மண் வளத்தை காப்பதில் பசுந்தாள் மற்றும் பசுந்தழை இயற்கை உரங்களின் பங்கு அதிகம்.
ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் பசுந்தாள், பசுந்தழை இயற்கை உரங்களை நிலத்தில் இட வேண்டும். இவற்றை நிலத்தில் விதைத்து மடக்கி உழுவதன் மூலம் உரச்செலவின் தேவை குறையும்.
தக்கைப்பூண்டு, சணப்பூ, கொளுஞ்சி, மணிலா, அகத்தி, சித்தகத்தி, நரிப்பயறு போன்றவை பசுந்தாள் உரங்கள். வேம்பு, எருக்கு, நொச்சி, கிளரிசிடியா போன்றவை பசுந்தழை உரங்கள்.
தக்கைப்பூண்டு நீர் தேங்கும் பகுதியிலும் வறட்சி தாங்கியும் வளரும். களர், உவர் நிலங்களுக்கு ஏற்றது. இவற்றை மடக்கி உழும்போது உருவாகும் அங்கக அமிலங்கள் மண்ணின் களர், உவர் தன்மையை குறைக்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ ரைசோபியம் உயிர் உரம், ஒன்றரை லிட்டர் ஆறிய அரிசி அல்லது மைதா கஞ்சியுடன் 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகளை கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம். 45 முதல் 60 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதால் 10டன் பசுந்தாள் கிடைக்கும்.
நிழலிலும் சணப்பை வளரும் என்பதால் தென்னையில் ஊடு பயிராகப் பயிரிடலாம். இதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
ஆடு, மாடுகள் கொளுஞ்சி செடியை மேயாது என்பதால் வேலியில்லாத நிலங்களிலும், தென்னையில் ஊடுபயிராகவும் பயிரிடலாம். ஒருமுறை பயிரிட்டால் அடுத்தடுத்து தானாகவே முளைக்கும்.
பசுந்தாள் உரங்கள், வேர்களில் வேர் முடிச்சுகளை உருவாக்கி காற்றிலுள்ள தழைச்சத்தை சேமித்து வைக்கிறது. அதன் பின்னர் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து அதிக மகசூல் தருகின்றன.
கடினமான மண்ணில் நுண்துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம், நீர் வடிகாலுக்கு உதவுகின்றன. இளக்கமான மண்ணில் நீர் இருப்புத்திறனை அதிகரிக்கிறது.
கோடையில் இவை நிலப்போர்வையாக அமைந்து நீர் ஆவியாதலை தடுக்கிறது. மேலும் மண்ணின் ஆழத்தில் உள்ள கேடு விளை விக்கும் உப்புகள் மேலே வராமல் தடுக்கிறது. எனவே பயிர் சுழற்சியில் பசுந்தாள், பசுந்தழை உரங்களை சேர்த்துக் கொண்டால் உயர் விளைச்சல் பெறலாம்.
– ஒருங்கிணைப்பாளர் செல்வி
உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார்
வேளாண் அறிவியல் மையம் மதுரை விவசாய கல்லுாரி
8220519581
.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்