவற்றை சில விவசாயிகள் விதைத்தனர். அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும், அச்செடிகளை தொழியில் மடக்கி உழுது தண்ணீரைத் தேக்கிவைத்து மண்ணில் கலக்க வைக்கின்றனர்.

அதிகமானோர் ரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாளவகை மருந்துகளை பயன்படுத்துவதால், மண்ணில் அங்ககச் சத்துகள், ஊட்டம் குறைந்து மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

எனவே, மண்ணின் ஊட்டத்தை அதிகரிக்க பசுந்தாள் உரச்செடிகளையே பெரிதும் நாடவேண்டியுள்ளது. ஆகவே, ஏக்கருக்கு கொளுஞ்சி விதை பத்து கிலோ, தக்கைப்பூண்டு, சஸ்பேனியா உள்ளிட்ட செடி விதைகளை 20 கிலோ விதைக்க வேண்டும்.

ஒருமுறை டிராக்டரில் உழுது, பசுந்தாள்செடி விதையை விதைத்து மேலும் ஒரு உழவு செய்தால் போதுமானது. கால்வாய்களில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதும், செடிகளை மடக்கி உழுதுவிடலாம். இதனால், ரசாயன உரத்தின் செலவு குறையும்.

தக்கைப்பூண்டுச் செடியில் தழைச்சத்து 3.5 சதம், மணிச்சத்து 0.6 சதம், சாம்பல்சத்து 1.2 சதம் உள்ளது. எனவே, பசுந்தாள் உரச்செடிகளைப் பொருத்தவரை தக்கைப்பூண்டுக்கு முதலிடம் தரலாம்.

விதை விதைத்த 40 நாள்களுக்குள் அதை மடக்கி உழ வேண்டும். சஸ்பேனியாவில் தழைச்சத்து 2.7 சதம், மணிச்சத்து 0.5 சதம், சாம்பல்சத்து 1.5 சதமும் உள்ளது.

மேலும், தட்டைப்பயறு, பில்லிப்பயறு, கொத்தவரை விதைகளையும் விதைத்து செடிகள் பூக்கும் தருணத்தில் தொழியில் மடக்கி உழுதும் மண்ணுக்கு உரமேற்றலாம்.

தற்போது தென்மேற்குப் பருவமழை மிகவும் சாதகமாக உள்ளதால், நெல் சாகுபடியில் உரச்செலவைக் குறைக்க பசுந்தாள் உரச்செடிகள் விதைப்பை விவசாயிகள் மேற்கொள்ளவேண்டும் என மதுரை வேளாண். அறிவியல் மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *