வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்

கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.

இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள்.

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

Courtesy: Dinamani
Courtesy: Dinamani
  • நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.
  • வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
  • இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
  • இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும்.
  • இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.

பூங்கா கழிவுகள்:

  • மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும்.
  • அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
  • எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.

ஆக்சிஜன் அவசியம்:

  • கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
  • எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம்.
  • 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.

ஈரப்பதம் தேவை:

  • கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.
  • இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும்.
  • முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும்.
  • முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
  • இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.
  • இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.
  • அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

8 thoughts on “வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்

  1. raghu says:

    Can this be done using tubs in the terrace? Can this be exposed to sun light or should it only be under shadow?
    Thanks for the wonderful service rendered through this website.
    Regards
    Raghu

  2. sivalingam says:

    “Pasumai tamizhagam” this useful application tag-i twitter; skyfe; nimbuss; face book all social network-mmm invite pannunga…. Love, love nu life-i waste aakum people-ku agriculture GOD aaga nilaikum…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *