கோவை மதுக்கரையில், பசுமை நண்பர்கள் குழுவை நடத்துபவரும், ஏ.சி.சி., சிமென்ட் தொழிற்சாலை உதவி மேலாளராகவும் உள்ள டேனியல் சுந்தரராஜ் கூறுகிறார் :
எங்கள் வளாகத்தின் சுற்றுச்சூழலும், தொழிற்சாலை அமைந்திருக்கும் மதுக்கரை கிராமத்தின் அத்தனை பகுதிகளும், சுத்தமாக, குப்பை அற்ற பகுதிகளாக மாறி உள்ளன. இதற்கு, ஆறு ஆண்டுகளாக நாங்கள் செயல்படுத்தி வரும், பசுமை திட்டங்களே காரணம்.
முதலில், இதற்கான பணிகளுக்கு, பெண்களையே தேர்வு செய்தோம். ஏனெனில், பெண்கள் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்து கொள்வதில், இயல்பாகவே அக்கறை உள்ளவர்கள். துாய்மை பணி செயல்பாடு குறித்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின், முழுமையாக திட்டமிட்டு, 42 பெண்களை தேர்வு செய்தோம்.
முதலில் அவர்களுக்கு, பாதுகாப்பான சீருடை அனைத்தையும் கொடுத்தோம். நல்ல ஊதியம், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை, தேவைப்படுவோருக்கு சிறப்பு சிகிச்சைக்கான வசதி களையும் செய்து தருகிறோம்.
இவர்களுக்கு தனித்தனியாக, நான்கு டிரம்கள் இணைத்த ஒரு கைவண்டி தரப்பட்டுள்ளது; அத்துடன் நான்கு பைகளும் தருகிறோம். காலை, 6:00 மணிக்கு வளாகத்துக்குள்ளும், ஊருக்குள்ளும் ஒரு வண்டியை, இருவர் தள்ளியபடி கிளம்பி விடுவர்.
ஒவ்வொரு வீட்டிலும் தரும் குப்பையை வாங்கி, மக்கும், மக்காத குப்பை, பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு சாமான்கள், துணிகள், பிளாஸ்டிக் கவர்கள் என, தரவாரியாக பிரித்து, கொட்டிக் கொள்வர்.மக்கும் குப்பையை, அதற்கென அமைக்கப்பட்ட, 4 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள உயரமான தொட்டிகளில் கொட்டி, வெல்லக் கரைசல் கலந்து, 48 நாட்கள் ஊற வைப்பர்;
இந்த கலவையை அடிக்கடி புரட்டிப் போட வேண்டும். 48 நாட்களுக்கு பின் வெளியே எடுக்கும்போது, ‘பயோ கம்போஸ்டு’ உரமாக இருக்கும்.இதனுடன் சாணம் கலந்து, மண் புழுக்களை போட்டு விடுவர். அருமையான மண்புழு உரம் தயாராகி விடுகிறது.
இந்த உரங்களை, பாக்கெட்டுகளாக தயார் செய்து, மதுக்கரை பஞ்சாயத்து சார்பில், விளை நிலங்களுக்கு விற்கப்படுகின்றன.வேண்டாம் என, துாக்கி எறியும் குப்பையை, அருமையான இயற்கை மண் புழு உரமாக மாற்றி, இயற்கை விவசாயத்தை பெருக்குவதுடன், பணமாக்கி, மக்களுக்கே செலவு செய்யும் மாயாஜாலம் நடத்துவது, பெண்களால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
இதுதவிர, ஆண்டிற்கு, 500 மரங்கள் வரை, இந்த பெண்கள் நட்டு, அதை பராமரித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில், மக்கும் குப்பைகளை, அவரவர் தங்கள் வீட்டிலேயே உரமாக்கி, வீட்டுத் தோட்டம் போட்டு, இயற்கை விவசாய முறையில் காய்கறிகள் பயிரிட, பயிற்சிகள் தர உள்ளோம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்