மண்புழு வளர்ப்பு
மண்புழு வளர்க்க மேட்டுப்பாங்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் நீர் தேங்கினால் புழுக்கள் இறந்துவிடும். மழைநீர் அடித்துச் செல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். மண்புழுப் படுகைக்கு மேல் கட்டாயம் நிழல் வேண்டும். வெயிலில் புழுக்கள் இருக்காது. எனவே, கூரையோ பந்தலோ அமைக்க வேண்டும். மர நிழலாவது இருக்க வேண்டும்.
தாவரக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள் அருகிலேயே கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். விற்பனைக்காக, பயன்பாட்டுக்காகப் போக்குவரத்து வசதி இருக்கும் இடமாகத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
கோழி, பெருச்சாளி, காட்டுப் பன்றி போன்று மண்புழுக்களைத் தின்னும் உயிரினங்கள் பல உள்ளன. அவற்றிடமிருந்து மண்புழுக்களைப் பாதுகாப்பதுதான் மிகவும் முதன்மையான வேலை. எறும்புகள் நல்ல நிலையில் உள்ள புழுக்களைத் தாக்குவதில்லை. காயம்பட்டால் தாக்கித் தின்கின்றன. இதற்கு மஞ்சள் தூளைத் தூவி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். சில இடங்களில் பிள்ளைப்பூச்சிகள் தொல்லை தருகின்றன. இதற்குச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. எக்காரணம் கொண்டும் பூச்சிகொல்லிகளையோ வேதி உப்புக்களையோ பயன்படுத்தக் கூடாது.
ஒரு சதுர முழத்தில் (மூன்றடிக்கு மூன்றடி) நன்கு வளர்ந்த நிலையிலுள்ள 70 மண்புழுக்கள் வாழ முடியும். ஆனால், பொதுவாக 10 -15 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளன. இந்த எண்ணிக்கையைக் கூட்டினால் மண் வளம் பெறும். மழைக்காலத்தில் இவற்றின் எண்ணிக்கை பெருகும். கோடையில் குறையும். நல்ல உணவும் குளிர்ச்சியான சூழலும் இருக்குபோது, மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மண்புழுக்கள் இருபாலினத்தவை. ஒரே நேரத்தில் இணையும் இந்தப் புழுக்கள், ஒன்றின் உடலின் மீது இன்னொன்றாக விந்துவை உட்செலுத்துகின்றன. ஒவ்வொரு புழுவும் ஒன்று அதற்கு மேற்பட்ட கூட்டுமுட்டைகளை (கக்கூன்) இடுகின்றன. இவற்றின் உள்ளே முட்டைகள் இருக்கும். இவை முதிர்ந்து புழுக்களாக வெளிவரும். ஏறத்தாழ ஒரு வளர்ந்த புழு 10 முதல் 15 முறை முட்டைகளை இடுகிறது.
மண்புழுக்களின் வாழ்நாள் எவ்வளவு என்று இன்னும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், சில ஆய்வாளர்கள் இதன் ஆயுள் காலம் மூன்று ஆண்டுகள் இருக்கலாம் என்று கூறுகின்றனர். பெட்டி முறையில் வளர்த்த ஒருவர் ஒரு புழுவின் வாழ்நாள் 10 ஆண்டுகள் இருந்ததாகக் கணக்கிட்டுள்ளார். மண்புழுக்கள் மக்கிய பொருட்களோடு நுண்ணுயிர்களையும் உண்ணுகின்றன. மண்புழுக்கள் மட்குப் பொருட்களை விழுங்கி உள்ளே தள்ளுகின்றன. இதன் தலைப்பகுதியில் உள்ள தடித்த தசை மூலம் அரைக்கின்றன.
இனிவரும் காலத்தில் இயற்கை வேளாண்மைதான் நிலைக்க முடியும். இதற்கு அடிப்படையான மண்புழு உரம் உருவாக்குதல், மண்புழு வளர்த்தல் இரண்டையும் நம்மால் செய்ய முடியும். நிலம் உள்ளவர்கள் தமது பண்ணையில் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பிற பண்ணையாளர்களுக்கு மண்புழுக் கழிவான உரத்தை வழங்கி ஒரு தொழிலாகவும் செய்யலாம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்