மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி குறித்து, வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் தி. ரங்கராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் செல்வி ரமேஷ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளதாவது:மக்கள் தொகைப் பெருக்கத்தால் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் திடக் கழிவுகளின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக்கழிவுகள் ஆங்காங்கே கொட்டிக் கிடப்பதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தக் கழிவுகள் மற்றும் பயிர்க் கழிவுகளை, எளிதில் மக்கும் மற்றும் எளிதில் மக்காத கழிவுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். எளிதில் மக்கக்கூடிய தாவர ஊட்டச் சத்துகள் நிறைந்த இக்கழிவுகளை, சரியான முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை உரங்களையும் பெறலாம்.
இக்கழிவுகளை உரமாக்க மண்புழு சிறந்த பங்காற்றுகிறது. விவசாய பண்ணைக் கழிவுகள், மாட்டுத்தொழுவக் கழிவுகள், காய்கறி கழிவுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் ஆகியவற்றை, உழவர்களின் நண்பனான மண்புழுக்களுக்கு உணவாக அளித்து, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதிக அளவில் தாவர ஊட்டச் சத்துகள் கொண்ட உரமாக மாற்றுவதற்கு, மண்புழு உரம் தயாரித்தல் எனப்படுகிறது.
இம்முறையின் மூலம் பெறப்பட்ட மக்கிய சத்து நிறைந்த நிலையான இறுதிப் பொருள் மண்புழு உரம் என்றழைக்கப்படுகிறது. இம்மண்புழு உரம் தயாரிக்கும் முறை விவசாயப் பெருமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8.10.2014 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள விவசாயிகள், 04522422955 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளனர்.
நன்றி:தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்