“”வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும்,” என, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ஜெயபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பயன்படுத்தும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் வழங்குகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு யூரியா இன்றியமையாத உரம். தழைச்சத்து வழங்கும் பணியை யூரியா செய்து, பயிர் செழிப்பாக வளர உதவுகிறது. ஒரு மூடை யூரியா விலை ரூ. 270 . மத்திய அரசு மானியம் வழங்காவிட்டால் அதன் விலை ரூ. 1, 150 ஆக இருக்கும்.
எனவே யூரியா பயன்பாட்டை மத்திய அரசு தீவிரமாக கவனிக்கத் துவங்கியது. வேளாண் தவிர இதர விஷயங்களுக்கும் யூரியா அதிகமாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, அதை தடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டனர். அதன் விளைவாக வேப்ப எண்ணெய் கலந்த யூரியா உற்பத்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை விவசாயம் தவிர பிற விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது.
மூடைக்கு ரூ. 13 மட்டுமே அதிகமாகும். யூரியா உற்பத்தி செய்யும் கம்பெனிகள், தங்களின் உற்பத்தியில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவை கண்டிப்பாக உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த யூரியாவை வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். வாசனை மற்றும் சற்று பெரியதாக இருப்பது காரணமாக கூறப்படுகிறது.
மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கே.ஆர்.ஜெயப்பாண்டியன் கூறுகையில்,”” வேப்ப எண்ணெய் கலந்த யூரியா கடந்த 5 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. யூரியாவை விவசாயத்திற்கு தவிர பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு மூடை யூரியாவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்த பரிந்துரை செய்வோம். இப்போது வேப்ப எண்ணெய் கலந்து விட்டதால் அந்த 5 கிலோ தேவையில்லை. 10 முதல் 15 சதவீத தழைச்சத்து கூடுதலாக கிடைக்கும். தண்ணீரில் வேகமாக கரையாமல், நின்று மெதுவாக பலன் தரும். செலவு குறைகிறது. எனவே வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவை தாரளமாக பயன்படுத்தலாம். இதனால் பயிர்களில் மகசூல் கூடுதலாக கிடைக்கும்,” என்றார்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்