பெட்ரோல், டீசலை தொடர்ந்து, யூரியா மீதான விலை கட்டுப்பாட்டையும் கைவிட, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதுதொடர்பான வரைவு திட்டத்தை தயாரிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பெட்ரோல் மீதான அரசின் விலை கட்டுப்பாடு, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியிலேயே கைவிடப்பட்டது. கடந்த அக்டோபரில், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும், மத்திய அரசு கைவிட்டது. அதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல், டீசல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது மாற்றி வருகின்றன.
வங்கி கணக்கிற்கே பட்டுவாடா:
இதன் தொடர்ச்சியாக,சமையல் எரிவாயுக்கான மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே, நேரடியாக செலுத்தும் திட்டம் அறிமுகமாகி உள்ளது. டில்லி சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன், சமையல் எரிவாயு மீதான விலை கட்டுப்பாட்டையும், மத்திய அரசு கைவிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சமையல் எரிவாயு நுகர்வோர் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களுக்கான மானியமானது, ஒவ்வொருவருக்கும் அவர்கள் சிலிண்டர்கள் வாங்கும் முன்னரே, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் அனைவரும், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டதும், (தற்போது, 50 சதவீதம் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது), சமையல் எரிவாயு மீதான விலை கட்டுப்பாட்டையும், மத்திய அரசு கைவிடும். அதன்பின், எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளும்.
தாராளமாக்கப்படும்
இதன்தொடர்ச்சியாக, விவசாயிகளால் அதிகம் பயன்படுத்தப்படும், யூரியா உரத்தின் மீதான விலை கட்டுப்பாட்டையும் கைவிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, டீசல் விலை படிப்படியாக ஏற்றப்பட்டதைப் போல, யூரியாவின் விலையும், மூன்று ஆண்டுகளுக்கு படிப்படியாக உயர்த்தப்படும். அத்துடன், யூரியா இறக்குமதியும் தாராளமாக்கப்படும்.
மேலும், யூரியாவுக்காக அரசு வழங்கும் மானியமானது, ஆதார் எண் அடிப்படையில், விவசாயிகள் துவக்கியுள்ள வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். இதற்கு, நாடு முழுவதும் உள்ளவர்கள், வங்கிக் கணக்கு துவக்குவதற்காக, பிரதமர் ஏற்கனவே அறிமுகப்படுத்திய, ‘ஜன் தன்’ திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.
சுங்கவரி:
யூரியாவை தற்போது,எம்.எம்.டி.சி., – எஸ்.டி.சி., மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் போன்ற, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே இறக்குமதி செய்கின்றன. மேலும், யூரியா இறக்குமதிக்கு, 5 சதவீதம் சுங்க வரியும் விதிக்கப்படுகிறது.
யூரியா இறக்குமதி தாராளமயமாக்கப்படும் போது, சுங்கவரி ரத்து செய்யப்படும்.
அதனால், அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு நிறுவனங்களும், யூரியாவை இறக்குமதி செய்யும். அப்போது, போட்டி உருவாகி விலை குறையும்; மத்திய அரசின் மானியச் சுமையும் குறையும்.
ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு :
- யூரியா மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிடுவது தொடர்பான திட்டம், அடுத்த நிதியாண்டிற்கான (2015 – 16) மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்.
- தற்போது, ஒரு டன் யூரியாவின் அதிகபட்ச சில்லரை விலை, 5,360 ரூபாயாக உள்ளது; 50 கிலோ மூட்டை விலை, 268 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விலை கட்டுப்பாட்டை கைவிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற விலையை அடைய, ஆண்டுக்கு, 20 சதவீதம் என்ற அளவில் (கரீப் பருவத்திற்கு முன், 10 சதவீதம், ராபி பருவத்திற்கு முன், 10 சதவீதம்) விலை உயர்த்தப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு விலை உயர்த்தப்படும் போது, 60 சதவீத விலை உயர்வு எட்டப்படும். அப்போது, ஒரு டன் யூரியாவின் அதிகபட்ச சில்லரை விலை, 8,500 ரூபாயாகவும், 50 கிலோ மூட்டை விலை, 425 ரூபாயாகவும் இருக்கும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்