உர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகளுக்கு அந்தத்துறை அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர்.
உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, Naptha நாப்தா (பெட்ரோலியம் சார்ந்த நீர்ம எரிபொருள்)வில் இயங்கும் யூரியா உரத் தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
இதன் மூலம் யூரியாவின் உற்பத்திச் செலவு பல மடங்கு குறையும்.
இதற்கான கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செலவு குறைந்தால், மானியத்தின் அளவும் குறையும்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்ற, துரித நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
யூரியாவின் உற்பத்திச் செலவில் 80 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. நாப்தா மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, ரூ.28 ஆயிரம் செலவாகிறது. இயற்கை எரிவாயுவில் இயங்கும் தொழிற்சாலையில் டன்னுக்கு ரூ.8,500 மட்டுமே செலவாகும்.
கடந்த நிதியாண்டில் யூரியா மானியமாக ரூ. 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இயங்கி வரும் யூரியா உற்பத்தி அலகுகளில், புதிய விலைத் திட்டத்தை அமல்படுத்தவும், பரிசீலித்து வருகிறோம் என்று பதிலளித்துள்ளார் உரத்துறை மத்திய இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்