மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…

ஊட்டமேற்றிய தொழு உரங்களைத் தயாரித்து மானாவாரி நிலங்களில் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம்.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் கே.மோகன் கூறியது:

 • தருமபுரி மாவட்டத்தில் 60 சதவிகித செம்மண் உள்ளன.
 • இவ்வகை நிலங்களில் மணிச்சத்து பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகிறது.
 • இதை நிவர்த்தி செய்து, மணிச்சத்தை எளிதில் பயிருக்கு கிடைக்கச் செய்வதற்கும், மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற மணிச்சத்தை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி பயிர்களுக்கு இடுவது அவசியமாகும்.
 • இவ்வாறு இடப்படும் தொழு உரம் ஊட்டமேற்றிய தொழு உரமாகும்.
 • பாசன நீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு பெய்கின்ற மழைநீரை வீணாக்காமல் காப்பதன் மூலமும், ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலமும் விவசாயிகள் மானாவாரியில் அதிக மகசூல் பெறலாம்.
 • ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க நன்கு மட்கிய 300 கிலோ தொழு உரத்துடன் ஒரு ஏக்கருக்கு தேவையான மணிச்சந்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக நன்கு கலக்கி குவியலாக அமைக்க வேண்டும்.
 • இந்த குவியல் சிறிது மேடான மழைநீர் தேங்காத நிழலான இடத்தில் அமைக்க வேண்டும்.
 • தேவையான அளவு நீர் தெளித்து குவியலை ஈரமாக்கியவுடன் களிமண் அல்லது சாணம் கொண்டு நன்றாக பூசி மெழுக வேண்டும்.
 • குவித்த 15 நாள்கள் கழித்து கிளறிவிட்டு, ஈரப்பதம் குறைவாக இருந்தால் சிறிதுநீர் தெளித்து நன்கு மூடி வைக்க வேண்டும்.
 • 30 நாள்களுக்கு பிறகு, விதைப்பின் போது பரிந்துரை செய்யப்படும் தழை, சாம்பல் சத்து தரவல்ல உரங்களை கலந்து உழவு சாலில் இட வேண்டும்.
 • இப்படி தயாரிக்கப்பட்ட ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் பயிர்களுக்கு இடப்படும் மணிச்சத்து எளிதாகவும், முழுமையாகவும் பயிர்களுக்கு கிடைக்கிறது.
 • பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது.
 • வறட்சியைத் தாங்கி பயிர்கள் வளர்கிறது. திடமான மணிகள் கிடைக்க உதவுகிறது. மானாவாரி பயிர்களில் மகசூல் அதிகரிக்கிறது.
 • இத்தகைய பயன்கள் நிறைந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் விவசாயிகள் மானாவாரியில் அதிக மகசூல் பெறலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *