மதுரையில் : மக்கும் கழிவுகளை வளமிகு ‘ஏரோபிக்’ உரமாக்கும் முறை

மக்கும் கழிவுகளை வளமிகு உரமாக்கும் ‘ஏரோபிக்’ முறையை மதுரையில் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகள், குப்பை கிடங்குகள் அப்புறப்படுத்தப்படும். இதற்கு பதில் குடியிருப்பு பகுதியிலேயே குப்பை கொட்ட உரக்கிடங்கு அமைக்கப்படும்.

துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்குவர். மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்படும். அடுத்தகட்டமாக மதுரை மாநகராட்சி புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

தினமும் அதிகளவில் மக்கும் குப்பை உற்பத்தியாகும் மார்க்கெட், திருமண மண்டபம், ஓட்டல் கழிவுகளை அங்கேயே கொட்டி உரமாக்க பரிந்துரைத்துள்ளது. இதற்கு ‘ஏரோபிக்’ முறை கடைபிடிக்கப்படுகிறது. முதற்கட்டமாக மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இம்முறை செயல்பாட்டுக்கு வர ‘ஏரோபிக்’ முறையில் உரம் தயாரிக்கும் 4 மரத்தொட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொட்டியும் 3 ஆயிரம் கிலோ மக்கும் குப்பையை சேமிக்கும். தினமும் 100 கிலோ குப்பை கொட்டலாம். 30 நாள் முடிவில் தொட்டி நிறைந்து விடும். அடுத்த 30 நாளில் குப்பை மக்கி உரமாகும். இம்முறையில் உரம் தயாரிப்பது மிகவும் எளிது. செலவும் குறைவு. உரத்தை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். வீட்டுத் தோட்டங்களுக்கும் ஏற்றது.

18 மரத்தொட்டிகள்

2வது மண்டல சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் கூறியது: மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 18 மரத்தொட்டிகள் வைக்க உள்ளோம்.9 தொட்டிகளில் 30 நாட்கள் குப்பை கொட்டப்படும். அடுத்த 30 நாட்களில் உரம் தயாராகும். இடைப்பட்ட 30 நாளில் மீதம் உள்ள 9 தொட்டிகளில் கழிவுகளை கொட்டி மக்கச் செய்வோம். இப்படி சுழற்சி முறையில் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்படும்.


‘ஏரோபிக்’ முறை என்பதை காற்றுப்புகும் முறை எனலாம். உரம் தயாராகும் பெட்டிக்குள் காற்றுப்புகும் வசதி உள்ளது. இதனால் துர்நாற்றம் தவிர்க்கப்படும். காய்கறி கழிவுகள், உணவு மீதம் போன்ற ஈரப்பதமுள்ள மக்கும் குப்பையை இந்த முறையில் உரமாக்கலாம், என்றார்.

தொட்டி தயாரிப்பது எப்படி

உரம் மரத்தொட்டி வேங்கை மரத்தில் தயார் செய்ய வேண்டும். தொட்டி சேதமடையாமல் இருக்க ‘மரைன் கோட்’ என்னும் பெயின்டை இருமுறை பூச வேண்டும். கழிவுகளைகொட்டும் முன்பு மரத்தொட்டிக்குள் வலை விரிக்கவேண்டும். இது காற்றுப்புகுவதற்கும், பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கவும் உதவும்.

தொட்டிக்குள் இருந்து வாயு வெளியேற இரு பைப் கூண்டுகள் பொருத்த வேண்டும். தொடர்ந்துவாயு வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுவது முற்றிலும் தவிர்க்கப்படும். கழிவுகளும் எளிதில் மக்கி உரமாகும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முத்துநகர் முதல் துாங்காநகர் வரை

துாத்துக்குடி மாநகராட்சியில் ‘ஏரோபிக்’ முறையில் மக்கும் கழிவுகளில் உரம் தயாரிக்கப்படுகிறது. இப்போதைய மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜ் முன்பு துாத்துக்குடியில் பணிபுரிந்தார். அங்குள்ள முறையை தான் இப்போது மதுரையில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

முதலில் சோதனை முயற்சியாக 25 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்திற்கு எதிர்புறம் உள்ள வார்டு அலுவலகத்தில் இரு மரத்தொட்டிகள் வைக்கப்பட்டன. தல்லாகுளம், கே.கே.நகர் பகுதியில் இருந்து தினமும் 200 வீடுகளில் இருந்து காய்கறி, உணவு கழிவுகளை சேகரித்து, அதை நறுக்கி கொட்டி
வருகின்றனர். நல்ல பலன் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் தான்மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் ‘ஏரோபிக்’ முறை அமலாகிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *